சொர்க்கப் பதவி பெற்றுத் தரும் விடங்கலிங்க தரிசனம்!

திருவாய்மூர்நாதர்
Thiruvaaimurnatharhttps://www.tamilkovil.in
Published on

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டத்தில் உள்ளது திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில். மூலவர் வாய்மூர்நாதர் எனும் திருநாமத்தோடு சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். பாலின் நன்மொழியாள்,க்ஷீரோபவசனி என்ற பெயரில் அம்பாள் அருள்புரிகிறாள். தல விருட்சம் பலாமரம். தீர்த்தம் சூரிய தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 124வது தலம் இது. சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. ரத்தின சிம்மாசனத்தில் தியாகராசர் நீலவிடங்கர் கமல நடனம் ஆடும் அழகிய தோற்றம். நவக்கிரகங்களில் ஒருவரான சூரியன் இத்தலத்து இறைவனை பூஜித்து துன்பம் நீங்க பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் சூரியனின் கதிர்கள் சுவாமி, அம்பாள் மேல் படுவதைக் காணலாம்.

இங்கு விடங்கலிங்கம் என்று மிக அழகான சிறிய லிங்கம் உள்ளது. இதை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருக்கிறார்கள். அர்ச்சகரிடம் சொன்னால் அதை எடுத்து காட்டுவார். இதனை தரிசிக்க சொர்க்கம் நிச்சயம் கிட்டும் என்றும், அகால மரணம் ஏற்படாது என்பதும் நம்பிக்கை.

இங்குள்ள நவகிரகங்கள் நேர் வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் விலகும் என்று கூறப்படுகிறது. காசியில் அஷ்ட பைரவர்கள் உள்ளது போல் இக்கோயிலிலும் 8 பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசிக்க பயம் விலகும். நான்கு பைரவர் சிலைகளுடன் நான்கு தண்டங்கள் பைரவ அம்சமாக இங்குள்ளன.

இதையும் படியுங்கள்:
ஒரு பைசா செலவழிக்காமல் ஆரோக்கியம் பெறலாம்! எப்படி தெரியுமா?
திருவாய்மூர்நாதர்

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. இக்கோயிலில் கல்வெட்டுகள் பல உள்ளன. பல்லவ, சோழ மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி ரிஷபத்தின் மேல் காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பாகும். இக்கோயில் பைரவருக்கு அஷ்டமியில் பூஜையும், ஐப்பசி மாத பிறப்பன்று தியாகராசருக்கு சிறப்பான அபிஷேகமும் நடைபெறும்.

இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாக பிரம்மோத்ஸவம், ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி போன்றவை நடைபெறுகின்றன. பிரம்மன் முதலிய தேவர்கள் தாரகாசுரனுக்கு பயந்து பறவை உருவம் எடுத்து சஞ்சரிக்கையில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு பாவம் நீங்க பெற்றதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com