லக்ஷ்மன் சித் கோவில் டேராடூனில் உள்ள மிகவும் பழமையான இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலாகும். இது டேராடூனிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஹரித்வார் ரிஷிகேஷ் சாலையில் அடர்ந்த காடுகளுக்கு இடையே அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
தசரத மன்னனின் மகன்களான ராமர் லக்ஷ்மணன் அசுரனான ராவணனை கொன்ற பிறகு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷங்களை போக்க லட்சுமணன் இந்த இடத்தில் தவம் செய்ததாகவும் எனவே இந்த இடத்திற்கு லக்ஷ்மன் சித்த பீடம் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு புராணத்தின்படி ராமரின் சிறந்த பக்தரும் முனிவருமான துறவி சுவாமி லக்ஷ்மன் சித் இந்த இடத்தில் தவம் செய்ததாகவும் பிறகு இந்த இடத்திலேயே அந்த துறவி சமாதி அடைந்ததாகவும் நம்பப்படுகிறது.
இந்த சித்த பீடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் லட்சுமணன் அம்பெய்தி தண்ணீரை வரவழைத்ததாக கூறப்படுகிறது. இங்கு அழகான சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நீண்ட நெடுங்காலமாக இங்கு "அகண்ட துனா" எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கிறது. வருடா வருடம் இங்குள்ள பழங்குடியினரின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை லக்ஷ்மன் சித் ஃபேர் என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
இங்கு ராம நவமி அன்று பக்தி பாடல்கள், சமய சொற்பொழிவுகள் என மிக விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் டேராடூன். விமான நிலையம் 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையமாகும். செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை லக்ஷ்மன் சித் கோவிலுக்கு செல்ல சிறந்த நேரமாகும். காட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் இங்கு செல்வது சிரமமாக இருக்கும்.