ஹைதராபாத்தைச் சுற்றிப் பார்க்கலாம் வாங்க!

சார்மினார்...
சார்மினார்...

சென்னையிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஹைதராபாத். மிகவும் புகழ் பெற்ற ஒரு நகரம். சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயண நேரம் சுமார் 14 மணி நேரம் மட்டுமே. சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்தின் சொகுசுப் பேருந்துகளும் இயக்கப் படுகின்றன. பயண நேரம் 12 மணி நேரந்தான். எப்போதுமே ரயில் பயணம் அலாதியானது. சிக்கனமானது. எனவே நாம் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வோம்.

ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு அருகில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. ஆனால் லக்டி கா புல் (Lakdi ka pul) என்ற இடத்தில் தங்கிக் கொண்டால் அனைத்து இடங்களுக்கும் சுலபமாகச் சென்று வர மிகவும் வசதியாக இருக்கும். பயணச்செலவு மிகவும் சிக்கனமாகவும் அமையும். மேலும் இந்த இடத்தைச் சுற்றி நிறைய சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் நடந்தே சென்று பல இடங்களையும் பாரத்து மகிழலாம்.

இனி ஹைதராபாத்தில் நாம் பார்த்து மகிழ வேண்டிய சுற்றுலாத் தலங்களை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்ப்போம்.

லும்பினிப் பூங்கா

லும்பினிப் பூங்கா
லும்பினிப் பூங்கா

லும்பினிப் பூங்காவில் நிறைய விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர் சிறுமியர் அனைவரும் இங்கே விளையாடி மகிழலாம். ஒரு சிறிய ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த பூங்காவிற்கு விஜயம் செய்தால் உசேன்சாகர் ஏரிக்குள் அமைந்துள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலையினை காணலாம். ஹைதராபாத்தையும் செகந்திராபாத்தையும் இணைக்கும் ஏரி உசேன்;சாகர் ஏரி.

இந்த ஏரியின் நடுவில் மகான் புத்தருடைய பிரம்மாண்டமான சிலையினை அமைத்துள்ளார்கள். லும்பின் பார்க்கின் உள்ளே உசேன்சாகர் ஏரிக்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சிலைக்கு படகுப் போக்குவரத்து உள்ளது. சுமார் ஐந்து நிமிடங்களில் புத்தர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு படகின் மூலம் கொண்டு செல்லுகிறார்கள். தீவு போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இறங்கி பிரம்மாண்டமான புத்தர் சிலையினைச் சுற்றி வந்து அழகை ரசித்துத் திரும்பலாம். மாலை ஆறு மணிக்கு வண்ணமயமான லேசர் விளக்குகளை இயக்குகிறார்கள். உசேன் சாகர் ஏரியில் ஸ்பீடு போட்டுகளையும் இயக்குகிறார்கள். நான்கு பேர்கள் பயணிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்த படகுச்சவாரி மிகவும் சாகசங்கள் நிறைந்ததாக மறக்க முடியாத அனுபவமாக உங்கள் மனதில் பதியும்.

இதையும் படியுங்கள்:
சொர்க்கப் பதவி பெற்றுத் தரும் விடங்கலிங்க தரிசனம்!
சார்மினார்...

பிர்லா மந்திர் மற்றும் பிளானடோரியம்

பிர்லா மந்திர் பெருமாள் கோயில்
பிர்லா மந்திர் பெருமாள் கோயில்

பிர்லா மந்திர் பெருமாள் கோயில். திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருப்தி ஏற்படுகிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள பிளானடோரியத்தில் ஆங்கிலம் தெலுங்கு என இரண்டு மொழிகளில் விண்வெளி ஒளிஒலிக்காட்சிகளை நடத்துகிறார்கள். சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி பயனுள்ள ஒரு அறிவியல் நிகழ்ச்சியாகும். இதை ஒட்டி அமைந்துள்ள அறிவியல் பூங்காவிற்குள் ஏரானமான அறிவியல் தகவல்கள் உள்ளன. சிறுவர் சிறுமியர் இந்த பூங்காவிற்குச் சென்று அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

சார்மினார்

சார்மினார்
சார்மினார்

சார்மினார் என்பது உருது வார்த்தை. நான்கு உயர்ந்த கோபுரம் என்பது இதன் அர்த்தம். முகம்மது குலி குதுப் ஷா என்ற மன்னரால் கி.பி.1591 ல் இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டடம் அமைக்கப்பட்டது. சதுர வடிவத்தில் அமைந்த இந்த புகழ்பெற்ற கட்டடம் ஒவ்வொரு பக்கமும் 31.95 மீட்டர் அகலம் கொண்டது. ஓவ்வொரு மூலையிலும் உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. ஓவ்வொரு கோபுரமும் சுமார் 56 மீட்டர் உயரம் கொண்டது. இதற்குள் அமைக்கப்பட்டுள்ள 146 சுழல் படிக்கட்டுகளின் மூலம் மேலே சென்று சார்மினார் பகுதியை ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்கலாம். சார்மினார் பகுதியில் சுமார் 14000 கடைகள் இருக்கின்றன. இப்பகுதி லாட் பஜார் என்று அழைக்கப்படுகிறது. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற முத்துமாலைக் கடைகள் இந்த பகுதியிலேயே அமைந்துள்ளன. இதுமட்டுமன்றி பெண்களைக் கவர்ந்த மணிகள்> கம்மல்> வளையல்கள் மற்றும் துணிகள் செருப்புகள்> இனிப்புகள் என அனைத்து வகையான பொருட்களையும் இந்த பகுதியில் உங்கள் விருப்பம் போல பேரம் பேசி வாங்கலாம்.

சாலர்ஜங் மியூசியம்

சாலர்ஜங் மியூசியம்
சாலர்ஜங் மியூசியம்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள சாலர்ஜங் மியூசியம் உலகப்புகழ் பெற்றது. மிர் யூசுப் அலிகான் எனும் தனி மனிதரால் சேகரிக்கப்பட்ட கலைப்பொக்கிஷங்களைக் கொண்ட இந்த மியூசியம் உலகின் மிகப்பெரிய மியூசியங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு நாள் முழுக்க செலிட்டாலும் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள கலைப்பொக்கிஷங்களை உங்களால் காண முடியாது. ஆயிரக்கணக்கான கலைப் பொக்கிஷங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சார்மினார் செல்லும் வழியில் இந்த பிரம்மாண்டமான மியூசியம் அமைந்துள்ளது. இந்த மியூசியத்தில் புகழ்பெற்ற ஒரு கடிகாரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு மணிக்கும் ஒரு மனிதன் வெளியே வந்து மணியை அடித்துவிட்டுச் செல்லும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும். பகல் பணிரெண்டு மணிக்கு இந்த காட்சியினைக் காண கூட்டம் அலைமோதுகிறது.

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை
கோல்கொண்டா கோட்டை

ஹைதராபாத்தில் அமைந்துள்ள கோல்கொண்டா கோட்டை ஒரு அற்புதமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். தொடக்கத்தில் இந்த கோட்டை மண்ணால் அமைக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த குதுப் ஷா மன்னர்களால் சுமார் 62 ஆண்டு காலஅளவில் இந்த கோட்டை கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் பதினோரு கிலோமீட்டர் தொலைவில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையில் ஒரு அதிசயமான அமைப்பு இருக்கிறது. கோட்டைக்குள் எதிரிகள் யாராவது நுழைந்தால் அதை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உயர்ந்த இடத்தில் இருக்கும் மன்னருக்குத் தெரிவிக்க வேண்டுமல்லவா ? கோட்டையின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய மண்டபத்தின் கீழ் நின்று கைதட்டினால் அந்த ஒலி மன்னர் இருக்கும் இடத்திற்கு வெகு துல்லியமாக பிரதிபலிக்கிறது. இந்த கோட்டைக்குச் செல்லும் போது இதை நீங்கள் தவறாமல் செய்து பார்த்து நம் முன்னோர்களின் கட்டடக் கலை அறிவை உணருங்கள்.

நேரு உயிரியல் பூங்கா

நேரு உயிரியல் பூங்கா
நேரு உயிரியல் பூங்கா

ஹைதராபாத் உயிரியல் பூங்கா நேரு உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. 1959 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா 1963 ஆம் ஆண்டில் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. சுமார் 380 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா இந்தியாவில் உள்ள உயிரியில் பூங்காக்களில் மிக முக்கியமானதாகும். இந்த பூங்காவில் சுமார் 250 வகையான விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் பராமரிக்கப்படுகின்றன. இந்த பூங்காவிpற்கு திங்கட்கிழமை விடுமுறை. மற்ற நாட்களில் தினமும் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது மணிவரை திறந்திருக்கும்.

ராமோஜி பிலிம் சிட்டி

ராமோஜி பிலிம் சிட்டி
ராமோஜி பிலிம் சிட்டி

ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டி என்றொரு திரைப்பட நகரம் இயங்குகிறது. திரைத்துறையில் ஆர்வம் உடையவர்கள் இந்த இடத்திற்குச் சென்று இரசிக்கலாம். சாஃப்ட்வேர் துறையில் ஆர்வம் உடையவர்கள் ஹைடெக் சிட்டிக்கு விஜயம் செய்யலாம். தாவரவியலில் ஆர்வம் உடையவர்கள் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹைதராபாத் தாவரவியல் பூங்காவிற்குச் சென்று வரலாம்.

ஹைதராபாத் கண்ணுக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் விருந்தளிக்கும் ஒரு அற்புதமான நகரம். இந்த நகரத்தில் மிகவம் புகழ் பெற்றது பிரியாணி. இதுமட்டுமின்றி பிஸ்கட் போன்ற பேக்கரி உணவுகளும் ஹைதராபாத்தில் மிகவும் சிறப்பான வகையில் கிடைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com