இந்தியாவில் தீவு என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது அந்தமான் நிக்கோபார் மற்றும் லக்ஷதீப் ஆகிய தீவுகளே ஆகும். ஆனால் அசாமில் ஒரு மாவட்டமே தீவாக இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதைப்பற்றித்தான் விரிவாக இந்த பதிவில் காண உள்ளோம்.
அசாமில் உள்ள மிகப்பெரிய நதி தீவுதான், மஜூலி தீவாகும். இதனுடைய மொத்த பரப்பளவு 352 சதுர கிலோ மீட்டர். இந்த தீவு அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நதித்தீவு என்பதால் இந்த இடம் நிறைய சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. 2016ல் முதன்முறையாக ஒரு தீவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்காட்டிலிருந்து படகுகள் மூலம் இங்கே சுற்றுலாப் பயணிகளை கொண்டு சென்று விடுகிறார்கள். ஜோர்காட்டிலிருந்து மஜூலி 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மஜூலி நன்றாக வளர்ந்த சுற்றுலாத்தளம் இல்லை. இங்கே அசாம் பாரம்பரியத்தை பின்தொடரும் நிறைய பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இந்த தீவு வருடம் முழுவது பயணம் செய்வதற்கு ஏற்றதாக இருந்தாலும், மழைக்காலங்களில் வெள்ளம் காரணமாக இங்கே அதிகமாக யாரையும் அனுமதிக்கமாட்டார்கள்.
இங்கே ஹோட்டல் போன்ற தங்கும் வசதிகள் பேரும்பாலும் இருக்காது. இங்கிருக்கும் மக்களுடன் தங்கி, அவர்கள் சமைக்கும் உணவை சாப்பிட்டு அவர்களுடன் சேர்த்து பழகி அங்கிருக்கும் இயற்கையை ரசித்துவிட்டு வர வேண்டும். இது நிறைய சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
நவம்பர் மாதத்தில் வரும் பௌர்ணமியன்று நடக்கும் ’ராஸ் உட்சவ்' என்னும் விழா அங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தீவைச்சுற்றி நிறைய பறவைகள் இருக்கிறது. அதை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். இன்னும் 30 முதல் 40 வருடத்தில் மஜூலி தீவு காணாமல் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.
‘உமாநந்தா' பிரம்மபுத்திரா நதியில் இருக்கும் சிறிய நதித்தீவாகும். இந்த தீவின் அமைப்பை வைத்து இதை ‘மயில் தீவு’ என்றும் அழைப்பார்கள்.
சிவபெருமான் இந்த தீவை பார்வதிதேவி மகிழ்ச்சியாக இருப்பதற்காக உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஒருமுறை சிவபெருமான் காமதேவனை இங்கே வைத்து தான் தன் மூன்றாவது கண்ணால் எரித்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த தீவை 'பஸ்மாச்சல்' என்று அழைப்பார்கள். இந்த தீவில் நிறைய புளிய மரங்களை காணமுடியும். இங்கு தங்க நிறத்திலான லங்கூர் அதிகம் வசிக்கின்றன. சிவராத்திரி இங்கே வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீவிற்கும் வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுள் அனுமதிக்கப்படுகிறார்கள்.