
இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பீங்கான் கழிவுகள் என பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிவுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வகையில் உலகிலேயே பீங்கான் கழிவுகளில் இருந்து உருவான முதல் பூங்கா குறித்து இப்பதிவில் காண்போம்.
உத்திர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா என்ற பகுதி பீங்கான் பொருட்களின் தலை நகரமாக விளங்குகிறது. உலக அளவில் பிரபலமான பீங்கான் பொருட்கள் இப்பகுதியில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. குர்ஜா என்றாலே பீங்கான்தான் அனைவரது நினைவுக்கு வரும்.
அதன்படி உத்தரப்பிரதேச அரசு 5.86 கோடி ரூபாய் செலவில் குர்ஜாவில் 2 ஏக்கர் பரப்பளவில் 'வித்தியாசமான உலகம்' என பொருள்படும் 'அனோகி துனியா' என்ற பெயரில் பீங்கான் பொருட்களால் உருவான பூங்காவை வடிவமைத்துள்ளது.
இந்த பூங்காவில் உடைந்த குடங்கள், கோப்பைகள், இருக்கைகள், செயற்கை மரங்கள் போன்றவை பீங்கான் கழிவுகளால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் தனித்துவமான 100 கலைப்படைப்புகளை 6 கலைஞர்கள் மற்றும் 120 கைவினைஞர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.
செல்பி புகைப்படம் எடுக்கும் இடம், உணவகங்கள், பசுமையான நிலப்பரப்பு போன்றவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .
அரசு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பில் பீங்கான் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 'அனோகி துனியா' பூங்கா இம்மாத இறுதியில் திறக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் டன் கணக்கில் வீணாகும் பீங்கான் கழிவுகளை ஆக்கபூர்வமான செயல்பாட்டு கலையாக மாற்றுவதன் மூலம் நிலையான வளர்ச்சியை அடைய முடியும். மேலும் இந்த பூங்கா அனைவரையும் கவர்ந்திருக்கும் வகையில் உள்ளதால் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதோடு அனைவரையும் கவரும் சுற்றுலா இடமாக வெகு விரைவிலேயே மாறும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
உலகின் பீங்கான் கழிவுகளில் உருவான முதல் பூங்காவான அனோகி துனியா உத்திர பிரதேச மாநிலம் குர்ஜாவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை தேடிக்கொடுக்கும். கழிவு பொருட்களால் புதிய படைப்புகள் உருவாக்கப்பட்டதில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது என்பதிலும் இந்தியராகிய ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.