
ஹலோ கேர்ள்ஸ், இந்த உலகத்தில் ஆண்கள் தொந்தரவு இல்லாமல் பெண்கள் மட்டும் ரூல் பண்ணக்கூடிய ஒரு இடம் இருந்தால் எப்படி இருக்கும்? “அட! இதெல்லாம் கனவுலதான் நடக்கும்” என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால், பெண்களுக்கு என்று பிரத்யேகமான ஒரு தீவு நிஜமாகவே உள்ளது. வாருங்கள் அந்த தீவைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பின்லாந்தின் ராஸ்போரி கடற்கரையில் அமைந்துள்ளது 'சூப்பர் ஷி' (SuperShe) தீவு. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 8.4 ஏக்கர் நிலப்பரப்புடைய 'சூப்பர் ஷி' தீவை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோத் என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார்.
குடும்பம் மற்றும் வேலை என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட பெண்கள் தங்களுக்கான நேரத்தைச் செலவிடுவதற்காகவே இந்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது.
அமைதியான நீர்நிலைகளுக்கு மத்தியில் பெண்கள் சில நாட்கள் தனியாக இருக்க, ஒரு பிரத்யேகமான சுற்றுலா விடுதியும் இங்கு செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த விடுதியானது, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள், நீச்சல், படகு சவாரி எனப் பெண்களுக்குத் தேவையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அமைதி, ஓய்வு, புத்துணர்ச்சியை விரும்பும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது விளங்குகிறது. பசுமையான காடுகள், சோலைகள், பாறைகள், தெளிவான நீர், கடற்கரைகள் என இயற்கை எழில் நிறைந்த சூப்பர்ஷி தீவு பெண்களுக்கு மன அமைதியைத் தரவல்லது.
கூடுதலாக, இங்கு அமைந்துள்ள ஆடம்பரமான தங்குமிடங்கள், ஸ்டைலான வில்லாக்கள் மற்றும் அழகான குடிசைகள் போன்றவை இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த தீவு, ஆரோக்கியம், உடல் மற்றும் மன அமைதி, கற்றலுக்கு முக்கியத்துவம் தருகிறது. அதனடிப்படையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, சத்து நிறைந்த உணவு முதல் ட்ரெக்கிங், யோகா, நடைப்பயிற்சி, நீச்சல், படகு சவாரி வரை பல்வேறு ஆரோக்கிய நடவடிக்கைகளை வழங்குகிறது. அதோடு, ஸ்பா, மசாஜ், ஃபேஷியல் என உடல் மற்றும் மன அமைதியை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கிறது. வல்லுநர்களால் நடத்தப்படும் வொர்க்ஷாப்கள் , கருத்தரங்குகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வுகள் என சுற்றுலாப் பயணிகளின் கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவது இந்த தீவின் சிறப்பம்சமாக உள்ளது.
கடைசியாக, சூப்பர்ஷீ தீவானது பெண்கள் தங்கள் நட்பு வட்டாரத்துடன் விரும்பியதை செய்யவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளுவும், தங்களுக்காக நேரத்தைச் செலவிடவும் ஒரு சிறந்த இடமாகும், அப்புறம் என்ன கேர்ள்ஸ், கிளம்பலாமா..?