
சமீபத்தில் நண்பர் ஒருவர் அமெரிக்கா செல்வதற்கான பயணச்சீட்டு வாங்குவதற்கு ஒரு பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினார். அவரிடம் கடவுச்சீட்டு என்று சொல்லப்படுகின்ற பாஸ்போர்ட், அமெரிக்காவில் தங்குவதற்குத் தேவையான விசா என்ற நுழைவுச்சீட்டு ஆகியவை இருந்தன. நண்பர், அமெரிக்காவில் மூன்று மாதங்கள் தங்கி, சென்னை திரும்புவதற்கான பயணச்சீட்டும் கேட்டிருந்தார்.
அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றைப் பரிசீலித்த அந்த நிறுவனம், அமெரிக்கா பயணத்திற்கு டிக்கெட் எடுத்துத் தருவதற்கு மறுத்து விட்டது. அவரிடம், புது பாஸ்போர்ட் விண்ணப்பித்து, கிடைத்தவுடன் பயணம் செய்வது நல்லது என்று சொல்லியது. பயணச்சீட்டு எடுத்துக் கொடுக்க முடியாததற்கான காரணத்தையும் விளக்கியது.
நண்பரால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. என்னிடம் அயல் நாடு செல்வதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கும் போது, பயணச்சீட்டு எடுத்துக் கொடுப்பதற்கு ஏன் அந்த நிறுவனம் மறுக்க வேண்டும். என்னுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு சில மாதங்கள் இருக்கும் போது, இப்போதே அவசரமாக பாஸ்போர்ட் எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று நினைத்த நண்பர், மற்ற டிராவல்ஸ் நிறுவனங்களை அணுகினார்.
ஆனால், அவருடைய பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்த அனைத்து நிறுவனங்களும், டிக்கெட் எடுத்துக் கொடுக்க மறுத்ததுடன், புது பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு பயணம் செய்வது நல்லது என்றும் அறிவுறுத்தியது.
நண்பருக்கு டிராவல்ஸ் நிறுவனங்கள் நன்மை செய்திருக்கின்றன என்று சொல்ல வேண்டும். பாஸ்போர்ட்டை சரிவர கவனிக்காமல் அவருக்கு டிக்கெட் கொடுத்திருந்தால், பயண நாளன்று, டிக்கெட், பாஸ்போர்ட் சரிபார்த்து, விமானத்தில் பயணிப்பதற்கான நுழைவுச் சீட்டைக் கொடுப்பவர், அவரை பயணம் செய்ய அனுமதி மறுத்திருப்பார். அவர் கவனிக்கத் தவறியிருந்தால், அமெரிக்க வானூர்தி நிலையத்தில், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பரிசீலனை செய்து அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி அளிப்பவர், அனுமதி மறுத்து அவரை இந்தியாவிற்கு திரும்பிச் செல்லும்படி பணித்திருப்பார்.
அவருக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, என்ற விவரத்தை கணிணியில் நண்பரின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுடன் பதிவிட்டிருப்பார். இதனால், எதிர்காலத்தில் நண்பர் எப்போது அமெரிக்கா சென்றாலும், குடியேறுதல் பகுதியில் அவருடைய ஆவணங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், குடிவரவு அதிகாரியின் குடைச்சல் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
டிக்கெட் வழங்காமல் இருப்பதற்கு அப்படி என்ன சிக்கல் அவருடைய பாஸ்போர்ட்டில் இருந்தது என்று கேட்கிறீர்களா?
அவருடைய பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஐந்து மாதங்கள் மட்டுமே இருந்தன. அமெரிக்கா, கனடா உட்பட சில நாடுகளில் குடிவரவு செய்யும் அயல் நாட்டவர், அவர்களின் விசா தன்மையைப் பொறுத்து, அதிக பட்சம் ஆறு மாதம் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே, அந்த நபர்களின் பாஸ்போர்ட், குறைந்த பட்சம், ஆறு மாதம் செல்லுபடியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில், குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப் படலாம்.
அதைப் போலவே, அந்த நாட்டில் நுழைவதற்கான விசா அனுமதிச் சீட்டும், குறைந்த பட்சம் ஆறு மாதம் செல்லுபடியாக இல்லா விட்டால், அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுவார்கள்.
இதைப் போலவே, இந்தியாவிற்கு வருகின்ற அயல் நாட்டவரும், அவருடைய பாஸ்போர்ட்டில் ஆறுமாதம் செல்லுபடியாக இருக்காவிட்டால், குடியேற்றம் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுவார்கள்.
கீழ்கண்ட நாடுகளில், உங்கள் பாஸ்போர்ட்டில், குறைந்தது, ஆறுமாதம் செல்லுபடியாக இருக்க வேண்டும் :
அமெரிக்கா, இந்தியா, சைனா, எகிப்து, கனடா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி.
ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் உங்களுடைய பாஸ்போர்ட் மூன்று மாதங்கள் செல்லுபடியாக இருப்பது அவசியம். அவை டென்மார்க், பிரான்சு, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன்.
அடுத்த முறை அயல் நாடு செல்வதற்கு முன்னால், உங்கள் பாஸ்போர்ட், செல்லுபடியாக எத்தனை மாதங்கள் இருக்கின்றன, நீங்கள் செல்ல விழையும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டு பயணத்தைத் தொடருங்கள்.
உலகெங்கிலும், பல நாடுகளில், அயல் நாட்டினர் குடியேற்றம் சிக்கலாக இருக்கிறது. பயணிகளின் ஆவணங்கள் துல்லியமாகப் பரிசோதனைக்கு உள்ளாகின்றன. ஆகவே, பயணத்திற்கு முன்னால், ஆவணங்களை நன்றாகச் சரி பார்த்துப் பின்னர் பயணத்தை மேற்கொண்டால், தேவையற்ற மன உளைச்சல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.