
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இருந்த இடத்தில் இருந்தே நம்மால் பல சேவைகளை அணுக முடியும். குறிப்பாக வியாபார நிறுவனங்கள் ஆன்லைனில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருவதால், வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாகவே அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.
சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்யும் போது, ஆன்லைனிலேயே போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உள்ளூர் டாக்சி வரை புக்கிங் செய்கின்றனர். ஆனால் இவர்களை குறிவைத்தும் மோசடி தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அவ்வகையில் ஆன்லைன் புக்கிங்கில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
இணையத்தின் வளர்ச்சி நமக்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கிறதோ, நாம் எச்சரிக்கையாக இல்லையென்றால் அதே அளவிற்கு தீமைகளையும் அளிக்கும். ஏனெனில் ஆன்லைனில் புக்கிங் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை மட்டுமே குறிவைத்து ஒரு கும்பல் ஏமாற்ற தயாராக இருக்கிறார்கள். நாம் சற்று சறுக்கினாலும் கூட மோசடிகாரர்களின் வலையில் விழுந்து விடுவோம்.
முன்பெல்லாம் சுற்றுலா செல்ல வேண்டுமென்றாலோ அல்லது கோயிலுக்கு செல்வதென்றாலோ, அனைத்து தேவைகளுக்கும் நேரடியாக சென்று புக்கிங் செய்வார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. உள்ளங்கையில் உலகம் குறுகி விட்டதால் ஆன்லைன் புக்கிங் வசதி வந்த பிறகு, அலைச்சலைத் தவிர்க்க பலரும் இம்முறையையே கடைபிடிக்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடிகாரர்கள், போலியான இணையதளங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி விடுகின்றனர். இதுதொடர்பான சில புகார்களும் அவ்வப்போது சைபர் கிரைம் துறைக்கு வருகின்றன.
கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில், சுற்றுலா செல்ல பலரும் திட்டமிடுவார்கள். இந்நிலையில் யாருடைய வலையிலும் நீங்கள் சிக்கி விடாமல் இருக்க விழிப்புடன் இருங்கள்.
சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் போது, இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சபரிமலை, சார்தாம், கேதார்நாத், காசி மற்றும் ராமர் கோயில் போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் போது, ஆன்லைன் புக்கிங் செய்ய நம்பகமான நிறுவனங்களின் இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். இச்சமயத்தில் எந்த நிறுவனத்தின் இணையதளத்தை பயன்படுத்துகிறீர்களோ, அந்நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அதோடு ஏற்கனவே இணையதளத்தில் புக்கிங் செய்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு ரேட்டிங் கொடுத்திருப்பார்கள். அதையும் ஒருமுறை அலசுவது நல்லது.
சில ஏஜெண்ட் நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என இணையத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இதனை உடனே நம்பிடாமல் அந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையை ஆராயுங்கள்.
ஒருவேளை போலியான இணையதளத்தில் பணத்தை செலுத்தி நீங்கள் ஏமாந்து விட்டால், https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்க வேண்டும். மேலும் 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.
கேதார்நாத் யாத்திரைக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் https://www.heliyatra.irctc.co.in மற்றும் https://somnath.org ஆகிய இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் புக்கிங் செய்து கொள்ளலாம்.