
வேடிக்கைக் கதை ஒன்று சொல்வார்கள். பேருந்து ஓட்டுநர் ஒருவரும், ஒரு இறைபோதகரும் தம் மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தார்கள். இறைத்தூதர் அங்கே வந்து மதபோதகருக்கு வெள்ளிக் கிரீடத்தையும், ஓட்டுனருக்குத் தங்க கிரீடத்தையும் அணிவித்தார்.
இதைப் பார்த்த இறைபோதகர் வெகுண்டார். ‘‘என்ன இது, நான் எத்தனையோ நூறு பேருக்கு இறை உணர்வை ஊட்டி வருகிறேன், எனக்கு வெள்ளிக் கிரீடம் அணிவித்து சிறுமைப்படுத்துகிறீர்கள். ஆனால் இந்த ஓட்டுநருக்கு தங்கக் கிரீடத்தை அணிவிக்கிறீர்கள். இது நியாயமா?’’ என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு இறைத் தூதர், ‘‘ஐயா, நீங்கள் இறை உரை ஆற்றும்போது அதைக் கேட்கும் அனைவரும் தூங்கிக்கொண்டோ, தமக்குள் பேசிக்கொண்டோ, செல்போனில் வாட்ஸ் ஆப் பார்த்துக்கொண்டோ இருந்தார்கள். யாரும் உங்கள் போதனையைக் கேட்கவில்லை. ஆனால் இந்த ஓட்டுநர் ஒவ்வொரு முறை பேருந்தை இயக்கும்போதும்,
அந்தப் பெருந்தில் பயணித்த அத்தனை பயணிகளும் ‘கடவுளே எங்களைக் காப்பாற்று’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்கள். இந்தவகையில் மக்களிடம் இறை உணர்வை உங்களைவிட இவர்தான் அதிகம் வளர்த்திருக்கிறார். அதனால்தான் இவருக்கு தங்க கிரீடம்,’’ என்று பதில் சொன்னார்!
கதை இருக்கட்டும், பொதுவாகவே வாகனப் பாதைகளில் தினந்தோறும் ஏற்படும் விபத்துகளால், எவ்வளவு பொருள் இழப்பும், மதிப்பு வாய்ந்த உயிர் இழப்பும் நேருகின்றன என்று சிந்திக்கும்போது உண்மையாகவே மனசு வலிக்கிறது.
இந்த விபத்துகள் பெரும்பாலும் அவற்றில் சிக்கிய வாகன ஓட்டிகளால் ஏற்படுபவைதான் என்பதுதான் உண்மை. வாகனங்கள் வருவதை உணராமல், பாதசாரிகளும், கால்நடைகளும் சாலையைக் குறுக்காகக் கடந்து செல்வதும், மழை வெள்ளம் காரணமாகவும், எதிர்பாராத மேடு, பள்ளங்களாலும், இரவு நேரங்களில் போதுமான சாலை விளக்குகள் ஒளி தராததாலும் விபத்துகள் நேரிடலாம் என்றாலும், பல விபத்துகள் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால்தான் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
கவனக் குறைவு ஏன் ஏற்படுகிறது? வாகனத்தை இயக்கும்போதே செல்போனில் பேசிக்கொண்டிருப்பது, மிகப்பெரிய வாகனத்தைத் தான் இயக்கினாலும், முன்னால் செல்லும் சிறு வாகனத்தையும் முந்திச்செல்ல முற்படுவது, இதற்காக சாலையை முக்கால் பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டுவது என்று எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், ஓட்டுநரின் உடல்நலக் குறைவே விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்று ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. ஆமாம், குறித்த நேரத்துக்கு முறையான ஓய்வு, தூக்கமின்மையால் அல்லது வேறு ஏதேனும் உடல் கோளாறால் ஓட்டுநர் பாதிக்கப் பட்டிருந்தால் நிச்சயமாக அவரால் முழு கவனத்துடன் சாலையில் வாகனத்தை இயக்க இயலாது.
முக்கியமாகப் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் ஓய்வு நாட்களிலும் கூடுதல் வருமானத்துக்காக வேறு வாகனங்களை ஓட்டி, கூடுதலாகக் களைத்துப் போய்விடுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
அவர்களுடைய அலட்சியத்துக்கும், அஜாக்கிரதைக்கும், மெத்தனத்திற்கும் அடிப்படைக் காரணம், இதுபோன்ற விபத்து காலங்களில் அவர்களைக் காப்பாற்ற நிறுவனமும், அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கமும் முன்வருகின்றன என்றும் கூறப்படுகிறது. சாலை விதிகளை மீறும் அரசுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்துக் காவல் துறையால் அபராதம் விதிக்கப்பட்டது என்றும், அதுவும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் தெரிகிறது.
பேருந்து விபத்தில் தன் மகனைப் பறிகொடுத்த தந்தை, ‘‘என் மகன் இறந்ததற்கு ஒரு தொகையை இழப்பீடாகக் கொடுப்பார்கள். அதைப்பெற நான் எத்தனை நாட்கள் காத்திருக்கவேண்டுமோ, எத்தனை பேரைப் பார்க்க வேண்டுமோ...‘‘ என்றெல்லாம் அங்கலாய்த்தார். அதாவது, ஒரு விபத்தில் அதற்குக் காரணமான ஓட்டுநர் இறக்க நேர்ந்தால் உடனேயே அவருடைய குடும்பத்தாருக்கு, போக்குவரத்து நிறுவனம் நஷ்ட ஈடு அளிப்பதோடு, அவர் வாரிசுக்கு அதே நிறுவனத்தில் பணியும் தருகிறது! இறப்பு பெரிய சோகம்தான் என்றாலும், அதற்கான ஈடு சமமாக இல்லை என்பது அவருடைய குற்றச்சாட்டு.
மொத்தத்தில் தன் பொறுப்பில், தன்னை நம்பி பயணிக்கும் பயணிகள் எல்லோருமே தன் குடும்ப உறுப்பினர்கள்தான் என்ற எண்ணம் ஓட்டுநருக்கு ஏற்படுமானால் அவர் கவனக்குறைவாக நடந்துகொள்வது வெகுவாகக் குறையும்.