யானைகளை யாருக்குத்தான் பிடிக்காது. இந்தியாவில் யானைகளை அதன் இடத்திலேயே சென்று பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். யானைகளை அதன் இயற்கையான வாழ்விடத்திலேயே சென்று கண்டு ரசிப்பதற்கு இந்தியாவில் சில தேசிய பூங்காக்கள் உள்ளன. இயற்கை சூழலில் வளரும் இந்த யானைகள் பிரம்மாண்டமான உருவமைப்பை கொண்டு விளங்குவதை காண்பதே மெய்சிலிர்க்க வைக்கும். காட்டுப் பகுதியில், கிட்டத்தட்ட 11 அடி உயரத்துடன் இயற்கையாக உலா வரும் யானைகள் நம்மை பிரமிக்க வைக்கும்!
யானைகளை ரசித்துப் பார்ப்பதற்கான இடங்கள் சில:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் ராமகங்கா நதிக்கரையோரம் மற்றும் அடர்ந்த காடுகளிலும் யானைகளை காணலாம். வனவிலங்கு ஆர்வலர்களுக்கு இது மிகவும் ஏற்ற இடம். இந்த தேசியப் பூங்கா புலிகளின் எண்ணிக்கைக்கு பிரபலமாக அறியப்பட்டாலும் யானைகளும் இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இங்கு யானைகளை அதன் வாழ்விடத்திலேயே கண்டு ரசிப்பதற்கு யானை சஃபாரி வசதியும் உள்ளது. ஆன்லைனில் புக் செய்து விட்டு செல்லும் வசதியும் உள்ளது. விடியற்காலை 5 - 6, 6 - 7 என தினம் இரண்டு முறை காட்டுப்பகுதியில் யானை சஃபாரி செய்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் இங்குதான் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் காணப்படுகின்றன.
அஸ்ஸாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இங்குள்ள அடர்ந்த காட்டில் யானைகள், புலிகள், காண்டாமிருகங்கள் மற்றும் அரிய வகை பறவைகளையும் காண முடியும்.
மத்திய பிரதேசத்தின் கன்ஹா தேசிய பூங்கா சாகசமான யானை சஃபாரிக்கு புகழ்பெற்றது. இங்கு யானை சஃபாரி செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும். ஜீப் சஃபாரியால் அணுக முடியாத பூங்காவிற்குள் இருக்கும் இடங்களை இந்த யானை சஃபாரி மூலம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அணுக உதவுகிறது.
கர்நாடகாவின் பந்திப்பூர் இடத்தில் யானைகளின் நடமாட்டத்தை கபினி ஆற்றின் அருகே காண முடியும். திறந்த புல்வெளிகள் சூழ்ந்த ரம்யமான இடத்தில் யானைக் கூட்டங்களைக் காண்பது பரவசமூட்டும்.
உதகையில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசினகுடியில் இருக்கும் வனப்பகுதியில் அதிகாலை ஆறரை மணி முதல் எட்டரை மணி வரை, மாலை 3 முதல் 6 மணி வரை யானை மீது சஃபாரி செய்யும் வசதி உள்ளது. அத்துடன் தெப்பக்காடு யானை முகாம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். வனப்பகுதியில் சிறுத்தைகள், புலிகள், மந்தி குரங்கு, சோலை மந்தி, சாம்பார் மான், காட்டெருமை, யானைகள் என பல வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
கேரளாவில் அமைந்துள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகும். பசுமையான காடுகள் மற்றும் மூடுபனி மலைகளுடன் அமைந்துள்ள இப்பகுதியில் யானைகள் நீர்நிலைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்வதை நம்மால் காண முடியும்.
கர்நாடகாவில் அமைந்துள்ள நாகர்ஹோல் தேசிய பூங்கா யானைகளின் வாழ்விடத்திற்கு பெயர் பெற்றது. அடர்ந்த காடுகள், ஆறுகள், திறந்த புல்வெளிகள் நிறைந்திருப்பதால் இங்கு யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியார் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் யானைகள் அதிகம் உள்ளன. இங்கு இந்த ஏரியில் யானைகள் தண்ணீர் குடிக்க வருவதைக் காண முடியும். அத்துடன் யானைகள் ஆனந்தமாக குளிப்பதையும் கண்டுகளிக்க முடியும்.
1940இல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வன காப்பகம் இது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்காவில் யானைகளைக் கண்டு ரசிக்க முடியும். இந்த பூங்கா. அடர்ந்த காடுகள், பசுமை நிறைந்த மலைகள், நதிகள், பலவகையான விலங்குகளைக் கொண்டது. யானைகள், புலிகள், சிறுத்தைகள் என வனவிலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக திகழ்கிறது.