திருநெல்வேலி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அல்வா மட்டும்தான். புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் என திருநெல்வேலியை சுற்றிலும் நிறைய நாம் ரசிக்க வேண்டிய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமான ஐந்து இடங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 17ஆவது புலிகள் காப்பகமாகும். 1988ம் ஆண்டு களக்காடு புலிகள் சரணாலயமும், முண்டந்துறை புலிகள் சரணாலயமும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த காப்பகம் உருவாக்கப்பட்டது.
பறவை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் அரியகுளம். இங்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பலவகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக கூட்டமாக வருகின்றன. அவற்றுள் ஸ்பாட் டவ், க்ரீன் சாண்ட்பைப்பர், பிளாக் விங்கிடு ஸ்டில்ட் மற்றும் காமன் கூட் ஆகிய பறவைகள் காண்பதற்கு அரிதானவை. இந்த சரணாலயம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமையப் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதியில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம்தான் மாஞ்சோலை. இங்கு கண்ணை கவரும் பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்டுகள் அமையப் பெற்றுள்ளன. மாஞ்சோலையில் விளையும் தேயிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு மிகவும் பிரபலமானது. மாஞ்சோலையில் உள்ள குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து, கோதையாறு ஆகிய இடங்கள் சுற்றுலா செல்வோரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வற்றாது வளம் கொழிக்கும் தாமிரபரணி ஆறு பாயும் வழித்தடத்தில் அமையப்பெற்றுள்ளது அகத்தியர் அருவி. இங்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் வற்றாமல் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த அருவிக்கு அருகில்தான் பாபநாசம் சிவன் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் நீர்ப்பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த இடமாக திகழ்கிறது கூந்தங்குளம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் உள்ள இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு விதவிதமான உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் மற்றும் காண்பதற்கு அரிதான பலவகை பறவைகள் சீசன் காலத்தில் அணிவகுத்து வரும்.