

நம் உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் அளவிலும், மக்கள் தொகையிலும் வேறுபட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் என தனிப்பட்ட வரலாறும், நாணயம், கொடி, அரசியலமைப்பு ஆகியவை இருக்கின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிபெரும்பாலும் அதன் இராணுவ வலிமை, எல்லை விரிவாக்கம், அல்லது பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றால் அளவிடப் படுகிறது. ஆனால் இதுபோன்ற எந்த வரைமுறை களுக்குள்ளும் வராத ஒரு நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
அதுதான் சிறிய ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் ஆகும். வளர்ந்த நாடுகளுக்கான அனைத்து அளவீடுகளையும் மாற்றியுள்ளது இந்த நாடு. இந்த நாட்டில் மிகவும் குறைவான வளங்கள்தான் உள்ளன. இருந்த போதிலும், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மக்களின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியமும் நம்புவதற்கு கடினமாக இருக்கின்றன.
இந்த நாட்டுக்கென்று தனிப்பட்ட நாணயமும் இல்லை. மேலும் இந்த பணக்கார நாட்டில் ஒரு சர்வதேச விமான நிலையமும் இல்லை, ஆனால் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் உலகிலேயே மிகவும் அதிகமானதாக இருக்கிறது. லிச்சென்ஸ்டீனின் வெற்றியின் ரகசியம் அது தன்னிடம் இருக்கும் வளங்களையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தியதுதான்.
லிச்சென்ஸ்டீன் நாட்டு மக்கள் தங்கள் இறையாண்மையின் சின்னங்களான நாணயம், மொழி, தேசிய விமான நிறுவனம் போன்றவற்றை கவனமாகப் பாதுகாக்கின்றனர். ஆனால் லிச்சென்ஸ்டீன் அதன் அண்டை நாடாக சுவிட்ஸர்லாந்து நாட்டு நாணயமான சுவிஸ் பிராங்கை ஏற்றுக்கொண்டதால், அதனால் வலுவான பொருளாதார கட்டமைப்பை பெறுவது சாத்தியமாகியுள்ளது.
லிச்சென்ஸ்டீன் தேவையற்ற அதிக செலவை ஏற்படுத்தும் திட்டங்களைத் தவிர்க்கிறது. இதன் மூலம் மத்திய வங்கியிலிருந்தும், நாணய மேலாண்மையின் சுமையிலிருந்தும் தன்னை அந்த நாடு தன்னை காப்பாற்றிக் கொள்கிறது. இதேபோல், அது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவின் போக்குவரத்து நெட்வொர்க்குகளைப் தன்னுடைய சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம் பலபில்லியன் கணக்கான டாலர் அள்வு தேவையற்ற செலவுகளை அது தவிர்த்துள்ளது.
லிச்சென்ஸ்டீன் நாட்டில் சமூக விரோத செயல்கள் முற்றிலும் கிடையாது என்னும் தகவல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. லிச்சென்ஸ்டீனின் உண்மையான பலம் தொழில் மற்றும் புதுமைகளில் உள்ளது. பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ-டிரில்கள் முதல் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் துல்லியமான தொழில்நுட்பத்தில் லிச்சென்ஸ்டீன் முக்கியமான இடத்தில் உள்ளது. கட்டுமான உபகரணங்களில் உலகளாவிய தலைவராக இருக்கும் Hilti, லிச்சென்ஸ்டீனின் தொழில்துறை வலிமையின் ஒரு முக்கிய அடையாளமாகும்.
இங்கு பல வலிமையான நிறுவனங்கள் செயல் படுகின்றன. இங்கு மக்கள் தொகையை விட அதிகமான பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதன் விளைவாக, வேலையின்மை என்ற பிரச்னையை இங்கு முழுவதுமாக இல்லை. மேலும் குடிமக்களின் தனி நபர் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
லீச்சென்ஸ்டீன் பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பெருமைப்படும் நாடாக உள்ளது. இந்த நாட்டிற்கு கடன் பிரச்னை இல்லை, மேலும் அரசாங்கம் உபரி வருமானத்தை ஈட்டுகிறது. மொத்த நாட்டிலுமாக ஒரு சில கைதிகள் மட்டுமே உள்ளதால், இந்த நாட்டில் நிலவும் பாதுகாப்பும் அமைதியும் பிற உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன.