
விடியல் பயணம் போயிருப்பீங்க... விடியல் நகரம் போயிருக்கீங்களா?
விடியல் நகரம் எது தெரியுமா? அந்நகரம் எங்குள்ளது? அதன் தனித்தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தரிசிப்போம் வாங்க...
விடியல் நகரம் என்று மிகவும் அழகாக அழைக்கப்பட்டு வரும் நகரம் ஆரோவில் நகரம் ஆகும். இது புதுச்சேரி அருகில் அமைதி தவழ அமைந்திருக்கிறது.
பிரெஞ்சு மொழியில் 'அரோர்' என்றால் விடியல், 'வில்லே' என்றால் நகரம்.
ஆரோவில் நகரம் யாருக்கும் சொந்தமானது இல்லை. ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானது.
1988 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் ஆரோவில் அறக்கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றி அந்நகரத்தை ஒரு சட்டபூர்வ அமைப்பாக மாற்றியது.
இன்று, ஆரோவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள், சமையற்காரர்கள் என்று சுமார் 2000ற்கும் மேற்பட்டவர்களின் புகழிடமாக மலர்ந்து மணம் பரப்பி வருகிறது.
ஆரோவில்... முடிவில்லா கல்வி, நிலையான முன்னேற்றம், ஒரு போதும் வயதாகாத இளைஞர்களுக்கான இடமாக இருந்து வருகிறது. ஆரோவில் சாசனமும் இதை வலியுறுத்துகிறது.
பெர்லின் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் அனுபமா குண்டூ ஆரோவில்லின் நகர்ப்புற பார்வையை மேம்படுத்தியிருக்கிறார்.
இது முற்றிலும் தனித்துவமான ஒரு அழகான ரம்மியமான நகரம் ஆகும். வழக்கத்திற்கு மாறான தோற்றமுடைய கட்டடங்கள், பண்ணைகள், தோட்ட உணவகங்கள், ஒற்றை மாடி வீடுகள் என அமைந்துள்ளது.
ஸ்ரீ அரவிந்தரின் கனவு
ஸ்ரீ அரவிந்தருக்கு நீண்ட நாள் கனவு, மனிதகுல ஒற்றுமைக்கான, கலாச்சார ஒத்துழைப்புக்கான கனவாக இருந்தது. ஒரு உலகளாவிய நகரம் அமைப்பதே, ஸ்ரீ அரவிந்தரின் நோக்கமாக இருந்தது.
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அரவிந்தரின் இறப்பிற்குப் பின் அவரைப் புரிந்து கொண்ட ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் கனவை நனவாக்க மேற்கொண்ட பணியே ஆரோவில்லாக, ஒரு தாமரையைப் போல மலர்ந்து நின்றது.
1968 ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 ஆம் நாளில், இந்தியா உட்பட 124 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5000 திற்கும் மேற்பட்ட மக்கள் ஆலமரத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஆம்பி தியேட்டரில் கூடியிருந்தனர். ஸ்ரீ அன்னை ஆரோவில் சாசனத்தை வாசித்தார். எல்லோரும் பலத்த கரவோசையுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
உலகளாவிய அங்கீகாரம்
ஆரோவில் நகரம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித ஒற்றுமைக்கு, பன்முகத்தன்மைக்கு ஒரு புதிய விடியலை காணும் பொருட்டு அமைந்ததே ஆரோவில். உலகமே ஏற்றுக் கொண்டு, செல்லமாக 'விடியல் நகரம்' என்று அழைத்து மகிழ்ந்து வருகிறது.
இங்கு பெரும்பாலும் இந்தியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள் வசித்து வருகிறார்கள்.
தனித்துவமான வாழ்க்கைமுறை
இங்கு வசிப்பவர்கள் ஒரு அடிப்படை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வாதாரத்திற்கு கூட்டாக பங்களிக்கிறார்கள். பணமில்லா பொருளாதாரத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். எந்த ஒரு தனி நபரும் எதையும் சொந்தமாக கருதவில்லை. அரசியல் மற்றும் மதம், சாதி பின்பற்றுவதில்லை. தியானம், ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள். இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
மாத்ரி மந்திர்
'ஆரோ வில்லின் ஆன்மா' என்று கருதப்படுகிறது மாத்ரி மந்திர். இது 37 ஆண்டுகள் ஆன, ஒரு விரிவான தங்க முலாம் பூசப்பட்ட கோளமாகும். இதில் 1415 பெரிய தங்க வட்டுக்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. 12 இதழ்கள் சூழ்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு முழுமையான மலர்ந்த தாமரைப் போலவும், பெரிய தங்கப் பந்துப் போலவும் காட்சியளிக்கிறது. ஒரு அறையில் வெள்ளை பளிங்கு சுவர்களில் மென்மையான நீரோடைகளுடன் நீர் பாய்கிறது. அனைத்து பக்கங்களிலும் உள்ள சுழல் சரிவுகள் அமைதியான தியான மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இங்குள்ள குவிமாடத்தின் உச்சியிலிருந்து நுழையும் சூரியக் கதிர்கள் கீழே இறங்கி, பளிங்கு குளத்தில் உள்ள படிகக்கோளம் மீது பட்டு ஒளி பிரதிபலிக்கிறது. இந்தப் படிகக் கோளம் உலகின் மிகப் பெரிய ஒளியியல் ரீதியான கண்ணாடிக் கோளமாக சிறந்து விளங்குகிறது.