

வங்கக் கடலோரம் அமைதியான சூழ்நிலையில் ஓங்கி உயர்ந்து நின்று காட்சியளிக்கிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தலம். துறைமுக நகரமான நாகப்பட்டினத்திற்கு தெற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் யாரும் அறியாமல் சிறு கிராமமாக இருந்த இந்த இடம், இன்று அன்னையை நாடி வரும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தரும் புனிதத் தலமாக விளங்குகிறது.
வேளாங்கண்ணி அன்னையைத் தேடிவரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் ஆசியினால் வாழ்வில் பல அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள். இந்த அற்புதங்கள் காரணமாகவே, அன்னை 'புனித ஆரோக்கிய அன்னை' (Our Lady of Good Health) என்று அழைக்கப் படுகிறார். உடல் மற்றும் மன நோய்களிலிருந்து குணமடையவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் அன்னை மரியாவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், மேலும் இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.
தேவ மகனான தன் குழந்தையை கையில் அணைத்தபடி காட்சி தரும் மரியா, தன்னைக் காண வரும் பக்தர்களின் தேவைகளை ஒரு தாயின் அக்கறையுடன கவனித்துக் கொள்வதை என் சமீப வேளாங்கண்ணி பயணத்தின்போது உணர்ந்தேன்.
நாங்கள் வேளாங்கண்ணியில் புக் செய்த ஹோட்டலில் சிறிது ஒய்வெடுத்த பின் மாதா கோயிலுக்குப் போகலாம் என முடிவு செய்தோம். அந்த ஹோட்டலின் அமைப்பே ஒரு சர்ச் போல தோற்றமளித்தது எனக்கு புதிதாக இருந்தது. நாங்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். எனக்கு கிறிஸ்துவ மதத்தைப் பற்றியோ, வழிபாடு பற்றியோ அவ்வளவாகத் தெரியாது. என் கிறிஸ்துவ நண்பர்கள் அடிக்கடி வேளாங்கண்ணி போய் வருவதைப் பார்த்ததும் எனக்கும் அங்கு போகவேண்டும் என ஆவல் ஏற்பட்டது.
எனக்கு கால்களில் வலி இருந்தது. அந்த ஹோட்டலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எனக்கு சௌகரியமாக இல்லை. சரி கோயிலுக்கு போய்விட்டு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டோம். நாங்கள் சென்ற சமயம் பிரேயர் நடந்து கொண்டிருந்தது. நான் கோயிலின் வாயிலை அடைந்தபோது “உங்கள் கால் வலி கர்த்தரின் அருளால் நீங்கப் போகிறது. கஷ்டங்கள் எல்லாம் மறைந்து சுகமடைவீர்கள்” என்ற பிரார்த்தனை செய்தவரின் வார்த்தைகள் தேவமாதாவே எனக்கு கூறியதைப்போல உணர்ந்தேன்.
சிறிது நேரம் கோயிலின் உள்ளே அமர்ந்து தியானம் செய்து விட்டு வெளியே வந்தோம். கோயில் வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பக்தர்கள் பிரார்த்தித்துக் கொணடிருந்தனர். ஒரு இடத்தில் “இங்கு மந்திரிக்கப்பட்ட எண்ணெய் கிடைக்கும்” என எழுதியிருந்தது. எனக்கு அதைப்பற்றித் தெரியாததால் வாங்கவில்லை.
நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பியபோது, ஹோட்டலின் மேனேஜர் “ஒரு விஐபி அறை காலியாக உள்ளது. நீங்கள் அங்கு தங்கிக் கொள்ளலாம்” என சொல்லியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தோம். தன்னைக்காண வருபவர்களின் சிறு சிறு சௌகரியங்களையும் செய்து தரும் தாயல்லவா மரியா.
மற்றுமொரு அதிசயமும் அங்கு நடந்தது. நாங்கள் வெஜிடேரியன். அந்த ஹோட்டல் மெனுவில் இருந்ததெல்லாம் அசைவ வகைகள். சரி ஊருக்கு திரும்பும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தோம். அன்னை மரியாவுக்கு நாங்கள் சாப்பிடாமல் கிளம்புவது பொறுக்கவில்லை போலும். எங்களை நோக்கி நெற்றியில் விபூதி அணிந்த ஒருவர் வந்து “நான் இங்கு Chief Chef. உங்கள் விருப்பப்படி உணவு தயாரிக்கிறேன் சாப்பிடுங்கள் என உபசரித்தார்.
நாங்கள் கிளம்பும் முன் ஹோட்டலின் மேனேஜர், வேளாங்கண்ணி மாதா திருஉருவம் உள்ள ஒரு காலண்டரைப் பரிசளித்தார். அதில் பைபிளின் அருள் மொழிகள் இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நினைத்தபடி இல்லாமல் அந்த நாட்காட்டி காலண்டரில் மேரி மாதா படத்துடன் இந்து மத விரத தினங்கள், முகூர்த்த தினங்கள், கௌரி பஞ்சாங்கம், நட்சத்திர ராசி பலன்கள், என அனைத்து விவரங்களும் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.
நாங்கள் காரில் ஏறியவுடன் எங்கள் டிரைவர் ஒரு எண்ணெய் பாட்டிலை தந்து “இது மந்திரிக்கப்பட்ட எண்ணெய். உங்கள் கால் வலிக்காக மாதா கோயிலில் வாங்கினேன் என்று சொல்லிக் கொடுத்தார். வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு போய் அன்னையைப் பார்த்து விட்டு வந்தது தாய் வீட்டிற்கு போய் வந்த மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது.
அன்னை மரியா ஒவ்வொருவரின் ஆன்ம அருள் வாழ்விலும், உள்ள நலனிலும், உடல் நலனிலும் அக்கறை கொண்ட உன்னதமான தெய்வத்தாய்.