
வார இறுதியில் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டு சென்னையிலிருந்து காவேரி எக்ஸ்பிரஸில் இரவு 9.15க்கு கிளம்பி காலை ஏழரை மணிக்கு மைசூர் வந்தோம். அங்கிருந்து கர்நாடகா பஸ்ஸில் 2 மணிநேரம் பயணம் செய்து மசினகுடிக்கு வந்தோம்.
வார இறுதி நாட்களை செலவிட சிறந்த இடம் இது. அங்கு ஏற்கனவே தங்குவதற்கு ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு புக் செய்து இருந்தோம் ரொம்ப அழகான ஹோம்லி லுக்கில் இருந்தது
மசினகுடி என்னும் அழகான மலை கிராமம். நீலகிரியில் இப்படி ஒரு ஊர் இருக்கா என ஆச்சரியப்படுவீர்கள். ஊட்டிபோல் இங்கு கடினமான கடுமையான குளிர் கிடையாது. இதமான வெப்பநிலை மற்றும் குளிர்ச்சியான இடம். அடர்ந்த காட்டிற்குள் அழகாய் அமைதியாய் இருக்கும் கிராமம். ஊட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் இருந்தும் நேரடியாக செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது. முதுமலையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தெப்பக்காடு யானைகள் முகாம்:
மசினகுடியில் இருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் மிகவும் முக்கியமான ஸ்பாட். இங்கு யானைகளுக்கு உணவுகள் தயாரித்து வைக்கும் இடம் உள்ளது. அங்கிருந்து யானைகளுக்கு உணவுகளை (பெரிய பெரிய உருண்டைகளாக) எடுத்துச் சென்று கொடுப்பதை அழகாக பார்த்தோம். யானைகள் அழகாக வரிசை கட்டி நின்றிருந்தது. அதை குளிப்பாட்டுவதும், சாப்பாடு கொடுப்பதும் பார்க்க ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
போக்குவரத்து:
மசினக்குடியில் வசித்து வரும் மக்களின் பிரதான தொழில் சுற்றுலாவும், கால்நடை மேய்ப்பும்தான். மசனகுடிக்கு ஊட்டியில் இருந்தும் கூடலூரில் இருந்தும் குறைந்த அளவில்தான் பேருந்து வசதிகள் உள்ளன. இங்குள்ள மக்கள் போக்குவரத்திற்கு ஜீப்புகளையே பெரிதும் நம்பி உள்ளனர். சுற்றி 14 குக்கிராமங்கள் உள்ளன என்றும், இந்த கிராம மக்களும் ஜீப்களைத்தான் நம்பியுள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.
உணவு மற்றும் தங்கும் வசதிகள்:
இங்கு தங்குவதற்கு ரிசார்ட்கள் உள்ளன. உணவைப் பொறுத்தவரை கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் இங்கு தமிழகம் மட்டுமல்லாது கேரள உணவுகளும் கிடைக்கிறது.
மைசூர் மற்றும் ஊட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்காவின் ஒரு பகுதிதான் மசினகுடி. ஏராளமான வனவிலங்குகள், பறவைகள், இயற்கை சூழல் நிறைந்த காட்சிகள் நம் கண்களை கவர்கின்றது. யானைகள், கரடிகள், மான், சோலை மந்தி, காட்டுப்பன்றி, பறக்கும் பல்லி போன்ற ஏராளமான உயிரினங்கள் இங்கு உள்ளன. இவற்றைக் காணவேண்டும் என்றால் ஜீப் சபாரியில் சென்று காணலாம்.
தேயிலை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்கள் பார்க்க வேண்டியவை. காலை 6:30 முதல் 8 வரை மாலை 3 முதல் 6 மணி வரை சபாரி செய்யலாம். புள்ளி மான்கள், சிங்கவால் குரங்குகள் போன்றவற்றை கண்டுகளிக்கலாம்.
மசினகுடிக்கு வரும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை நம்மால் காணமுடிகிறது. எளிதில் மறக்க முடியாத இன்பமான சுற்றுலா பயணமாக அமைந்தது. இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை அங்கிருந்து புறப்பட்டு மைசூர் வந்து சாமுண்டீஸ்வரி கோவிலை தரிசனம் செய்துவிட்டு திரும்பவும் ரயிலில் பயணத்தை தொடர்ந்தோம்.