பைரோதான் தீவு - ஆழமில்லாக் கடலில் அழகாய்த் தெரியும் உயிரினங்கள்! போய் பார்ப்போமா?

jamnagar pirotan island
jamnagar pirotan island
Published on

குஜராத் மாநிலத்திலுள்ள ஜாம் நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடல் தேசியப் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அரேபியக் கடலில் பைரோதான் தீவு (Pirotan Island) இருக்கிறது. கடல் தேசியப் பூங்காவில் இருக்கும் 42 தீவுகளில், பார்வையாளர்கள் உள்ளே நுழைந்து ஆராய அனுமதிக்கப்பட்ட ஒரேத் தீவு பைரோடன் தீவு மட்டுமே. பேடி துறைமுகக் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல் (22 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. சதுப்பு நிலங்கள் மற்றும் குறைந்த அலை கடற்கரைகளைக் கொண்டுள்ள இத்தீவு 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த தீவு அதன் பெயரை பைரோதான் பதானில் இருந்து பெற்றது. இது பேடி பந்தரின் இடத்தில் இருந்த பண்டைய நகரமாகும். 1867 ஆம் ஆண்டில் தீவின் வடக்கு முனையில் ஒரு கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. அதன் பிறகு, 1898 ஆம் ஆண்டில் இது 21 மீட்டர் கொத்து கலங்கரை விளக்கத்துடன் மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1955 முதல் 1957 ஆம் ஆண்டில் 24 மீட்டர் (79 அடி) உயரத்தில் கலங்கரை விளக்கம் கோபுரத்துடன் மாற்றப்பட்டது.

இந்தக் கலங்கரை விளக்கம் பணிகளுக்கான சில தொழிலாளர்களைத் தவிர, மக்கள் எவரும் இங்கு வசிக்கவில்லை. இத்தீவில், புனித குவாஜா கைசர் ஆர்.ஏ. ஆலயத்தில் முஜாவர், குவாஜா கிஜெர் இரகமத்துல்லா ஹைலாயின் புனித ஆலயம் போன்றவை அமைந்துள்ளன.

இத்தீவில், பல்வேறு வகையான நண்டுகள், நெப்டியூன், ஓநாய், இராஜ நண்டு, கடற்குதிரை, கணவாய், கடற்சாமந்தி, எண்காலி, கடல் முள்ளெலி, கடல் தேள், கடல் பாம்புகள், கடல் பறவைகள், கூழைக்கடா, கடல் புறா, நண்டு தின்னி என்று சில இனங்கள் மட்டுமே இருக்கின்றன.

இத்தீவு பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காப் பகுதியில் இருப்பதால், இத்தீவினைப் பார்வையிடச் சில அனுமதிகள் தேவையாக இருக்கின்றன. இந்திய நாட்டினருக்கு, உள்ளூர் வனத்துறை, சுங்கத் துறை மற்றும் துறைமுகத் துறையின் அனுமதி பெற வேண்டும். வெளிநாட்டினருக்குக் கூடுதலாகக் காவல்துறை அனுமதி தேவைப்படுகிறது. மேலும், இத்தீவுக்குச் செல்ல வழக்கமான படகு சேவை எதுவுமில்லை. துறைமுகத்திலிருந்து படகுகளை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் படகுகள் தீவை அடைய சுமார் 1.5 மணி நேரம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
அந்தமான் நிக்கோபார் தீவுகள்… வியக்க வைக்கும் சுற்றுலாத்தலம் பற்றி தெரியுமா?
jamnagar pirotan island

இத்தீவுக்குச் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் அதிக அலைகள் இருக்கும் காலை வேலையில் சென்று தீவினைப் பார்வையிட்டு, அதிக அலைகளிருக்கும் போதே மாலைக்குள் திரும்பிவிட வேண்டும். இத்தீவுக்குச் சென்று வருபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 300 எனும் அளவிலேயே இருக்கிறது. குளிர்காலத்தின் வார இறுதி நாட்களில் 400 முதல் 500 எனும் எண்ணிக்கையில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இப்போதைய கலிஃபோர்னியா சாம்பல் தீவு (Ash Island) அப்போதைய பாதாள லோகம்! நம்புங்க மக்களே!
jamnagar pirotan island

இங்குள்ள கடற்பகுதி குறைந்த அலைகளைக் கொண்டிருப்பதால், குறைந்த அலைகளில் மணிக்கணக்கில் நடந்து, குறைந்த நீரில் இருந்து வெளிப்படும் கண்கவர் கடல் வாழ் உயிரினங்களைக் கவனிக்கலாம். ஜெல்லி மீன்கள் போன்ற சில உயிரினங்களைத் தொடாமல் இருப்பது நல்லது.

இக்கடற்கரையில் தவிர்க்க வேண்டியவை எவை?, இங்கிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பவைகளை அங்கிருக்கும் கடல்வனப் பாதுகாவலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

அப்புறமென்ன, பைரோன் தீவுக்கு ஒரு முறை சென்று, ஆழமில்லாக் கடலில் அழகாகத் தெரியும் அழகிய கடல் வாழ் உயிரினங்களைக் கண்டு மகிழுங்கள்... மன அழுத்தங்களைக் குறையுங்கள்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com