முதுமையில் சுற்றுலா... கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்!

Tour for Senior Citizens
Tour for Senior Citizens

இளமையில் குடும்பத்தின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய, வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் சிலருக்கு, சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைப்பது வயதான பின்பு தான். சுற்றுலா செல்லும் முதியோர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

விடுமுறை நாள்களில் சுற்றுலா செல்வது என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. பலருக்கும் வயதான பிறகு தான் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமைகிறது. முதியோர்கள் சுற்றுலாவிற்கு செல்லும் போது, சில அசௌகரியங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகையால் சரியாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும்.

1. முதியோர்கள் சுற்றுலா செல்லும் போது, அதிகளவில் பொருள்களை எடுத்துச் செல்லாமல, தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு முக்கியமான பொருள்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.

2. ஓய்வு காலத்தில் செலவுக்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால், குறைந்த செலவில் சுற்றுலா செல்லத் திட்டமிட வேண்டும். சீஸன் இல்லாத நேரங்களில் சுற்றுலா சென்றால், குறைந்த செலவில் அதிக அனுபவங்களைப் பெற முடியும்.

3. முதியோர்களுக்கு பேக்கேஜ் சுற்றுலா போவது மிகவும் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், நம்முடன் நிறைய நபர்கள் வருவதால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். தங்குமிடம் மற்றும் உணவுக்காக வயதான காலத்தில் அலைய வேண்டி இருக்காது. மேலும், தங்கும் விடுதிகளில் முடிந்தவரை தரைதளத்தில் இருக்கும் அறைகளைக் கேட்டு வாங்குங்கள்.

4. சுற்றுலா செல்லும் இடங்களில் மூத்த குடிமக்களுக்கு என்று தனியாக இருக்கும் சலுகைகளைத் தெரிந்து கொண்டு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்.‌

5. வயதான காலத்தில் தொடர்ச்சியான பயணத்தைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மனம் ஒத்துழைப்பு கொடுத்தாலும், உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. ஆகவே தேவையான அளவு ஓய்வெடுக்கும் படியாக சுற்றுலாவிற்கு திட்டமிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது கவனிக்க வேண்டியவை!
Tour for Senior Citizens

6. ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வந்திருப்பதால், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது தங்களின் வயதை கட்டாயம் பதிவிடுங்கள்.

7. உணவுகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் இருப்பின், சுற்றுலாவிலும் அதனைப் பின்பற்றுங்கள்.

8. தொடர்ச்சியாக மருந்து ஏதேனும் சாப்பிடுபவர்கள், அம்மருந்துகளை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள்.

9. காலணிகளை மற்றும் உடைகளைப் பொருத்தமாக அணியுங்கள். பயண நேரத்தில் சங்கடங்களைத் தவிர்க்க இது உதவும்.

10. சுற்றுலா செல்ல உங்களின் உடலுக்கும், மனதுக்கும் ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில், சில நேரங்களில் மலைகளில் ஏற வேண்டி இருக்கும்; சில இடங்களில் வானிலை மோசமாக இருக்கலாம். இதையெல்லாம் அறிந்து, பின்பு சுற்றுலா செல்லும் இடத்தைத் தீர்மானியுங்கள்.

11. சுற்றுலாவில் உங்களைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதையும் கவனித்துக் கொண்டே இருங்கள். தவறான எண்ணத்தில் உங்களை யாரேனும் அணுகினால், தற்காத்துக் கொள்ள இது உதவும்.

12. சுற்றுலா சென்ற பிறகு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அடிக்கடி பேசுங்கள். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் மற்றும் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com