ஜெட் லேக் (Jet Lag) என்பது தொலை தூர விமானப் பயணங்களை மேற்கொள்ளுவோருக்கு உருவாகும் ஒரு குறுகிய கால தூக்கமின்மை பிரச்னையாகும். இதை தூக்கக் கோளாறு என்றும் சொல்லலாம். இதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
விமானத்தில் மூன்று நேர மண்டலங்களுக்கு (3 Different Time Zones) மேல் நீங்கள் பயணிக்கும் போது ஜெட் லேக் என்ற பிரச்சினை உருவாகக் கூடும். உங்கள் உடலுக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அக கடிகாரம் (Internal Clock) தன்னை புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப ஒத்திசைத்துக் கொள்ள தேவைப்படுகிறது. பொதுவாக ஒரு புதிய நேர மண்டலத்தை சரி செய்ய ஒவ்வொரு மணி நேர வித்தியாசத்திற்கும் ஒரு நாள் தேவைப்படுகிறது.
நமது உடலுக்குள் அக கடிகாரம் (Internal Clock) அமைந்துள்ளது. இது நீங்கள் எப்போது விழித்திருக்க வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்பதை அவை உங்கள் உடலுக்கு உணர்த்தும் பணியைச் செய்கிறது. நீங்கள் இரண்டு அல்லது மூன்று நேர மண்டலங்களைக் கடந்து பயணிக்கும் போது வழக்கத்திற்கு மாறான நேரத்துடன் உங்கள் அக கடிகாரம் உடனடியாக ஒத்திசைக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே ஜெட் லேக் பிரச்னை உருவாகிறது. இதை சுலபமாக புரிந்து கொள்ள விளக்க வேண்டுமானால் நீங்கள் விமானத்தில் ஒரு நாள் மாலை நான்கு மணிக்கு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை ஏழு மணிக்கு பாரிஸ் சென்றடைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். உங்கள் அக கடிகாரமானது காலை ஏழு மணியாகக் கருதி செயல்படாமல் தனது வழக்கமான செயல்பாடாக காலை ஒரு மணி என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். மேற்கு திசை நோக்கி பறப்பதை விட கிழக்கு நோக்கி விமானத்தில் பயணிக்கும் போது கடுமையான ஜெட் லேக் அறிகுறிகள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கமின்மை, பகலில் தூக்கம் உண்டாவது, தலைவலி, சோர்வு, வயிற்று வலி மற்றும் எரிச்சலான மனநிலை, உங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தவோ அல்லது செயல்படவோ முடியாத நிலை முதலானவை ஜெட் லேக்கின் அறிகுறிகளாகும். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை.
ஜெட் லேக்கினால் உருவாகும் சிக்கல்கள் பொதுவாக சில நாட்களிலேயே சரியாகி விடும். ஒரு நீண்ட தூர விமானப் பயணம் விளைவிக்கும் ஜெட் லேக் பிரச்சினை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நீங்கள் எவ்வளவு தூரம் பயணித்தீர்கள் என்பதைப் பொறுத்தும், உங்கள் உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் அமையும். சிலருக்கு ஜெட் லேக் பிரச்சினை சில நாட்களிலேயே சரியாகிறது. சிலருக்கு ஒரு வாரம் வரை நீடிக்கும். வயதானவர்களுக்கு ஜெட் லேக் பிரச்னையிலிருந்து மீள சற்று அதிக நாட்கள் தேவைப்படலாம். ஒரு வாரத்திற்குப் பின்னரும் இந்த பிரச்னை தீரவில்லை என்றால் ஒரு மருத்துவரை அணுகுவது சிறந்தது.
கீழ் காணும் சில வழிமுறைகள் ஜெட் லேக் பிரச்னையின் கடுமையைக் குறைக்க உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.
உங்கள் விமானப் பயணத்திற்கு முன்னால் நிறைய ஓய்வெடுக்க வேண்டும். விமானப் பயணித்தை போதிய தூக்கம் இல்லாமல் துவங்குவது ஜெட் லேக் பிரச்னையை மோசமாக்கக்கூடும்.
நீங்கள் கிழக்கு திசை நோக்கிப் பயணம் செய்கிறீர்கள் என்றால் உங்கள் பயணத் திட்ட நாளுக்கு முன் சில நாட்களுக்கு தினந்தோறும் இரவு வழக்கத்தை விட ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக படுக்கைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் மேற்கு திசை நோக்கிப் பயணிக்கிறீர்கள் என்றால் உங்கள் பயணத்திட்ட நாளுக்கு முன் சில நாட்களுக்கு தினந்தோறும் இரவு வழக்கத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
ஆல்கஹால் மற்றும் காஃபின் ஆகியவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். உங்கள் விமானப் பயணத்திற்கும் முன்னதாகவும் விமானப் பயணத்தின் போதும், விமானப் பயணத்திற்குப் பின்பாகவும் நிறைய தண்ணீர் அருந்தவும். நீரிழப்பு ஜெட் லேக் அறிகுறிகளை மோசமாக்கும் சக்தி படைத்தது.