

முதல் முறையாக நாம் விமானத்தில் பயணிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் நம் விமானப்பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ள முடியும். விமானத்தில் கையோடு கொண்டு செல்லும் லக்கேஜ் அளவு, செக்-இன் பெட்டிகளின் எடை, உடை, பயணத்தில் கைப்பையில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை மனதில் கொண்டு பயணத்திற்கு முதல் நாளே பெட்டிகளை தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது.
நம்முடன் வரும் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளையும் அவசரகால மருந்துகளையும் மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவற்றை தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்த வசதியாக கைப்பையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும்.
நமது இருக்கை எண், உணவு விருப்பம் இவற்றை தேர்ந்தேடுத்து, முதல் நாளே வலைதளத்தில் web check in செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் விமான நிலையத்தில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். விமான நிலையத்திலும், விமானத்திலும் உணவுப் பொருட்களின் விலை மிகமிக அதிகமாக இருக்கும். இதை மனதில் கொண்டு விமான நிலையத்திற்கு புறாப்படுவதற்கு முன்பு உன்பது நல்லது. குறைந்த நேரப்பயணமானால் இதைப் பற்றி அதிக கவலைப் படத்தேவை இல்லை.
விமான நிலையத்திற்கு சீக்கிரம் சென்றடைவதின் மூலம் பயணத்தின் கடைசி நிமிட பரபரப்பை தவிர்க்க முடியும். நாம் புறப்படத் திட்டமிட்ட நேரத்திற்கு முன், வீட்டில், கேஸ் மூடியாயிற்றா, மின் விளக்குகள், ஏ.சி., மின் விசிறிகள் அணைத்தாயிற்றா, பெட்டிகளை தவிர, முக்கியமான பயணச்சீட்டு, பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொண்டதை உறுதி செய்தல் என்ற எல்லா வேலைகளை முடித்து கிளம்பி வர கூடுதல் நேரம் கொடுப்பது நல்லது.
விமான நிலையத்திற்கு சீக்கிரமாக வந்து சேரும்போது, உங்கள் லக்கேஜ்களைச் சரிபார்ப்பதற்கும், அவசரப்படாமல் பாதுகாப்பு சோதனை மேற்கொள்வதற்கும் கூடுதல் நேரம் கிடைக்கும். உள்நாட்டு விமானங்களுக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் முன்னதாகவும், சர்வதேச விமானங்களுக்கு மூன்று மணிநேரம் முன்னதாகவும் செல்வது நல்லது.
பொதுவாக விமான நிலையங்களில் காலை நேரத்தில் பாதுகாப்பு சோதனை வரிசையில் நிற்க கூடுதல் நேரம் நிச்சயமாக தேவைப்படும். முன்கூட்டியே வருவதன் மூலம், நமது விமானத்தைத் தவறவிடாமல், எதையும் சரிசெய்து கொள்ளவும் நமக்கு நேரம் கிடைக்கும். பாதுகாப்பு சோதனையில் லேப்டாப், கைப்பை இவற்றை பதட்டத்தில் அங்கேயே விட்டுவிட்டு அவசரமாக விமானத்தில் ஏறிவிடக் கூடாது.
விமானப் பயணத்திற்கு முன் தாகத்திற்கு தண்ணீர் மட்டும் குடிக்கலாம். மதுபானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், காபி போன்றவை வேண்டாம். நாம் நீரேற்றமாக இருக்க, தண்ணீரோடு நிறுத்திக் கொள்வது நல்லது. விமானங்களில் காற்று மிகவும் வறண்டதாக இருப்பதால் நீரிழப்புக்கு வழி வகுக்கும். குறிப்பாக நீண்ட விமான பயணங்களில், சிறியதாக இருக்கும் விமான குளியலறைக்கு அடிக்கடி போகத் தேவையில்லாமல் நீரேற்றமாக இருக்க தண்ணீர்தான் சிறந்தது.
பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏற வரிசையில் நிற்கும் முன், விமான நிலையத்தில் பாத்ரூம் வேலை இருந்தால் முடித்து விடவேண்டும். விமானம் மேலெழும்பிய பின் இருக்கைப் பட்டையை நீக்கலாம் என்று அறிவிக்கும் வரை எழுந்துசெல்லவும், பாத்ரூம் பயன்படுத்தவும் அனுமதி இல்லை. கைப்பெட்டியை மேல் அலமாரியில் வைத்ததும் நமது இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக்கொண்டு அமரவேண்டும். விமானம் ஏறும் போதும், தரை இறங்கும் போதும் கைப்பையை மேல் அலமாரியில் வைக்க வேண்டும்.
விமானம் புறப்படும் முன் பணியாளர் அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு முன்னால் உள்ள இருக்கையின் பின்புறம் இருக்கும் பையில் பாதுகாப்பு விதிகள் அச்சடிக்கப்பட்ட அறிக்கையையும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
வாந்தி வந்தால் உபயோகிக்க ஒரு சிறு பையை கையில் வைத்துக் கொள்ளலாம். விமானம் ஏறும் போதும், இறங்கும் போதும் பெப்பர்மின்ட், சூயிங் கம் போன்றவற்றை பயன்படுத்தி எச்சில் விழுங்கினால் காது அடைப்பு ஏற்படாது. நீண்ட பயணங்களில் ஓரிரு மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்தால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், வயதானவர்களுக்கு கால் வீங்கும் பிரச்னை வராது.
நீண்ட பயணங்களில் எழுந்து நடக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சீட் பெல்ட் போட்டபடி இருந்தால் எதிர்பாராத காற்றழுத்த மாற்றங்களால் (turbulence) விமானம் திடீரென எம்பிக் குதித்து குலுக்கலுடன் செல்ல நேர்ந்தால் அப்போது நாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் கூட பாதுகாப்பாக இருக்கும்.
நாம் பயணத்தின்போது படிக்க நமக்கு பிடித்த புத்தகங்களை உடன் கொண்டு சென்று படிக்கலாம். பேச்சுத் துணைக்கு யாரேனும் கிடைத்தால் புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். நீண்ட பயணங்களின்போது கழுத்துக்கான தலையனையை பயன்படுத்தலாம். பொழுது போக்குக்காக நமது இருக்கைக்கு எதிரே இருக்கும் சிறு தொலைக்காட்சியை (இருந்தால்) பயன்படுத்திக் கொள்ளலாம்.
விமானம் தரையிறங்கும் அறிவிப்பு வந்ததும் நமது கைப்பேசி, புத்தகங்கள், கோட் போன்ற உடைமைகளை சேகரித்து தயாராக வைத்துக் கொள்ளவேண்டும். மறந்துவிட்டால் திரும்பவும் நுழைவது மிகவும் சிரமம். விமானம் தரை இறங்கியதும் கதவைத் திறக்கும் வரை அமர்ந்திருந்து விட்டு பிறகு எழுந்து மேலே உள்ள பெட்டியை எடுக்கலாம். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கு முன் நமது பேக்கேஜ்களை மறக்காமல் எடுத்துக் கொண்டு, திட்டமிட்டபடி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.