தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல சிறந்த சில மலை வாசஸ்தலங்கள்!

வாசஸ்தலங்கள்...
வாசஸ்தலங்கள்...

சின்ன பட்ஜெட்டில் அதுவும் மனநிறைவா ஒரு டூர் போகணும்னா இந்த மாதிரி சிறந்த சில மலை வாசஸ்தலங்களுக்கு சென்று வரலாம்.

1. மேகமலை

மேகமலை
மேகமலை

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் நகரத்திற்கு அருகில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் பசுமையான காடுகளால் சூழப்பட்டது. இது நான்கைந்து மலை சிகரங்களுக்கு நடுவே அமைந்த பள்ளத்தாக்காகும். ஏலக்காய், தேயிலை, காப்பி தோட்டங்கள், அழகான ஏரி, வனவிலங்கு சரணாலயம் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த  இடம் சிறந்த மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.

2. ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை
ஜவ்வாது மலை

கிழக்கு தொடர்ச்சி மலையில் கொல்லிமலை சேர்வராயன் மலை கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் இது. இம் மலைத்தொடரில் பீமன் அருவியும், காவலூரில் ஆசியாவின் மிகப்பெரிய வானாய்வகமும் உள்ளது. இம்மலையிலிருந்து செய்யாறு, நாக நதி போன்ற ஆறுகள் உற்பத்தி ஆகின்றன. பர்வதமலை சிவன் கோவிலும், படவேடு அருகில் உள்ள கோட்டை வரதர் கோவிலும் சிறப்பு வாய்ந்தது.

3. பச்சை மலை

பச்சை மலை
பச்சை மலை

சின்ன பட்ஜெட்ல மன நிறைவா ஒரு டூர் போகணும்னா இந்த பச்சை மலைக்கு போகலாம். தமிழ்நாட்டில் உள்ள கொல்லிமலை, ஜவ்வாது மலை போன்ற கிழக்கு தொடர்ச்சி மலைகளுள் இதுவும் ஒன்று. இங்கு கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் உற்பத்தி ஆகின்றன. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2400 அடி உயரத்தில் உள்ளது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம். மங்களம் அருவி, எருமைப்பள்ளி அருவி, கோரையாறு அருவி என பல அருவிகள் உள்ளன. 

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
வாசஸ்தலங்கள்...

4. கொல்லிமலை

கொல்லிமலை
கொல்லிமலை

மிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு சிறிய மலைத்தொடர் ஆகும். இதற்கு வேட்டைக்காரன் மலை என்ற பெயரும் உண்டு. இம்மலையில் நிறைய மூலிகைகள் காணப்படுவதால் மூலிகைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. பழந்தமிழ் நூல்களில் கொல்லிமலையை பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இங்குள்ள கொல்லிப்பாவை குடைவரைக் கோயில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக சித்தர்களால் சொல்லப்படுகிறது.

இங்குள்ள ஆகாய கங்கை அருவி, கொல்லிப்பாவை கோவில், மிகவும் பழமையான முருகன் கோவில் ஒன்றும், வாசலூர்பட்டி படகு துறையும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

5. பன்றிமலை

பன்றிமலை
பன்றிமலை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பன்றி மலை இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலா தலமாகும். சாலையே தெரியாத அளவுக்கு முற்றிலும் பனிமூட்டமே காணப்படும். மேகங்கள் நம்மை தொட்டுச் செல்வதை நன்றாக உணர முடியும். அழகிய காடுகள், காபி தோட்டங்கள், மிளகு தோட்டம், சிறு சிறு ஓடைகள்,  நீர்வீழ்ச்சிகள் என ரம்யமாக இருக்கும். இயற்கை எழில் கொஞ்சம் இந்த இடம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கும் பசுமை, இதமான குளிர், லேசான சாரல் என மிக அழகான இடம்.

6. மாஞ்சோலை

மாஞ்சோலை
மாஞ்சோலை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பசுமை நிறைந்த மாஞ்சோலை கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணை கட்டிற்கு மேலே உள்ள அழகிய கோடை வாசஸ்தலமாகும். தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள அழகிய கிராமம். மணிமுத்தாறு அருவி, சிங்கம் பட்டி ஜமீன் அரண்மனை, வானபெட்டி அம்மன் கோவில் ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சிறந்த சுற்றுலா இடங்கள் ஆகும். ஊட்டி கொடைக்கானல் போன்று இந்த மலைப்பிரதேசத்தை எளிதில்  பார்க்க முடியாது. இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். வனத்துறையின் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com