
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில், திடுபே என்ற கிராமத்தின் அருகில் அமைந்துள்ள எர்மாயி அழகான நீர்வீழ்ச்சி. 120 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை கவர்ந்த வண்ணம் இருக்கிறது. அடர்த்தியான வனத்தின் நடுவில் அற்புதமாக காட்சி தரும் நீர்வீழ்ச்சி கரடுமுரடான பாறைகள் மீது அழகாக விழுகிறது. அமைதியான சூழ்நிலையில் இனிமையான ஒரு குளியல்போட ஏற்ற இடம் இது.
எர்மாயி என்றால் உள்ளூர் மொழியில் காளைகள் மாயமான இடம் என்று பொருள். முந்தைய காலத்தில் இங்கு மேயவந்த காளைகள் திடீரென மாயமாகி விடுவதாகவும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும், அதனால் இந் நீர்வீழ்ச்சிக்கு எர்மாயி என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் மேலும் 7 நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
எங்கும் பசுமை நிறைந்த மரங்களும், தாவரங்களும் சூழ்ந்த இடத்தில் அழகான காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு அடர்த்தியான காட்டுப் பகுதியில் நடந்து செல்வது அற்புதமான அனுபவத்தையும் புத்துணர்ச்சியையும் தரும்.
தட்சிண கன்னடா என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகிய கடற்கரைகளும், வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களும்தான். அது போன்றே இங்கு நீர்வீழ்ச்சிகளும் ஏராளமாக உள்ளன. அனைத்து பருவ காலங்களிலும் இங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது.
வறுத்தெடுக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க இந்த நீர்வீழ்ச்சியில் சுகமான ஒரு குளியல் போடலாம். தர்மஸ்தலா கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், திடுப்பேவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கர்நாடகாவில் அதிகம் அறியப்படாத சிறந்த சுற்றுலாத்தலம் இது. நீர்வீழ்ச்சிக்கு அருகில் கடைகளோ, உணவகங்களோ எதுவும் இல்லை. எனவே தேவையான ஸ்னாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் செல்வது நல்லது. காட்டிற்குள் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறை கூழாங்கற்களால் ஆன பாதையை அமைத்துள்ளது. யானைகள் இரவில் தண்ணீர் குடிக்க அங்கு வரும் என்றும், எனவே அங்கு இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
எங்குள்ளது? எப்படி அடைவது?
இந்த வசீகரிக்கும் நீர்வீழ்ச்சி கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் காஜூர் தர்காவில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பஸ் அல்லது ரயிலில் வருபவர்கள் சித்தாபுராவில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் வரலாம். முக்கிய நகரங்களிலிருந்து பெல்தங்கடிக்கு நிறைய தனியார் பஸ்களும், கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:
மடிகேரி, மஞ்சுஷா அருங்காட்சியகம், பனம்பூர் கடற்கரை, சென்னகேசவா கோவில், தர்மஸ்தலா போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.