பயணம் செய்யத் தூண்டும் இந்தியாவின் ஸ்கை வாக் (Sky Walk) பாலங்கள்!
கண்ணாடி பாலங்கள் மீது நடக்க நாம் வியட்நாம், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியாவிலேயே நிறைய கண்ணாடி பாலங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்.
விசாகப்பட்டினத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நாட்டின் மிக நீண்ட உயரமான கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் என்றும், சுற்றுலா பயணிகள் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாலத்தில் இருந்து வங்கக்கடலை கண்டு ரசிக்கலாம்.
கடலும் தொடுவானமும் சந்திக்கும் இடம் வரை இயற்கையை ரம்யமாக ரசிக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்லும் பொழுது பறப்பது போன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தை ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் பெற முடியும். கைலாச கிரியில் இதன் அருகிலேயே 55 அடி உயர திரிசூலம் 5.5 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் கைலாசகிரி மலை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும்.
டைட்டானிக் வியூ பாயிண்ட்:
கைலாசகிரி மலைப்பகுதியை நாட்டின் டைட்டானிக் வியூ பாயிண்ட் என்று அழைப்பது வழக்கம். இங்கிருந்து இயற்கையின் அழகை ரசிப்பதற்கு மற்றொரு மணி மகுடமான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் ஒரு பிரமிப்பான மலைப்பகுதியில் இருந்து மற்றொரு இயற்கை அதிசயமான வங்கக்கடலை காணும் அனுபவத்தை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதுடன், வாழ்வில் என்றுமே அந்த நினைவுகளை மறக்கமாட்டார்கள். இந்த கண்ணாடி நடைபாதை பாலம் கடலோர சுற்றுலாவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே கைலாசகிரியில் ஜிப் லைன், ஸ்கை சைக்கிள் மற்றும் ரோப் கோர்ஸ் போன்ற சாகச விளையாட்டுகள் உள்ளன. இது பார்வையாளர்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது. புதிய கண்ணாடி பாலமும் சேர்ந்து கைலாச கிரியை இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இதனை மாற்றும்.
வாகமனில் உள்ள கண்ணாடி பாலம்:
வாகமனில் உள்ள கண்ணாடி பாலம் கேரளாவில் உள்ள மணிமாலா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது சுமார் 125 அடி நீளமும், ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து அடுக்கு கண்ணாடியால் ஆனது. பாதுகாப்புக்காக 35 டன் எஃகு கட்டுமானத்தின் கீழ் தாங்குகிறது. இது இடுக்கி மாவட்டத்தின் மிக நீளமான கான்டிலீவர் பாலமாகவும் உள்ளது.
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம்:
விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் நெடுஞ்சாலை துறை சார்பில் 37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து கடலின் அழகினைக் கண்டுகளிக்க ஏராளமான டூரிஸ்டுகள் வந்து குவிக்கின்றனர். இது திறக்கப்பட்டு எட்டு மாதங்களில் ஓரிடத்தில் மட்டும் திடீரென விரிசல் விழுந்துள்ளதால் மாற்று கண்ணாடி வரவழைக்கப்பட்டு பழுது பார்க்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் விரைவில் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்பட்டு மக்களுக்கு திறந்து விடப்படும் என்று மாவட்ட நிர்வாகத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கைலாசகிரியிலுள்ள இந்தியாவின் மிக நீளமான பாலம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இது விசாகப்பட்டினத்தின் கைலாச கிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் சுமார் 50 மீட்டர் நீளம் கொண்டு எந்த ஆதரவும் இல்லாமல் பாறையில் இருந்து வெளியே நீட்டி கொண்டிருப்பதுபோல கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இங்கு 15 நிமிடங்கள் நடக்க ரூபாய் 300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் கண்ணாடிகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் புயல் காற்றையும், சூறாவளி காற்றையும் தாங்க கூடிய வகையில் உள்ளது. தினமும் இப்பாலம் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்காக திறந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஸ்கைவாக்' என்றழைக்கப்படும் இந்த கண்ணாடி நடைபாலம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை அளிக்கிறது. பொறியியல் அற்புதமாக கருதப்படும் இந்த பாலம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பிரமிக்க வைக்கும் அழகை மட்டுமல்லாது வங்காள விரிகுடா மற்றும் விசாகப்பட்டின நகரத்தின் ரம்யமான காட்சிகளையும் பார்வையாளர்களால் கண்டு களிக்க முடியும்.
எந்த பிடிமானமும் இன்றி அந்தரத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தரும் இந்த நடைபாலம், சுற்றுலா பயணிகளுக்கு அங்கு நின்றுகொண்டு கீழே பார்க்கும் பொழுது கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளையும், மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகளையும் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
கண்ணாடி பாலத்தில் நின்று கொண்டு பார்க்கும் பொழுது நிச்சயம் காற்றில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது தரையிலிருந்து 862 அடி அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் உள்ள இந்த பாலத்தின் மேலிருந்து கீழே பார்க்கும் பொழுது அங்குள்ள பள்ளத்தாக்குகளும், பசுமை நிறைந்த காட்சிகளும் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். இந்தப் பாலத்தில் சுற்றுலா பயணிகளுடைய கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 20 - 40 பேர் கொண்ட சிறிய குழுக்களுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளில் அவை கண்ணாடியில் பிரதிபலித்து ஒரு மாயாஜால அனுபவத்தை ஏற்படுத்தும். இது சாகச விரும்பிகளுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் ஒரு பரவசமான அனுபவத்தை தரும் என்பதில் வியப்பில்லை. இந்த கண்ணாடி பாலம் சுற்றுலா வரும் மக்களால் அதிக வருமானத்தை அரசுக்கு ஈட்டி தரும்.
கேரளாவின் வாகமனில் உள்ள 125 அடி நீள கண்ணாடி பாலம் நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமையை பெற்று வந்தது. அதை மிஞ்சும் வகையில் கைலாசகிரி மலை, விசாகப்பட்டினத்தில் 180 அடி நீள கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை நடந்து செல்ல முடியும் என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு பேட்சில் 40 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

