

குடும்பத்துடன் மகிழ கூழையார் கடற்கரை - ஓர் அற்புதமான அனுபவம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் கொள்ளிடம் அருகே அமைந்துள்ள கூழையார் கடற்கரை (Kool Aiyar Beach) மாசற்ற இயற்கை எழிலுக்கும், அமைதியான சூழலுக்கும் பெயர் பெற்ற ஒரு கடற்கரையாகும். இது பரபரப்பான நகர நெரிசல்கள் இல்லாத, அதிகம் அறியப்படாத இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த இடத்தில் நதியும் கடலும் ஒன்றாக இணையும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக ரம்மியமாக இருக்கும்.
கூட்டம் குறைவாக இருப்பதால் இயற்கையின் அழகை ரசிக்கவும் மன அமைதி பெறவும் மிகச்சிறந்த இடமாக உள்ளது. தனிமையில் கடற்கரையை ரசிப்பது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். சிறிது நேரம் மனதிற்கு நெருக்கமானவர்களுடன், கொஞ்சம் தனிமையில் பெரிய அலைகளின் சத்தத்துடன், மறையும் சூரியனைக் கண்டு கொண்டே பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற இடம் இது.
இந்த கடற்கரைப் பகுதி அரிய வகை ஆலிவ் ரிட்லி (Olive Ridley) ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் முக்கிய இடமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரை மணலில் வந்து முட்டையிட்டு செல்லும். அந்த முட்டைகளை நாய் மற்றும் மனிதர்களிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்கு கூழையாறு பகுதிகளில் வனத்துறை சார்பில் பொறிப்பகங்கள் உருவாக்கப்பட்டு முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகிறார்கள்.
இப்பகுதி 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு அருகில் இருப்பதால், எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக மாற்ற உள்ளூர் மக்களால் பெரிதும் கோரப்படுகிறது. இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் இந்த கடல் பகுதியில் கருங்கல் தடுப்புகள் அமைக்கப்படாததால், இயற்கையான கடல் தோற்றம் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை சூழலை ரசிக்க விரும்பும் பொதுமக்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
கூட்டம் அதிகம் இல்லாத, மிகவும் தூய்மையான மற்றும் குடும்பத்துடன் அழகாக நேரத்தை செலவழிக்க ஏற்ற கடற்கரை இது. பூம்புகார் அல்லது தரங்கம்பாடி போன்ற புகழ்பெற்ற கடற்கரைகளைப் போல இங்கு வணிகமயமாக்கல் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாததால் இது அமைதியை விரும்புபவர்களுக்கு ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது.
இக்கடற்கரையின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்டே இதன் சுத்தமான, தெளிவான நீரும், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மணற்பரப்பும் தான். கடற்கரையை சுற்றி பசுமையான மரங்கள் மற்றும் அடர்ந்த தாவரங்கள் நிறைந்து காணப்படுவதால் இது ஒரு இயற்கை வனப்பகுதியின் அழகை தருகிறது. இங்கு ஏராளமான சவுக்கு மரங்கள் காணப்படுகின்றன.
மாலை நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம் இது. ஆனால் கடற்கரையில் கடைகள் எதுவும் இல்லாததால் தேவையான குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது நல்லது. கடற்கரையின் தூய்மையை காப்பதற்கு நாம் அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை வீசாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிப்பது அவசியம்.
அருகிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கூழையார் கடற்கரை சுற்றுலா தலங்கள்
கூழையாரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரை உள்ளது. இங்கு பூம்புகார் கலைக்கூடம் மற்றும் கண்ணகி சிலைகளைப் பார்வையிடலாம். கூழையாருக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு அமைதியான கடற்கரை மற்றும் மீனவ கிராமம் திருமுல்லைவாசலாகும்.
கூழையார் கடற்கரை செல்ல சிறந்த காலம் எது?
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்கால மாதங்கள் சிறந்தவை. இந்த காலகட்டத்தில் வானிலை மிகவும் இதமாகவும், குளிர்ந்த காற்றுடன் கூடிய சூழலும் நிலவுவதால் கடற்கரையை ரசிப்பதும், சவுக்கு மரக்காடுகளின் வழியே உலா வருவதும் மிகவும் இனிமையாக இருக்கும். கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் மே மாதங்களையும், வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் காலங்களிலும் செல்வதை தவிர்ப்பது நல்லது.
எங்கிருக்கிறது தெரியுமா?
மயிலாடுதுறையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டங்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது.
வார இறுதி விடுமுறையைக் கழிக்க ஒரு சிறந்த இடத்தைக் கண்டறிவதன் மூலம், உங்கள் பயணத் தேடலுக்கு ஒரு முழுமையான விடையைப் பெறுவீர்கள். திட்டமிடப்பட்ட பயணத்தின் மூலம், குறைந்த செலவில் நிறைந்த மனநிறைவைத் தரும் ஒரு சுற்றுலா அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.