
டிசம்பர் வந்தாலே டூர் புரோக்ராம்களும் களைகட்டிவிடும். நகரத்தின் பரபரப்புகளிலிருந்து விலகி டூர் முடித்து திரும்பும்போது புதிதாக பிறந்தது போன்ற புத்துணர்வு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ் வாகமன். ஆசியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுவதே வாக்மனின் சிறப்பை சொல்லும். கடவுளின் தேசமான கேரளாவின் மலைவாசஸ்தலமான இங்கு செல்ல தேனியிலிருந்து கூடலூர், குமுளி, வண்டிப் பெரியார், ஏலப்பாறை வழி ஏற்றது.
குறுகிய, மூடுபனி மூடிய வளைவான சாலைகள் வழியாக நடந்து மலைகளைக் கடந்து உண்மையான பேரின்பத்தை அனுபவிக்கவும். மலையேற்றம், பாரா கிளைடிங் அல்லது பாறை ஏறும் சாகசங்களில் விருப்பம் உள்ளவர்களுக்கும் ஏற்ற இடம் இது.
இங்கு எப்போதும் 10 முதல் 22 டிகிரி வரை குளிர் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் உடைகளில் ஸ்வெட்டர் அல்லது ஜெர்க்கின் அவசியம் தேவை. வாகமனில் காணவேண்டிய இடங்களாக 13 ஸ்பாட்களை சொல்கிறார்கள். இதில் பெரும்பாலும் வியூபாயின்ட் களாகவே உள்ளது. வானம் தொடும் மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும்தான் வாகமனின் ஸ்பெஷல் என்பதால் இங்குள்ள வியூ பாயின்ட்கள் மூலம் கடவுள் தேசத்தின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.
ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும் குருசுமலை, முருகன் மலை, தங்கல் மலை என்ற புகழ்பெற்ற தலங்கள் மூலம் ஒரு அருமையான அனுபவத்தை தருகிறது வாக்மன்.
குருசுமலை ஒரு கிறிஸ்தவ யாத்திரை மையம். புனித வெள்ளி. புனித வாரத்தின்போதும், அதன் பிறகும் மரச் சிலுவைகளைச் சுமந்து மலை ஏறுவதற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிகின்றனர்.
முருகன்மாலா என்பது குருசுமலைக்குக் கிழக்கே உள்ள முருகன் மலை, முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக் கப்பட்ட, பாறையில் வெட்டப்பட்ட கோயிலைக் கொண்ட மலையாகும். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
தங்கல் பாரா வாகமனில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லிம்களின் தலம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து கேரளாவை அடைந்ததாக நம்பப்படும் சூஃபி துறவியான ஹுஸ்ரத் ஷேக் ஃபரிதுதீன் பாபாவின் இளைப்பாறும் இடமான இங்கு ஒரு துர்கா உள்ளது. பிரசாதமாக தரப்படும் கஞ்சுசக்கரம் எனும் இனிப்பு உணவு பிரபலம்.
மேலும் இங்கு உலுப்புணி வனவிலங்கு சரணாலயம், பருந்துப் பாறை எனும் மேடு, பாஞ்சாலி மேட்டு, வாகமன் அருவி, பைன் மரக்காடுகள், பெரிய தேயிலைத் தோட்டம் போன்றவைகளுடன் சுற்றுலா வாசிகளைக் கவரும் விதமாக பாராகிளைடிங், அட்வென்சர் ஜோன், பர்மா பிரிட்ஜ், ரோஸ்பார்க் என பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கண்ணாடி பாலம் கேரள சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருப்பது தற்போது மேலும் சுற்றுலாப் பயணிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அழகான மிக நீளமான கண்ணாடி பாலத்தை பார்வையிட கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை வாகமனுக்கு அதிகரித்துள்ளது.
இனி உங்கள் டூர் லிஸ்டில் தனித்துவமிக்க வாகமன் நிச்சயம் இடம்பெறும். அங்கு சென்று புது மனிதராக மன முழுவதும் உற்சாகத்துடன் திரும்புங்கள்.