வியட்நாமின் ஆச்சர்யமான ஹனோய் ரயில் பாதை!

Hanoi train street
Hanoi train streetImg Credit: TOI
Published on

அது ஒரு குறுகிய தண்டவாளம். அந்த தண்டவாளத்தை ஒட்டிய இரு புறங்களிலும் தரைத்தளங்களில் கடைகள் விஸ்த்தரிக்கப் பட்டிருக்கும். நிறைய வீடுகள் இருபுறங்களிலும் இருக்கும். நிறைய சிறு வியாபாரிகள் தண்டவாளத்தின் மேல் கடை போட்டு இருப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் எச்சரிக்கை அடைவார்கள். கடைகள் அனைத்தும் தண்டவாளத்திற்கு வெளியே செல்லும். கடைககளின் மேற்கூரைகள் அனைத்தும் உள்பக்கமாக மூடப்படும். பால்கனிகளில் கூட்டமாக வேடிக்கை பார்க்க பலரும் இருப்பார்கள்.

அப்போது ஒரு அழகான ரயில் ஒன்று நீங்கள் ஆரஞ்சு பழச்சாறு குடித்துக் கொண்டிருக்கும் போது, உங்களின் பக்கவாட்டில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும். உங்கள் கையை நீட்டினால் அது ரயிலில் மீது இடிக்கலாம், ஆனாலும் அதை செய்ய வேண்டாம். நீங்கள் பழச்சாறு குடித்துக் கொண்டோ, சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டோ அதை ரசியுங்கள். ஆபத்தில்லாத வண்ணம் அந்த நினைவை படம் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த அனுபவத்தை பெற நீங்கள் நிச்சயம் வியட்நாம் நாட்டிற்கு செல்ல வேண்டும்.

உலகில் உள்ள பல அழகான ரயில் நிலையங்களில், வியட்நாமின் ஹனோய் ரயில் தெரு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டு ரயில் தெருக்களும் வியட்நாமிய அலங்காரத்தில் வடிவமைக்கப்பட்ட இரண்டு அடுக்கு காபி ஜூஸ் கடைகளுடன் ஒரு அற்புதமான சூழ்நிலையை உருவாக்குகின்றன. இந்த ரயில் தங்களை நெருக்கமாக கடந்து செல்லும் அனுபவத்திற்காகவே ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் லுடுவான் ரயில் தெரு மற்றும் புங் ஹங் ரயில் தெருவிற்கு வருகை தருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் அழகான ரயில் நிலையங்கள்!
Hanoi train street

இந்த ரயில் பாதைகள் பிரெஞ்சு காலணி ஆட்சியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன, சில காலங்களில் ரயில் சேவைகள் முடங்கிய போது பாதையில் நிறைய குடியிருப்புகள் உருவாகின. பின்னர் அந்த குடியிருப்புகளை அகற்றி அவர்களுக்கு புதிய குடியிருப்புகளை வழங்கும் அளவுக்கு அரசுக்கு வசதி இல்லாததால் பொதுவான ஒரு புரிதலோடு, மக்களின் முழு ஒத்துழைப்போடு இந்த தெருவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தெருக்கள் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ரயிலைப் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும், அப்பகுதியின் புதிய அனுபவத்தை பெறவும் பலரும் வருகிறார்கள்.

ஹனோய் ரயில் தெருவில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்று, தண்டவாளத்தில் உள்ள கஃபே ஒன்றில் ஒரு கப் காபியை குடித்துக் கொண்டே ரயில்களை ரசிப்பது. கஃபேக்கள் ரயில் செல்வதைப் பார்ப்பதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன, மேலும் பார்வையாளர்கள் அமர்ந்து தெருவின் உற்சாகமான சூழ்நிலையை அனுபவிக்கலாம். ரயில் சென்ற பின் தண்டவாளத்தில் அமர்ந்து செஸ் கூட விளையாடலாம்.

ஹனோய் ரயில் தெரு ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படும் ரயில் பாதையாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பார்வையாளர்கள் தெருவில் நடக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் மற்றும் ரயில் நெருங்கும் போது தண்டவாளத்தை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு நகர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இரண்டு கண்டங்களை இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பயணம்!
Hanoi train street

ஒட்டுமொத்தமாக, ஹனோய் ரயில் தெரு, வியட்நாமில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும், இது பார்வையாளர்களுக்கு உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை மற்றும் நகரத்தை தனித்துவமான முறையில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அவ்வப்போது அரசு இந்த பாதையில் ரயில் சேவையை பாதுகாப்பு காரணங்களாக பலமுறை நிறுத்தியுள்ளது. பின்னர் மீண்டும் தொடங்கவும் செய்கிறது. அதனால் நீங்கள் சுற்றுலா செல்லும் முன் விசாரித்து விட்டு செல்லுங்கள். ஹனோய் ரயில்தெரு 2023 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com