காதல் கரை என்றழைக்கப்படும் சினேகதீரம் கடற்கரைக்கு ஓர் பயணம்!

சினேகதீரம் கடற்கரை
சினேகதீரம் கடற்கரை

திருச்சூரில் உள்ள அரபிக்கடலோரம் அமைந்துள்ள இந்த சினேகதீரம் கடற்கரை கோடைக்காலங்களில் சென்று வருவதற்கு மிகவும் ஏற்றது. இதனை ‘காதல் கரை’ என்றும் அழைப்பார்கள். இதற்கு காரணம் சினேகதீரம் கடற்கரையின் இசையென ஒலிக்கும் அந்த அலைகளின் சத்தம்.

மேலும் அலைகள் கவிதையென மெதுவாக கரையை தொடும் விதம் பார்ப்பவர்களை காதல் வயப்பட செய்துவிடும். இவைத்தான் காதல் கரை என்று பெயர் வர காரணமாகிறது. மேலும் இங்கு சூர்ய உதயம் மற்றும் அஸ்தமனம் தனி அழகுடன் இருக்கும். இந்த கடற்கரை திருச்சூர் தாலுக்காவிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குழந்தைகள் விளையாடவும், குடும்பங்கள் நிம்மதியான மற்றும் அழகான நாட்களைக் கழிக்கவும் இந்த கடற்கரைக்குச் செல்லலாம்.

வெளிநாட்டு சுற்றுலாவாசிகளையும் அதிகம் கவர்ந்த கடற்கரை இது. இங்கு சுற்றுலாவாசிகள் ஒரு நாள் பயணமாக வந்து மணலில் அமர்ந்து புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது என உற்சாகமாக பொழுதைக் கழிக்கிறார்கள். மேலும் இங்கு பனை மரங்களும் நிறைய இருக்கும். ஆகையால் சூர்ய அஸ்தமனத்தின்போது பனை மரம் மற்றும் கடலுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.

சினேகதீரம் கடற்கரை
சினேகதீரம் கடற்கரை

இந்த கடற்கரைக்கு அருகே ஒரு பூங்காவும் உள்ளது. கடற்கரை மணலை பிடிக்காதவர்கள், இங்கு சென்று கடல் காற்றை அனுபவிக்கலாம். அதேபோல் இங்கிருந்தே சூர்ய அஸ்தமனத்தையும் பார்த்து ரசிக்கலாம். இங்கு ஏராளமான செடிகள் மற்றும் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள அக்வாரியத்தில் மீன்கள், சுறா மீன்கள், கடல் ஆமைகள், பவளப்பாறைகள் போன்ற கடல் உயிரினங்களையும் காணலாம். பூங்காவிற்குள் செல்ல அனுமதிக் கட்டணம் குழந்தைகளுக்கு ரூபாய் 5 மற்றும் பெரியவர்களுக்கு ரூபாய் 10 ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த கடற்கரையில் மட்டும்தான் குழந்தைகளுக்கென தனியாக பூங்கா கட்டப்பட்டது. மேலும் இந்த கடற்கரைக்கு ஒரு மணி நேர அளவு தொலைவில் சக்தான் தம்புரம் பேலஸ், ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், திருப்ராயர் இராமசாமி கோவில், ஆகியவையும் உள்ளன.

சினேகதீரம் கடற்கரை
சினேகதீரம் கடற்கரை

இந்த சினேகதீரம் கடற்கரையில் பாராகிளைடிங் (Paragliding – வான்குடை உதவியுடன் பறக்கும் விளையாட்டு), பாராசெய்லிங் (Parasailing- இதுவும் ஒரு வகையான நீர் விளையாட்டுத்தான்), நீச்சல், சன்பாத்திங் (Sunbathing) ஆகியவை விளையாடலாம். இந்த கடற்கரைக்கு அருகில் ‘நாலுகேட்டு’ என்ற உணவகமும் உள்ளது. இங்கு அனைத்து விதமான கடல் உணவு வகைகளும் கிடைக்கும். மேலும் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளும் இங்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு உடனடி தீர்வு!
சினேகதீரம் கடற்கரை

இந்த சினேகதீரம் கடற்கரை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால் கேரளா சுற்றுலா மேம்பாட்டு துறை இதற்கு விருது வழங்கியுள்ளது. மேலும் இது கேரளாவில் மிகவும் அழகுவாய்ந்த கடற்கரை என்றும் கேரளாவில் கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய ஒரு இடம் என்றும் அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை 2010ம் ஆண்டு அறிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com