
ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு சுற்றுலாத் தலம் இந்த உப்பலமடுகு நீர்வீழ்ச்சி. இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். 'உப்பலமடுகு' என்றால் அடர்ந்த காடு என்று பொருள். சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் நீரை பார்க்க மனம் மகிழ்ச்சியில் துள்ளும். ஸ்படிகத் தெளிவான நீர்வீழ்ச்சி, பாறைகளில் இருந்து விழுவது ஒரு அழகான அற்புதமான காட்சியாக இருக்கும்.இதனை 'தடா நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கிறார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொழுதைக் கழிக்க ஏற்ற அருமையான இடமிது.
இது ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியாகும். இது ட்ரிசிட்டி மற்றும் ஒன்னஸ் கோயிலுக்கு அருகில் உள்ளது. சென்னையில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீகாளஹஸ்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்கு செல்ல சென்னையில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள ரயில் நிலையம் சூலூர்பேட்டையில் உள்ளது. நீர்வீழ்ச்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ரயில் நிலையம். அங்கிருந்து நீர்வீழ்ச்சியை அடைய பேருந்து அல்லது டாக்ஸியில் செல்லலாம்.
வார இறுதி நாட்களை கழிக்கவும், பசுமையான சூழலில் ஓய்வெடுத்து அனுபவித்து மகிழவும் சிறந்த இடமிது. நீர்வீழ்ச்சி காம்பகம் காடு அல்லது சித்துலியா கோனா என்ற காட்டுப்பகுதியில் உள்ளது. எங்கும் பசுமை சூழ, சிறு குன்றுகள் நிறைந்த மலையேற்றம் மற்றும் உல்லாச பயணத்திற்கு ஏற்ற இடமாகும்.
குறைந்த வசதிகள் மட்டுமே உள்ளதால் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துச் செல்வது நல்லது. அத்துடன் மலையேற்றத்திற்கு ஏற்ற வசதியான காலணிகளையும் அணிவது அவசியம்.
நீர்வீழ்ச்சியை அடைவதற்கு மலையேற்றம் அவசியம். அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பிரபலம். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரமாகும். வழியில் பல குளங்களும், பசுமை நிறைந்த காட்சிகளும் நம் மனதிற்கு இதமான உணர்வை தருகின்றது. ஆனால் போதிய வழிகாட்டு குறியீடுகள் எதுவும் இல்லாததால் பிறர் உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது.
அபரிமிதமான இயற்கை அழகு கொஞ்சும் இந்த அருவிக்கு அருகில் சுற்றிப் பார்க்க புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம், சிவன் கோவில், வெங்கடகிரி கோட்டை மற்றும் காளஹஸ்தி கோவில் போன்ற இடங்கள் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள், சாகச மலையேற்றம் செய்ய வரும் ஆர்வலர்கள் தவிர ஏராளமான சிவ பக்தர்களும் இங்கு வருகை தருகின்றனர்.
அழகிய நீரோடைகளும், பசுமையான நிலப்பரப்பும் ஒரு இனிமையான அனுபவத்தை தரும். சாகசமும் இயற்கை அழகும் நிறைந்த அருமையான நீர்வீழ்ச்சி நகர வாழ்வின் சலசலப்பிலிருந்து அமைதியையும், ஓய்வையும் தேடுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமிது.