ஒரு கிராமத்தில் இருள் படர்ந்த சமயங்களில் கண்ணாடி பயன்படுத்தி அதன் மூலம் சூரிய ஒளியை கிராமத்திற்குள் கொண்டு வரும் விசித்திர மக்கள் வாழும் விசித்திர கிராமத்தைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கவுள்ளோம்.
உலகில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அனைத்து இடங்களுக்கும் செல்வது கடினம். தெரிந்துக்கொள்வதும் கடினம்தான். ஆனால், முடிந்தவரை உலகைச் சுற்றிப் பார்த்துவிட வேண்டும். அதேபோல் தெரிந்தும் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் இத்தாலியில் உள்ள ஒரு வினோதமான இடம்பற்றிதான் நாம் பார்க்கவுள்ளோம்.
நாம் இந்த கிராமத்தைப் பார்ப்பதற்கு முன்னர் ஒன்றை கற்பனை செய்து பார்ப்போம். சிறிது காலம் நாம் வாழும் பகுதியில், எந்த ஒளியும் இல்லாமல், வெறும் இருள் மட்டும் 24 மணி நேரமும் இருந்தால் எப்படியிருக்கும். சிறிது காலம் முடியாதல்லவா? சரி ஒரு வாரக்காலம்? அதுவும் வேண்டாம்… இரண்டு நாட்கள்?
முடியவே முடியாது… பிறகு அம்மாக்களுக்கு துணியை காய வைக்க முடியாது, அப்பாவிற்கு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது, குழந்தைகளுக்கு நிம்மதியாக விளையாடமுடியாது, அப்புறம் பெண்கள் பல கட்டுப்பாடுகளுடன் வெளியில் செல்ல நேரிடும். இத்தனை இத்தனைப் பிரச்சனைகள் உள்ளன.
இந்தப் பிரச்சனைகளை அனுபவித்த மக்கள்தான் சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள, ஆன்ட்ரோனா பள்ளத்தாக்கின் ஆழமான அடிப்பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமமான விகனெல்லாவின் மக்கள்.
பல நூற்றாண்டுகளாக, விகனெல்லாவில் வசிப்பவர்கள் சூரிய ஒளி இல்லாத குளிர்காலத்தை ஆண்டுதோறும் பல மாதங்கள் அனுபவிக்கின்றனர். இங்கு நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 வரை சூரியன் செங்குத்தான மலைகளுக்குப் பின்னால் மறைந்துவிடும். ஆகையால் அந்த மாதங்களில் எப்போதும் இருள் மட்டும்தான் இருக்கும். இது கிராமவாசிகளின் மனநிலையையும் அன்றாட நடவடிக்கைகளையும் பாதித்தது.
அதற்கான ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்தே ஆக வேண்டுமென்று அனைவரும் எண்ணினர். அந்தப் பகுதியின் மேயர் பியர்பிரான்கோ மிடாலி தனது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று உணர்ந்தார். அதன்படி எட்டு மீட்டர் அகலம் மற்றும் ஐந்து மீட்டர் உயரம் கொண்ட கண்ணாடி, 1,100 மீட்டர் உயரத்தில் மலையின் எதிர் சரிவில் நிறுவப்பட்டது.
இந்த ராட்சஸ கண்ணாடி கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் நாள் முழுவதும் சூரியனின் பாதையை பின்பற்றுகிறது. இது அரை மைல் தொலைவில் உள்ள கிராம சதுக்கத்தில் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. இது 300 சதுர யார்டுகள் பரப்பளவை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரங்களுக்கு ஒளிரச் செய்கிறது. ஆண்டின் மிகவும் குளிரான மற்றும் இருண்ட பகுதியில் கிராமத்திற்கு மிகவும் தேவையான வெப்பத்தையும் பிரகாசத்தையும் தருகிறது.
2006 இல் இந்த கண்ணாடி நிறுவப்பட்டது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது அனைவரையும் கவரும் ஒரு சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது.