
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அதன் பக்கத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு, அங்கு பல்வேறு மக்கள் பேசிக்கொண்டு செல்லும் விஷயங்களை காதில் வாங்கிக் கொண்டு, எல்லாவற்றையும் ரசித்தபடி திரும்புவது ஒரு தனி சுகம். அப்படி மும்பையில் ரசித்த ஒரு சுவையான பயண அனுபவத்தை இப்பதிவில் காணலாம்.
மும்பையில் கடற்கரையை ஒட்டி உள்ள செட்டல் வார்டு லேனில் இருந்து தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம் மும்பை மலபார் ஹில்ஸ் மேல் இருக்கும் ஹாங்கிங் கார்டன்தான். இதன் சிறப்பு என்னவென்றால் தெற்கு மும்பை மாநகரத்திற்கு தேவையான குடிதண்ணீர் வழங்கும் பெரிய வாட்டர் டேங்க் அந்த மலையின் மேல் இருப்பதும் அதன் மீது தொங்கும் தோட்டத்தை அமைத்திருப்பதும் கண்கொள்ளாக் காட்சி. Elevation தான் தொங்கும் தோட்டத்தின் மலைப்பான சிறப்பு.
இந்தத் தோட்டத்திற்கு ஃபெரோஸா மேத்தா கார்டன் என்றும் ஒரு பெயர் உண்டு. அவர் வழக்கறிஞராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து நிர்மாணித்ததால் அந்தப் பெயர். அதற்கு அருகில் இருப்பது கமலா நேரு பார்க். இங்கு குழந்தைகள் விளையாடுவது நடக்கும்.
தொங்கும் தோட்டத்தின் வேலிகள் அனைத்தும் பசுமையான செடிகளை கொண்டு விலங்குகள் போல் வெட்டி அலங்கரித்திருப்பது தோட்டத்திற்கு அழகு தரும் விஷயம். மேலும் அதன் சுற்று பகுதிகள் அனைத்திலும் அழகழகான பூச்செடிகளையும், இதர செடி வகைகளையும் கண்ணுக்கு இனிமையாக, சீசனுக்கு ஏற்றபடி வளர்த்து பராமரித்து வருவது காண்போர் கண்களை கவரும் விஷயம்.
இதை காண்பதற்காகவே அங்கு நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். மேலும் மாலை நேரத்தில் சென்றால் செடிகளுக்கு பாய்ச்சும் தண்ணீர் தரை எல்லாம் வழிந்தோட அந்த குளுமையை அனுபவித்து மகிழலாம்.
அதனை ஒட்டி இருக்கும் ஷூ ஹவுஸில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக கேங்கிங் கார்டனிலிருந்து அரபிக் கடலில் விழும் சூரிய அஸ்தமனத்தை கண்டுகளிக்க அங்கு பெருந்திரளான மக்கள் கூடுவர். அது அழகுக்கே அழகு சேர்க்கும் விஷயம்.
இந்தத் தோட்டத்திற்கு கீழாக இறங்கினால் கடல். கடற்கரையை ஒட்டி நடந்தால் சௌபாத்தி பீச். பீச்சின் ஓரமாகவே சென்று ரோட்டில் நடைபாதையில் ஏறினால் ரோட்டின் இடது பக்கத்தில் அக்வேரியம் இருக்கும். அதை கண்டு களித்து நடையைக் கட்டினால் ட்ரினிட்டி ஹோட்டல். இங்குதான் சில வருடங்களுக்கு முன்பு தீவிரவாதிகளின் தாக்குதல் ஏற்பட்டு, குண்டு வீசி தகர்த்தது எல்லாம் நடைபெற்றது.
அந்த இடத்திற்கு செல்லும்பொழுது அந்த நினைவு தப்பாமல் தவறாமல் வந்துவிடும். பிறகு புகழ்பெற்ற மரையின் டிரைவ். அங்கு ஒருமுறை நடந்து கொண்டிருக்கும் பொழுது கடலில் ஒரு பகுதியில் மழை கொட்டுகிறது. அடுத்த பகுதியில் சிறு தூறல் கூட விழவில்லை. முதன்முதலாக நேரில் பார்த்த அந்த அதிசயம் என்றென்றும் நினைவில் நிற்பவை.
இந்த கடற்கரையில் தினசரி நடை பயணம் மேற்கொள்ளும் அனில் அம்பானி. அவரின் இரண்டு மெய்காப்பாளருடன் வருவதை தினசரி காணலாம். நம்ம ஊர் சினிமா இயக்குனர்களும் அங்கு நின்று சூழல் பார்ப்பதை காணமுடியும். மேலும் இந்த கடற்கரையை ஒட்டி விளம்பர படங்களின் ஷூட்டிங் நடப்பதை அவ்வப்பொழுது கண்டுக்களிக்கலாம். இங்கு அதிகமானோர் யோகா செய்வதும் அன்றாட நிகழ்வு.
அரபிக் கடலில் நங்கூரமிட்ட கப்பல், அங்குமிங்கும் ஆடி வரும் தேர் போல் அலையில் மிதந்து வரும் படகுகள், அந்த கடற்கரையைச் சூழ்ந்த வானுயர்ந்த கட்டிடங்கள் அனைத்தையும் ஒரு சேர கண்டுகளிப்பதில் மனம் லயித்துப் போகும்.
அந்தி வேளையில் இந்த இயற்கையோடு சேர்ந்து செயற்கையாக மிளிரும் நெக்லஸ் ரோட்டின் விளக்கொளிகளை நம் கண்கள் பருக, கடலும் மலையும் எங்கள் கூட்டம், அதைக்காண கிடைத்ததோர் அரிய இன்பம், எங்கெங்கு காணினும் இனிமையடா! என்ற மகிழ்ச்சி துள்ளலுடன் வீடு திரும்புவது என்றென்றும் மன நிறைவைத்தரும் விஷயம்.