வெளிநாட்டுக்குச் செல்வதென்பது ஒவ்வொருவருக்கும் பெருமையான மற்றும் மகிழ்ச்சிகரமான விஷயமாகும். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வெளிநாட்டிற்குச் செல்லுவதற்கு முன்னால் பல விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். அப்போதுதான் நாம் எந்த பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வெளிநாட்டிற்குச் சென்று திரும்ப முடியும்.
நீங்கள் ஜனவரி மாதம் ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். உங்கள் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லத்தக்கதாக (Validity) அதாவது ஜீன் மாதம் வரை ஆக்டிவாக இருப்பது நல்லது.
நீங்கள் எந்த நாட்டிற்குச் செல்ல இருக்கிறீர்களோ அந்த நாட்டிற்கான விசாவை முறையாக விண்ணப்பித்து வாங்க வேண்டும். சுற்றுலா விசா என்றால் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை தருவார்கள். பல நாடுகள் தற்போது சுற்றுலாவை ஊக்குவிக்க பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். சுற்றுலா விசா மூலம் ஒரு நாட்டிற்குச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை தங்கலாம். சில நாடுகளில் ஆறு மாதங்கள் வரை அனுமதிக்கிறார்கள். இது குறித்து அறிய ஒரு நல்ல பயண முகவரை அணுகுங்கள்.
வெளிநாட்டிற்குச் சென்றால் உங்கள் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்திருங்கள். பாஸ்போர்ட் தொலைந்து போனால் நீங்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வெளிநாடுகளில் எங்கே வெளியே சென்றாலும் கையில் பாஸ்போர்ட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் என்பதை மறக்காதீர்கள்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் வரை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த தொகை மாறுபடும். அதற்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. உங்கள் பயண முகவரை அணுகி முகவர் மூலம் முறைப்படி வெளிநாட்டுக் கரன்சிகளைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள். அவர் கரன்சிகளை நீங்கள் முறைப்படி பெற்றதற்கான ஒரு டாக்குமெண்ட்டையும் தருவார். அதை வெளிநாட்டிற்குச் செல்லும் போது பத்திரமாக வைத்திருங்கள்.
பணப்பரிமாற்றத்திற்காக உங்கள் ஏடிஎம் கார்டையும் நீங்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தலாம். உங்கள் வங்கியை அணுகினால் உங்கள் ஏடிஎம் கார்டை இன்டர்நேஷனல் டெபிட் கார்டாக (Internation Debit Card) ஆக்டிவேட் செய்து தருவார்கள். இது ஒரு பாதுகாப்பான வழியும் கூட.
உங்கள் டிராவல் டிக்கெட், பாஸ்போர்ட், அடையாள அட்டைகள், ஹெல்த் இன்ஷீரன்ஸ் பிரதிகள் முதலானவற்றை ஸ்கேன் செய்து கைப்பேசியில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சலிலும் போட்டு வையுங்கள். எல்லாவற்றிலும் ஒன்றிரண்டு பிரதிகளையும் வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளிநாட்டிற்குச் செல்லுவதற்கு முன்னால் ஹெல்த் இன்ஷீரன்ஸை எடுப்பது மிக மிக முக்கியம். ஏனென்றால் அங்கு மருத்துவச் செலவுகள் மிக மிக அதிகம். ஹெல்த் இன்ஷீரன்ஸ் இல்லாமல் சென்று ஒருவேளை உடல் நலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் பெரும் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே ஹெல்த் இன்ஷீரன்ஸை எடுக்க மறக்காதீர்கள்.
ஒவ்வொரு பயணியும் விமானத்தில் ஒரு குறிப்பிட்ட எடை அளவிற்கு உடமைகளை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் சென்றால் கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். கையடக்க டிராவல் எடை மெஷின்கள் முன்னூறு ரூபாய்க்குள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதை வாங்கி உடன் வைத்துக் கொண்டு எடை போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில் முன்பின் அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் தேவையின்றி பேசாதீர்கள். நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அவர்கள் தவறான நபர்களாக இருந்தால் அவர்கள் மூலம் உங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் முன்பு இண்டர்நேஷனல் ட்ராவல் மொபைல் அடாப்டர் (International Travel Mobile Adapter) வாங்கிக் கொண்டு செல்லுங்கள். இதைக் கொண்டு நமது கைப்பேசி, லேப்டாப் மற்றும் கேமிராக்களை எந்த சிரமும் இன்றி சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் முன்னால் அந்த நாடுகளுக்குச் சென்று வந்த உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கலந்தாலோசியுங்கள். அவர்கள் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு உபயோகமாக தகவல்களைக் கூறுவார்கள்.
உங்கள் வெளிநாட்டுச் சுற்றுலா இனிமையாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.