
லா லலாலா... இந்த மியூசிக் கேட்டால் 90 கிட்ஸ்க்கு டக்கென்று நினைவுக்கு வருவது லிரில் சோப் விளம்பரமும் அதில் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக நீராடும் இளம்பெண்ணும்தான்.
இந்த இடத்திற்கு நாமும் போகலாம் என்று ஒரு முறையாவது நினைத்திருந்தால் கவலையே வேண்டாம். உடனே மலைகளின் இளவரசி என சிறப்பிக்கப்படும் கொடைக்கானல் போங்க. அங்கு இருக்கும் இந்த அருவியில் சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.
பசுமையான பின்னணியில் வரும் லிரில் சோப் விளம்பரத்தின் பயனாக கொடைக்கானலில் உள்ள பாம்பார் அருவி லிரில் அருவி எனவும் அப்பகுதியில் அழைக்கப்படுகிறது.
சுற்றுலா ரசிகர்களுக்கு பூமியின் சொர்க்கமாக விளங்கும் பாம்பார் நீர்வீழ்ச்சி கொடைக்கானல் நகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் டால்பின் நோஸ் தூண் பாறைக்கு பின்பக்கமாக உள்ளது. பருவமழை மாதங்களில் பாம்பார் நதியை இயற்கை ஒரு உண்மையான மாயாஜால நீர்வீழ்ச்சியாக மாற்றுவது அற்புதம்.
கொடைக்கானலில் மெய்மறந்து போவதற்கும், நகரத்தின் இடையூறு இன்றி, அமைதியான, அழகிய தலத்தைத் தேடும் இயற்கை ஆர்வலர்களுக்கு பரவசம் தரும் சிறந்த இடமாக உள்ளது பாம்பார் நீர்வீழ்ச்சி. தழைத்தோங்கிய பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய நீர்வீழ்ச்சியான இங்குள்ள நீர்த்தேக்கம் அதன் போக்கில் வைகை ஆற்றில் சேர தெற்கு நோக்கி நிரம்பி வழிந்ததன் விளைவாக உருவானது.
நெளிவு சுழிவான இந்த நீரோடை தொடர்ச்சியான பாறை அமைப்புகளின் மீது நடனமாடி அழகான, நெடிய ஓர் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இது கிராண்ட் கேஸ்கேட் என்ற பெயரிலும் லிரில் அல்லது வட்டக்கானல் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.
பாம்பர் செல்ல அருகிலுள்ள காடுகளுக்குள் வளைந்து செல்லும் பாதைகள் மூலம் இங்கு சென்றடையலாம். கம்பீரமான மற்ற நீர்வீழ்ச்சிகளைப் போலவே பாம்பார் நீர்வீழ்ச்சிக்கான மலையேற்றமும் அனுபவிக்க ஏற்றதாக இருக்கிறது. வழுக்கும் பாறைகள் மற்றும் காடுகளின் அடர்ந்த அடிமரங்களைக் கடந்து செல்வது, கரடுமுரடான நிலப்பரப்புக்குள் செல்கிறது மலையேற்றம். முடிவில் காணும் நீர்வீழ்ச்சியானது முட்புதர்கள் வழியாக பாயும் அமைதியான நீரோடையாக அழகாக காட்சியளிக்கிறது.
காடுகளில் உள்ள எண்ணற்ற பறவைகளின் இனிய கூக்குரல்கள் மற்றும் வண்ண பட்டாம்பூச்சிகளின் அணிவகுப்புகள் கரடுமுரடான நிலப்பரப்பின் மீது ஏறும் பயணத்தை சுகமானதாகவும் எளிதானதாகவும் மாற்றும்.
பாறைகள் ஏற முடியாத அளவுக்கு வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும், பாம்பர் நீர்வீழ்ச்சியானது கீழே ஒரு தொட்டி போன்ற அழகான குளத்தை உருவாக்குகிறது. மழைக்காலத்தின் போதும் அதற்குப் பின்னரும் நீர்வீழ்ச்சியின் உண்மையான அழகு வெளிப்படுவதால், செப்டம்பர் முதல் மே மாதங்கள் பார்வையிட சிறந்த நேரம் ஆகும்.
இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டு, அழகிய நிலப்பரப்பு வழியாக பயணம் செய்வது, பாம்பார் அருவி செல்லும் பயணிகளுக்கு ஐம்புலன்களையும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.