
தென் இந்தியாவில், கன்னியாகுமரிக்கு அருகிலே அமைந்துள்ளது வர்கலா. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 51 கிமீ தொலைவிலும், கொல்லத்தில் இருந்து 31 கிமீ தொலைவிலும் அமைந்து உள்ளது இந்த அழகிய கடற்கரை நகரம்.
வட இந்தியாவுக்கு கோவா என்றால் தென் இந்தியாவுக்கு வர்கலா என்று பெருமையோடு மலையாள சேட்டன்கள் மார்தட்டி சொல்லும் அளவுக்கு இயற்கை அழகைக் கொண்டது வர்கலா. குறிப்பாக அங்குள்ள கடற்கரை நம்முடைய மனதை மகிழ்விக்கும். வரலாற்று சிறப்பம்சங்களை அதிகமாக கொண்டுள்ள வர்கலாவை சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது. அந்த அளவுக்கு நம்மை புத்துணர்ச்சியூட்டும் பல இடங்கள் அங்கு இருக்கின்றன.
நீண்ட அழகிய கடற்கரையை கொண்டு உள்ள கேரள மண்ணில் உள்ள பெஸ்ட் கடற்கரை என்றே வர்கலாவைச் சொல்லலாம். அரபிக் கடலின் வாசம் மூக்கை துளைக்க, மலையாள மண்ணின் பாசம் ஆளை மயக்கும் இடம்தான் வர்கலா. மிக மிக தூய்மையான தெளிவான கடல்நீரை கொண்டுள்ள வர்கலாவில் மாலை நேரம் சூரியன் மறையும் காட்சி மிக அழகாக இருக்கும்.
இங்கு மலையை ஒட்டி அமைந்திருக்கும் கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு சன் பாத் எடுக்கலாம். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர்கலாவில் சன் பாத் எடுப்பதற்காகவே வருகை தருகிறார்கள். மேலும் இங்கு பாபநாசம் கடற்கரை, பிளாக் பீச், ஓடயம் கடற்கரை, கப்பில் பீச் என நான்கு கடற்கரைகள் உள்ளன.
அதேபோல் வர்கலாவில் உள்ள லைட் ஹவுஸின் மீது ஏறி நின்று பனை மரங்களின் அழகையும், அங்குள்ள கிராம மக்களின் வாழ்கையை பறவையின் பார்வையில் ரசிக்கலாம். ஆனால் மாலை 3 முதல் 5 மணி வரை மட்டுமே வர்கலா கடற்கரை திறந்திருக்கும்.
கோவாவைப் போன்றே வர்கலாவிலும் ஹிப்பி கலாச்சாரம் உள்ளது. அங்கு ஜாலியாக ஷாப்பிங் செய்து வகை வகையான ஹிப்பி பொருட்களை வாங்கலாம். வாங்காவிட்டாலும் வேடிக்கை பார்க்கலாம்.
வர்கலாவில் இருந்து பேருந்தில் திருவனந்தபுரத்துக்கு நம்மால் செல்ல முடியும். பேருந்து, ரயில் வசதிகளும் உள்ளன. அங்கிருந்து ஒருநாள் பயணமாக கொல்லத்திற்கும் சென்று வரலாம். வாடகை மோட்டார் பைக் வசதியும் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 116 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வர்கலாவிற்கு 4 மணி நேரத்திற்குள் சென்றடைந்துவிடலாம். கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று இருப்பவர்கள், ஒருநாளாவது வர்கலாவுக்கு சென்று வந்தால் அவர்களால் ஒரு புது அனுபவத்தை பெற முடியும் என்பதே உண்மை.