
அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தில் இருக்கும் பிரமாண்டமான பள்ளத்தாக்கின் பெயர் கிராண்ட் கேன்யன். சுற்று வட்டமாக 448 கிமீ நீளமும், 30 கிமீ அகலமும், ஏறக்குறைய 2 கிமீ ஆழமும் நிறைந்த பிரமாண்டமான பள்ளத்தாக்கு கேன்யான். இந்தப் பகுதி 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்,4000 ஆண்டுகளாக மலைவாழ் பழங்குடியினர் வாழ்ந்து வரும் இடம் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பகல் முழுவதும் சூரிய ஒளி பள்ளத்தாக்கு சுவர்களை வெவ்வேறு கோணங்களில் ஒளிரச் செய்வதால் பள்ளத்தாக்கின் நிறங்கள் மாறுகின்றன. பருவகாலங் களுக்கு ஏற்ப நிறங்கள் மேலும் மாறுகின்றன, பொன் நிறம், கரும் பச்சை, சிவப்பு கலந்த கறுப்பு, இள நீலம், மைக்கறுப்பு போன்ற பல நிறங்களில் சூரியனின் பொன்கதிர்களால் வர்ண ஜாலம் காட்டும் இயற்கை அதிசயம் இங்கு நிகழ்கிறது. இது அரிஜோனா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் 6820 அடி உயரத்தில் உள்ளது. மிதமான வெயில் அடிக்கும் இளவேனிற் காலத்தில் இங்கு ஒரு நாளைக்கு 30,000 க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக வருகின்றனர்.
1910 ம் ஆண்டு வாக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இந்த பகுதிக்கு வந்து இதன் அழகை கண்டு வியந்தார். இந்த அழகான அதிசய பள்ளத்தாக்கு, இயற்கை அழகு குறையாமல், ஒரு பூங்காவைப் போல் பாதுகாக்கப்பட வேண்டும். தப்பித்தவறி ஒரு கட்டிடம் கூட இங்கே கட்ட அனுமதிக்கக்கூடாது என்று கூறிவிட்டு, அதற்குரிய சட்டத்தையும் பின்னர் போட்டார். அன்று முதல் இது பாதுகாக்கப்பட்ட இடமாக உருவாயிற்று.
இங்கு 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா, அமெரிக்காவின் பழமையான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்,பிரமிக்க வைக்கும் கிராண்ட் கேன்யனின் தனிச்சிறப்பு.இது கொலராடோ நதியால் செதுக்கப்பட்ட 1 மைல் ஆழமான பள்ளத்தாக்கு என்பது தான்.
பள்ளத்தாக்கின் வடக்கு மற்றும் தெற்கு விளிம்பு (ரிம்) இணைந்து அதிகாரப்பூர்வ "கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா" என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய பூங்கா மிகவும் பெரியது, நீங்கள் வடக்கு விளிம்பில் இருந்து தெற்கு விளிம்பிற்கு காரில் செல்ல விரும்பினால், 220 மைல்கள் 4.5 மணி நேரம் பயணிக்க வேண்டும் .
தெற்கு விளிம்பு என்பது பூங்காவின் மிகவும் வளர்ந்த பகுதியாகும், மேலும் ஏராளமான ஷாப்பிங், சாப்பாட்டு விருப்பங்கள், ஹோட்டல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்களை கொண்டது. இங்கே நீங்கள் கிராண்ட் கேன்யனின் மிகவும் பிரபலமான காட்சிகளைக் காணலாம், மேலும் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணத்திலோ அல்லது பள்ளத்தாக்கின் விளிம்பைக் கடந்து ஹம்மர் தரை சுற்றுலாவில் ஆராய்வதற்கான வாய்ப்புகளையும் பெறலாம்.
மாறாக, வடக்கு விளிம்பு ஒரு கரடுமுரடான மற்றும் பெரும்பாலும் தொடப்படாத பகுதியாகும், இது திறமையான மலையேறுபவர்களுக்கும் முகாமிடுபவர்களுக்கும் ஏற்றது. வடக்கு விளிம்பு தெற்கு விளிம்பை விட 1,000 அடி உயரத்தில் இருப்பதாலும், குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவை அனுபவிப்பதாலும், டிசம்பர் முதல் மே வரை பார்வையாளர்களுக்கு இந்தப் பகுதி முற்றிலும் மூடப்படும்.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக நீண்ட காலமாகக் கருதப்படும் இந்த புவியியல் நிறம் மற்றும் அரிப்பு வடிவங்களின் தனித்துவமான கலவையைக்காண பார்வையாளர்கள் குவிகிறார்கள். இங்கு வெவ்வேறு இடங்களுக்குக் காரில் போய் நின்று பார்த்து ரசிக்கலாம். இரண்டு கிமீ ஆழமுள்ள பள்ளத்தாக்கை, இறங்கி அடி வாரம் வரை போய்ப் பார்த்து ரசிக்கலாம். இந்த முழு பள்ளத்தாக்கையும் கண்டு ரசிக்க இரண்டு நாட்களாகும்.
சுமார் 480 கிமீ நீளமுள்ள கொலராடோ நதி இந்த பள்ளத்தாக்கின் அடித்தளத்தில் ஓடுகிறது. நுரை ததும்ப சீறிப்பாயும் இந்த நதியில் படகு சவாரி செய்ய ஆண்டு தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். ஆயிரக்கணக்கான வகையில் செடிகள், பாறை வகைகள், வெவ்வேறு மிருகங்கள் ஆகியவை நிறைந்த இயற்கையின் அரிய சுரங்கம் இது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பள்ளத்தாக்கின் சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கு வடிவங்களுக்கும் ஆதிகால இந்தியர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா, புத்தா, தேவா என்று பெயர்கள் வைத்திருப்பது வியப்பளிக்கிறது என்கிறார்கள். இரவு நேரத்தில் ஹோட்டல் மற்றும் மலைமுகட்டின் கூடாரங்களிலும் தங்கி இயற்கையை ரசிக்கிறார்கள். அந்நேரங்களில் விநோதமான இயற்கை உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இதற்காக இடம் பிடிக்க 6 மாதங்களுக்கு முன்னதாகவே பெயரைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இந்த கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கை விண்வெளியிலிருந்து கூட பார்க்க முடியும். விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இந்த பள்ளத்தாக்கு பகுதியை ஒரு "லேண்ட் மார்க்" போல பயன்படுத்தி வருகின்றனர். இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் அமெரிக்காவில் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது தேசிய பூங்காவாகும்.