

உள்நாட்டு பயணம் என்பது நம் சொந்த நாட்டிற்குள் பயணம் செய்வதை குறிக்கும். இந்தப் பயணங்கள் ஓய்வு, வணிகம் அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக இருக்கலாம். விமானம், ரயில், பேருந்து அல்லது சொந்த வாகனம் போன்ற எந்த போக்குவரத்து முறையையும் பயன்படுத்தலாம். சர்வதேசப் பயணம் என்பது வேறு நாட்டிற்கு பயணம் செய்வதை குறிக்கிறது. இது பொருளாதாரத்தை வளர்க்கவும், வேலை வய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது. செல்ல விரும்பும் நாட்டில் பயண கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவைகள் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தயாராக இருப்பது அவசியம். இரண்டிலுமே பயணம் என்பது புதிய அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் தரும்.
உள்நாட்டு பயணம்:
உள்நாட்டு பயணம் பொதுவாக எளிமையான திட்டமிடுதல், குறைந்த செலவு மற்றும் குறைவான ஆவணங்கள் தேவைப்படும். சர்வதேச பயணத்தைவிட செலவு குறைவாகவும், நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும். இதற்கு உள்ளூர் நாணயம் மற்றும் பணத்தை பயன்படுத்தலாம். உள்நாட்டு விமானங்களுக்கு வழக்கமான விதிகள் பொருந்தும் என்பதால் அதிக கவனமோ மெனக்கிடுதலோ தேவையில்லை. சர்வதேச பயணங்களைவிட உள்நாட்டு பயணம் பெரும்பாலும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.
குறுகிய விமான நேரப்பயணங்கள், மொழி தடைகள் இல்லாதது போன்றவை உள்நாட்டு பயணத்தை எளிதாக்குகின்றன. உள்நாட்டு பயணம் மலைகள் முதல் கடற்கரைகள் வரை நாட்டிற்குள் உள்ள மாறுபட்ட சூழலையும், வெப்ப நிலைகளையும் ஆராய அனுமதிக்கிறது. புதிய மக்களுடன் கலந்து பழகி பல்வேறு அனுபவங்களை பெற உதவுகிறது. உள்ளூர் பழக்கவழக்கங்கள், மொழி மற்றும் கலாச்சாரத்தை ஓரளவு புரிந்து கொண்டு மன அழுத்தம் இல்லாத சந்தோஷமான பயண அனுபவத்திற்கு பங்களிக்கிறது.
வெளிநாட்டுப் பயணம்:
சர்வதேசப் பயணம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வரலாறுகளை அனுபவிக்க சிறப்பான பயணமாக அமையும். வெளிநாட்டு இடங்களை பார்வையிடுவதும், மக்களின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ளவும் உதவும்.
பல்வேறு சமூகங்களுடன் ஈடுபடுவது திறந்த மற்றும் பரந்த மனப்பான்மையை வளர்ப்பதுடன், உலகைப் பற்றிய விரிவான பார்வையையும் உண்டாக்கும். வரலாற்றுச் சின்னங்கள், கட்டிடக் கலையின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும். இணையற்ற வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை அறிந்துகொள்ள சர்வதேச பயணம் பெரிதும் உதவுகிறது.
சர்வதேச பயணங்களில் மொழித் தடைகள் ஒரு சவாலாக இருந்தாலும், புதிய சொற்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதுடன், புதிய அனுபவங்களையும் பெற உதவுகிறது.
சர்வதேசப் பயணத்தில் விமான கட்டணம், தங்குமிடம், விசா செலவுகள் போன்ற அதிக செலவுகள் ஏற்படும். அத்துடன் பயணத்தை கவனமாக திட்டமிடவும் வேண்டும். முக்கியமாக பல நேர மண்டலங்களைக் கடப்பது ஜெட் லாக்கிற்கு வழி வகுக்கும். புதிய நேர மண்டலங்களுக்கு ஏற்ப நம் உடல் மாறுவதற்கு நேரம் எடுக்கும்.
இது பயணத்தின் ஆரம்ப நாட்களை பெரிதும் பாதிக்கக்கூடும். பழக்கம் இல்லாத சீதோஷணம், நோய்கள் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு போதுமான பயணக் காப்பீட்டை உறுதி செய்வதும், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதும் மிகவும் அவசியம்.