வயது ஏற, ஏற, நீண்ட பயணங்கள் அதுவும் விமானப் பயணம் அவ்வளவு எளிதாகயில்லை. இருப்பினும் பேரக்குழந்தைகளைப் பார்க்கும் ஆசையில் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் இந்த மே மாதம் (சீதோஷ்ணமும் சௌகரியமாக இருக்கும்) ஜெர்மனி சென்றோம்.
ஏற்கனவே சுற்றியுள்ள நாடுகளைப் பார்த்துவிட்டோம். குழந்தைகளுடன் வீட்டில் இருக்கவே விருப்பம் என்றோம். ஆனாலும் பெண்ணும், மாப்பிள்ளையும் அதிக நேரம் பயணிக்காமலேயே பார்க்க அழகான இடங்கள் இங்கே நிறைய உள்ளன. சுத்தமான காற்றும், எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளும் உற்சாகமூட்டும் என்று காலை கிளம்பி இரவு திரும்பக்கூடிய இடங்களாகத் தேர்வு செய்து அழைத்துச் சென்றார்கள். அந்த அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
ஸ்டார்ஸ்புர்க்
'லா பெடீட் ப்ரான்ஸ்' அதாவது குட்டி ப்ரான்ஸ் என்று அழைக்கப்படும் இது ஜெர்மனியும் ஃப்ரான்ஸும் இணையும் இடத்தில் உள்ள நகரம். ரைன் நதியின் ஊடே பெரிய பாலம் அமைந்துள்ளது. நிறைய படிகள் ஏறி நதி மற்றும் நகரத்தின் அழகைப் பார்த்து மகிழலாம். இங்கு மிகவும் புகழ் வாய்ந்த ஒரு காலத்தில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எனப் பெயர்பெற்றிருந்த கதீட்ரல், பயணிகளை கவரும் இடம். சான்ட் ஸ்டோன் என்னும் கற்களாயே முழுதும் கட்டப்பட்டதால் ஒரு வகையான சிவப்பும் பழுப்பும் கலந்த இயற்கை வண்ணத்தில் விளங்குகிறது.
'கோதிக்' கட்டிடக்கலைக்குச் சான்றாய் நுண்ணிய வேலைப்பாடு கொண்டது. 330 படி ஏறி மேலிருந்து பார்த்தால் நகர வனப்பு மலைக்க வைக்கும். அங்கே ஒரு பொம்மை ரயில் (toy train) சாலை வழியே முழு நகரத்தையும் சுற்றிக் காட்டுகிறது. பல நகரங்களிலும் இது போன்று சுமார் 20 பயணிகள் மட்டுமே செல்லக்கூடிய வண்டி- ஒரே வண்டி போய் வந்துக் கொண்டிருக்கிறது. நமக்கு நேரமின்மையோ அல்லது நடக்க முடியாதிருந்தாலோ இது ரொம்ப சௌகரியம்.
ப்ளாக் பாரெஸ்ட்
இது காட்டை அடக்கிய நீண்டு பரந்த ஒரு பெரும் மலைத்தொடர். 6000கிலோ மீட்டர் பரப்புள்ளதால் முழுவதும் ஒரு முறையில் பார்ப்பது சாத்தியமில்லாததால் இங்குள்ளோர்கள் ஒவ்வொருமுறையும் ஒவ்வோரு இடத்தைத் தேர்ந்தெடுத்துச் செல்கிறார்கள். அதனால் இங்கு பல நுழை வாயில்கள் உண்டு.
ஏற்கனவே சென்ற முறை ப்ளாக் பாரஸ்டின் புகழ்பெற்ற குக்கு கடிகாரம் செய்யும் இடத்தைப் பார்த்ததால் இந்த முறை வேறு பக்கம் சென்றோம். இது மரவுச்சிகளின் நடுவே செல்லும் நீண்ட பாலம். நெடிதுயர்ந்த பைன் மரங்களூடே நடக்கும் அழகிய அனுபவம். அந்த பாதை முடியும் இடத்திலிருந்து ஒரு அகல மரப்பாதை சுழன்று சுழன்று ஏழு அடுக்காக இன்னும் உச்சிக்குச் செல்கிறது. அங்கிருந்து காட்டின் ஒரு பெரும் பகுதியைப் பார்க்கக்கூடிய இனிய காட்சி. அங்கு கோடையில் திடீர் திடீரென்று மழை பெய்யும். நம்மூரைப்போல் மழைக்காலம் என்று தனியே இல்லை. அதனால் வானிலை அறிக்கையைப் பொருத்துத்தான் போகும் இடம் மற்றும் நேரத்தைத் தீர்மானிக்கிறார்கள்.
அனேகமாக வானிலை கணிப்பு துல்லியமாக இருக்கிறது. மரப்பாதையில் வந்த வழியே திரும்பலாம். இறக்கம் என்பதால் சுலபம். அல்லது மேலேயிருந்து மூடிய ஸ்டீல் ஸ்லைட் ஒன்றில் அமரலாம். சட்டென்று சறுக்கியவாறே கீழிறங்கிவிடலாம். முதுகும் உடம்பும் அதற்கேற்ப வளைய முடியவேண்டும். இளம் வயதினருக்குத்தான் அந்த த்ரில் சரி வரும். வெளியே செல்ல வேறு வழி. ஒருமுறை வெளியே சென்றபின் உள்ளே வரமுடியாதபடியான சுழலும் கதவு அமைப்பு. எல்லா இடத்திலுமே இது போன்ற கதவுதான். மீண்டும் உள்ளே வர வேண்டுமென்றால் திரும்ப டிக்கட் வாங்க வேண்டும்.
சுத்தமான காற்றும், இயற்கை வளம் கொஞ்சும் ஊரையும் ஆசைதீர பார்த்துவிட்டு வரலாம்.