சொக்கவைக்கும் அழகு சுவிட்சர்லாந்து! - சுவிஸ் (செர்மட்) பயணக்கதை!

Switzerland
Switzerland
Published on

- ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து

இறைவன் வழங்கிய தங்கள் அழகு நாட்டை சுவிஸ் மக்கள் மேலும் அழகு படுத்தி வைத்துக் கொள்வதுடன், அதன் அழகு கெடாமல் இருக்க, வேண்டிய உபாயங்களையும் அனுசரித்து வருகிறார்கள்.

பனிப்பொழிவு நேரத்தில் பல நாடுகளில் பாதைகளில் உப்பைப் போடுவார்கள்… பனி எளிதில் உருக! சுவிஸ் மக்கள் அதைக் கூட அனுமதிப்பல்லையாம்! தங்கள் மண் உப்பால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே காரணமாம்!

பிற நாடுகளைப்போல் உரம் (Fertilizer), பூச்சிக் கொல்லி (Pesticides) போன்றவற்றையும் இவர்கள் அதிகம் உபயோகிப்பதில்லையாம்! அவற்றால் மண்ணின் இயற்கைத் தன்மை பாதிப்படையக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்களாம்.

சுவிசில் திரும்பும் திசையெல்லாம் மலைகளும், பசுமையும், படிக்கட்டுகள் போன்ற வீடுகளும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. பெரும்பாலான நகரங்களின் நடுவே ‘லேக்குகள்’ என்றழைக்கப்படும் ஏரிகள் அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அழகான மலைகளை மக்கள் எளிதில் சென்று பார்த்து மகிழ ஏதுவாகப் பல நவீன உக்திகளைப் பயன்படுத்தி உலக மக்களை ஈர்த்து வருகிறார்கள்!

Switzerland
Switzerland

அப்படி நவீன மயமாக்கப்பட்டுள்ள பல இடங்களில் ஒன்றுதான் செர்மட் (Zermatt) என்ற இடம். சுவிட்சர்லாந்தின் தெற்குப்பகுதியில் சுமார் 1600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து ஏறத்தாழ 10,000 அடி உயரம் வரை உள்ள மலைகளுக்கு, மூன்று நிலைகளில் அழைத்துச் செல்கிறார்கள். ஆண்டின் எல்லா மாதங்களிலும் மேலே பனியைக் காணலாம். பனிசறுக்கு விளையாட்டை மேற்கொள்ளலாம். பனி சறுக்கு, மலையேறுதல், சிறுவர் விளையாட்டுப் பூங்காக்கள், சைக்கிள்,சிறு ஜீப் பயணம் என்று மக்கள் இங்கு உற்சாகத்தில் திளைக்கிறார்கள்.

ஜூரிக்கின் புற நகர்ப்பகுதியான காட்டிகனிலிருந்து எங்கள் பயணம் தொடங்கியது. மூன்று, நான்கு மணி நேர ரயில் பயணம். இங்குள்ள ரயில்களில் பெரிய ஜன்னல்கள் உள்ளன. இயற்கையை முழுதாக அனுபவிக்க அவை உதவுகின்றன.

குழந்தைகளுக்குப் பயணத்தை எளிதாக்கப் பெரும்பாலான ரயில்களில் ‘ப்ளே ஏரியா’ உள்ளது. எத்தனையாவது கம்பார்ட்மெண்டில் அது உள்ளது என்பதை முன்கூட்டியே அறிவித்து விடுகிறார்கள். நீண்ட தூரப் பயணத்தின்போது குழந்தைகள் பெற்றோரை நச்சரிக்காமல் இருக்கவும், குழந்தைகள் விளையாடி களிக்கவும் அவை துணை நிற்கின்றன.

ரயில்களில் அதிகச் சப்தமோ, ஆட்டமோ இல்லை! அதி வேகமாகவும் செல்கின்றன. நாங்கள் டாஷ் (Tasch) என்ற நகரத்தில் தங்கி, அங்கிருந்து 'செர்மட்' சென்று வர ஏற்பாடு செய்திருந்தோம். டாஷிலிருந்து செர்மட் செல்ல 10,12 நிமிட ரயில் பயணந்தான்! நிறைய ரயில்களை விடுகிறார்கள்.

நாங்கள் சென்ற நேரத்தில் விஸ்ப் (Visp)என்ற நகரம் வரையே ரயில் சென்றது. விஸ்பிலிருந்து டாஷ் வரை சுமார் ஒரு மணி நேரப் பேரூந்து பயணம். சுவிஸ் மற்றும் இத்தாலிய ஓட்டுனர்கள்தான் உலகிலேயே சிறந்த ஓட்டுனர்களாக இருக்க வேண்டும் என்பது எமது கணிப்பு. மலைப்பாதைகளிலும், ஏற்ற இறக்கங்களிலும், ஹேர்பின் வளைவுகளிலும் அவர்கள் அனாயாசமாக ஓட்டுவது நமக்குப் பயம் கலந்த ஆச்சரியத்தையே தருகிறது.

டாஷ் ரயில் நிலையம் சென்று ரயிலேறி அடுத்த பன்னிரண்டாவது நிமிடத்தில் செர்மட்டில் இறங்கினோம். ரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும், கடைகளுமாக வண்ண மயமாக மிளிர்கின்றன. இரு பக்க மலைகளுக்கு இடையே, அந்த முக்கியச்சாலை அழகு காட்டுகிறது. மலையில் ‘பாரா க்ளைடிங்’ என்றழைக்கப்படும் பாராசூட் விளையாட்டும், ஹெலிகாப்டரில் மலையைச் சுற்றிப் பார்க்கும் நிகழ்வுகளும் களைகட்டுகின்றன.

செர்மட்டில் மேட்டர் ஹார்ன் (Matter Horn) என்றழைக்கப்படும்  பனியால் சூழப்பட்ட பிரமிட் வடிவிலான மலைப்பகுதியே முக்கியத்துவம் பெறுகிறது. அதனை அருகில் சென்று கண்டு ரசிக்க, மூன்று நிலைகளில் எந்திரங்களை இயக்குகிறார்கள்.

Switzerland
Switzerland

ரயில் நிலையத்திலிருந்து சில நிமிட நடை தூரத்திலேயே மேலே செல்ல ஏதுவாக ‘பேஸ் ஸ்டேஷன்’ அமைத்துள்ளார்கள். அங்கு பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றால், சாய்தளப் படிக்கட்டுகள் உள்ளன. இருபுறப் படிகளுக்கு நடுவே அந்த ரயில் வந்து நிற்கிறது. சுமார் நூறு பேர்கள் பயணம் செய்யக்கூடிய அதில், இரு புறமும் இருக்கைகள் உள்ளன. சாய்தள நிலையிலேயே அது நம்மை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறது.17 கி.மீ.,உயரத்தை அது சுமார் 5 நிமிடங்களிலேயே கடந்து, அங்கு நம்மை இறக்கி விடுகிறது.

அங்கு இறங்கி நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களும், சிறு ஏரியும் உண்டு. ஏரியின் ஒரு கரையிலிருந்து மறுகரை செல்ல, கயிற்றைப் பிடித்தபடி மிதக்கும் தெப்பம் போன்ற அமைப்பு, சிறுவர்களை வெகுவாகவே கவர்கிறது.

இதையும் படியுங்கள்:
Allure Of The Seas - உல்லாச கடல் உலா போவோமா?
Switzerland

அடுத்துள்ள உயரமான பகுதிக்குச் செல்ல ‘விஞ்ச்’கள் உள்ளன. இவை சற்றே பெரியவை. ஒரே நேரத்தில் 30,40 பேர் பயணிக்கலாம்.அங்கு இறங்கி, அங்குள்ள மலை முகடுகளை ரசித்தபடி சுற்றி வரலாம்.

அதனைத் தொடர்ந்து அதிக உயரமான (சுமார் 10,000 அடிக்கு மேல்) இடத்திற்குச் செல்ல சிறு வகை விஞ்ச்களை விடுகிறார்கள். இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிக்கலாம். அங்கு நாம் சென்று இறங்கி நடந்தால் பனி படர்ந்து கிடக்கிறது. பனி சறுக்கு செய்பவர்கள் தங்கள் உபகரணங்களுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

Switzerland
Switzerland

மகளும், மருமகனும், பேரனும் பாரா க்ளைடிங் செல்ல ஆசைப்பட்டே செர்மட் சென்றோம். ஆனால் ஒன்பது வயது நிறைந்தவர்கள் மட்டுமே பாரா க்ளைடிங் செல்ல முடியுமென்று சட்ட விதிகள் உள்ளதால், பேரனுக்கு ஏமாற்றமே! அதற்குப் பதிலாகப் பேரனும், பேத்தியும் போதும்... போதுமென்று சொல்லும் வரை குழந்தைகள் பூங்காவில் விளையாட விட்டு அவர்களைத் திருப்திப்படுத்தினோம்.

செர்மட்டின் முக்கிய இடத்திலுள்ள ‘கோல்டன் இண்டியா’ (Golden India) உணவகம் சென்று, வெஜ் பிரியாணி, நாண் என்று விரும்பிய உணவை உண்டோம். நமது வட இந்தியச் சகோதரர்கள் நடத்தும் உணவகம் இது. நம் நாட்டவரை இங்கு நிறைய காணமுடிந்தது.

பிரிய மனமில்லாமல் செர்மட்டைப் பிரிந்து வந்து ரயிலேறினோம். பல மலைக் குகைகளுக்குள் புகுந்து, தன் வேகத்தைக் குறைக்காமல் ரயில்கள் வருவது மனதை இனிமையாக்குகிறது. ரயில் பேருந்து பயணங்களின்போது, இருபுறமும் உள்ள மலைகளில் பாம்பு தொங்குவது போல நீர் அருவிகள் கொட்டுவது கண்களுக்குப் பெரு விருந்தாகின்றன. பசுமையான மலைப் புல்வெளிகளில் சாய்தளத்தில் பசுக்கள் மேய்வது மனதுக்கு விருந்தாகும் காட்சிகள்!

நமது நாட்டிலும் மலைகளும்,அருவிகளும் உள்ளன. ஆனால் சுவிஸ் நாட்டவர்களைப் போல் நாம் அவற்றை முறையாகப் பேணிப் பாதுகாப்பதில்லை. சுற்றுலாத் தலங்களுக்கு நல்ல சாலைகள்,தங்குவதற்கு உயர்வான விடுதிகள், எளிதான போக்குவரத்து வசதிகள்,சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்துவது என்று  அனைத்திலும் முன்னேற்றம் காண வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டின் கோடைக் காலத்திலும் கொடைக்கானல் சென்று வரும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது நமது நாட்டில் வாடிக்கை! ஊட்டி ரயில், பயணிகள் எதிர்பார்த்து வரும் சமயங்களில் ஓடாமல் அவர்களை ஏமாற்றுவதும் வழக்கமாகிப் போன ஒன்று! இவைகளில் கவனம் செலுத்தாமல், நெரிசலைத் தடுக்க ‘இ பாஸ்’ முறையைக் கலக்டர்கள் அறிமுகப்படுத்துவது இன்னும் வேடிக்கை! உலகின் மக்கட்தொகையில் முதலாவதாக வந்தால் மட்டும் போதாது! மற்றவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் இல்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com