
வணிக நகரமென அழைக்கப்படும் மும்பையில் சுற்றிப் பார்க்க கடற்கரைகள், கோவில்கள், மியூசியம் என அநேக இடங்கள் உள்ளன எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கும் சுற்றுலாவினரில் பலர், "மியான்மியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தியாவினால் கட்டப்பட்டுள்ள அழகான குளோபல் விபாசனா பகோடாவையும், அருமையான நேரு கோளரங்கையும், "நேரம் கருதி மிஸ் பண்ணி விடுகின்றனர். அவைகளைப் பார்க்கலாமா!"
குளோபல் விபாசனா பகோடா:
அரபிக் கடலின் பின்னணியில் தங்கப்பூச்சு கொண்டு தெய்வீகமாக காட்சியளிக்கும் குளோபல் விபாசனா பகோடா, உலகிலேயே பெரிய குவி மாடமாகும்.
குளோபல் விபாசனா பகோடா மியான்மரிலுள்ள யாங்கூனின் ஷ்வேடகன் பகோடாவின் பிரதிநிதியாகும். பிரிவினையற்ற விபாசனா தியானத்தை பாதுகாத்த மியான்மருக்கு, இந்தியா நன்றி தெரிவிக்கும் அடையாளமாக கட்டப்பட்டுள்ளது.
325 அடி உயரம் கொண்ட இந்த அமைப்பு, 30 மாடி கட்டிடம்போல உயரமானது. உள் குவி மாடத்தில் சுமார் 8,000 பேர்கள் அமர்.து ஒரே நேரத்தில் "விபாசனா" தியான பயிற்சி செய்யலாம்.
புத்தரின் நினைவுச் சின்னங்களைக்கொண்ட குவிமாடம், கற்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் பழைய கால நுட்பத்தை பயன்படுத்தி எந்தவித ஆதாரமும் இன்றி கட்டப்பட்டுள்ளது. மேலும், தூண்களால் ஆதரிக்கப்படாத வகையில் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.
விபாசனா தியானப் பயிற்சியை, மூன்று அல்லது பத்து நாட்கள் மேற்கொள்ள இந்த குளோபல் விபாசனா பகோடாவிற்கு வருபவர்கள் அநேகம். தியானப் பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கு நல்ல வசதிகள் அளிக்கிறார்கள். இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யவேண்டும்.
கோராய் பீச் அருகே அமைந்துள்ள அழகான குளோபல் விபாசனா பகோடாவைக்காண, கோராய் சிற்றோடை வழியே படகு மூலமாகவும், தானே மாவட்டத்திலுள்ள பயந்தரில் இருந்து சாலை வழியாகவும் செல்லலாம். ஒரு நாள் பிக்னிக் செல்லவும் குவிமாட அழகை கண்டு ரசிக்கவும் அருமையான இடம் குளோபல் விபாசனா பகோடா.
நேரு ப்ளானட்டோரியம்:
பிரபஞ்சம் பற்றிய அறிவை விரிவுபடுத்திக்கொள்ளவும், விஞ்ஞான விஷயங்களைக் கற்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் கோளரங்கம் நேரு அறிவியல் மையத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. ஒவ்வொரு கிரகத்திலும் நாம் எடையைக் கணக்கிடலாம். விண்கலங்களின் மாதிரிகளைக் காணலாம்.
அழகான வெள்ளைக் குவி மாடத்தினுள், திரையரங்கம் முப்பரிமாணான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி தெளிவான பார்வையுடன் கூடிய தனித்துவமான கோளமைப்பு.
வானம் குறித்த விஷயங்களைக் காண்கையில், நெடு வரிசைகள் தடுக்காது. நட்சத்திரங்களைப் பற்றிய விபரங்களை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு தொலை நோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
மும்பை ஒர்லி பகுதியில் அமைந்துள்ள இந்த அருமையான கோளரங்கத்தைக்காண பஸ் மற்றும் டாக்ஸி, போன்றவைகளில் செல்லலாம். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம். கோளரங்கம் வெளியே, சுவையான உணவுகள் கிடைக்கும்.
குளோபல் விபாசனா பகோடா, கோளரங்கம் இரண்டையும் மிஸ் பண்ணிடாதீங்க!