உலக அளவில் எரிபொருள், வாகனங்கள், அத்தியாவசிய கருவிகள் சந்தைக்கு பிறகு 4 வது அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக இருப்பது சுற்றுலாதான். கல்விச் சுற்றுலா, கலாசார சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உண்டு. போக்குவரத்துத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என பல துறை சார்ந்தவர்கள் சுற்றுலா மூலம் பயன்பெறுகின்றனர். பூமியில் உள்ள பத்து பேரில் ஒருவர் சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறார்கள்
உலகளவில் ஆஸ்திரியா நாட்டினர்தான் சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அங்கு ஊதியத்துடன் கூடிய 22 பயண விடுமுறை நாட்களை அந்நாட்டு அரசு மக்களுக்கு வழங்குகிறது.
உலகளவில் மிகப்பெரிய சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி உள்ளது. ரஷ்யாவில்தான். இங்கு இஸ்மாயிலோவா எனுமிடத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் விடுதியில் 7,500 பேருக்கு மேல் தங்க முடியும்.
உலகளவில் சுற்றுலா செல்ல மக்கள் விரும்பும் நாடு பிரான்ஸ் நாடுதான். இந்தியாவில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது தாஜ்மகால் தான். இங்கு ஆண்டு தோறும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வருகிறார்கள். நம் பெருமையையும் கலாசாரத்தையும் உலகுக்கு உணர்த்தும் மாமல்லபுரம் இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் தமிழகத்தில் முதன்மையானது. தற்போது இந்தியாவின் முதல் பசுமை பாரம்பரிய நினைவு சின்னங்களை கொண்ட இடங்களில் ஒன்று. இங்கு சூரிய ஒளியில் இயங்கும் மின்விளக்குகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புகளை கொண்டது என்பதால் இந்த பெருமை. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் உலக மக்களை கவர்ந்த ஒரு சுற்றுலா தலம்.
உலகின் சிறந்த ஐம்பது ஹோட்டல்களில் ராஜஸ்தானில் அமைந்துள்ள சுஜன் ஜவாய் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தானின் பாலியில், சிறுத்தை பார்ப்பதற்கு பிரபலமான பகுதியில் இந்த புகழ்பெற்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த மதிப்புமிக்க பட்டியலில் இடம்பிடித்து 43 வது இடத்தில் நிற்கும் ஒரே இந்திய ஹோட்டல் இதுவாகும்.இதில் முதலிடம் பிடித்த ஹோட்டல் பாங்காக் நாட்டின் கே யெல்லா ஹோட்டல்.
90 சதவீத சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணத்தால் தாங்கள் மனஅழுத்தம் மறைந்து போவதாக குறிப்பிட்டுள்ளனர். பிரச்னைகளை எதிர்கொள்ள சுற்றுலா உதவுவதாக பலர் ஒரு ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற பொருட்களுக்கு செலவிடும் தொகையால் கிடைக்கும் சந்தோஷத்தை விட சுற்றுலாவிற்கு செலவிடும்போது அதிக சந்தோஷத்தை அடைவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சந்தோஷத்தை மட்டுமே சுற்றுலா வழங்குவதில்லை அதோடு இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இயங்க என பல்வேறு நலன்களையும் வழங்குவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வயதாகும் செயல்முறையை சற்று தள்ளிப்போடுவதற்கு பயணம் மிகவும் பயனுள்ள ஆயுதமாக இருக்கலாம் என பயண ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
சுற்றுலாவிற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு பன்முகத்தன்மை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாசிட்டிவ் ஆன பயண அனுபவங்கள் "புதுமையான சூழல்கள், உடல் செயல்பாடுகள் மற்றும் சமூக தொடர்புகளின் மூலம் " மேம்பட்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இதனால் முதுமையை தள்ளிப் போட முடியும்."வயதாவது ஒரு செயல்முறை அதை மாற்ற முடியாதது. ஆனால் அதை தாமதப்படுத்த முடியும்.”என்கிறார்கள்.