ஞாபகத்திறனை வளர்க்கும் வழிமுறைகள்!

ஞாபகத்திறனை வளர்க்கும்  வழிமுறைகள்!

ஞாபக சக்திக்கு மிகவும் முக்கியமாக இரண்டு குணங்கள் தேவை. ஒன்று ஆர்வம் மற்றும் கவனம்; இரண்டு திரும்பத் திரும்ப செய்தல். நீண்ட நாள் ஞாபகத்தில் இருக்கும் விஷயத்தை கூட திடீரென மறக்க வாய்ப்பு உள்ளது.  இதுவும் ஒருவகையில் நல்லதுதான். தப்பான விஷயங்கள் நினைவில் இருந்து அழிந்து போகுமே. சில சமயம் சில விஷயங்கள் குழந்தை பருவம் முதல் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். விளையாடும் குழந்தை முதல் வேலைக்குப் போகும் பெரியவர்கள் வரை சாரி மறந்துட்டேன் என்பது வழக்கமான டயலாக் ஆகிவிட்டது. 

இந்த மறதியை மாற்ற நாம் செய்ய வேண்டியவை  இதோ:

மூளையை முடங்க விடாதீர்கள்! 

ன்கு விளையாட வேண்டும். நன்கு யோசிக்க வைக்கும் மூளையை கூர்மையாக்கும் விளையாட்டுக்களை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவை .இதே போல ஞாபகத்திறனை வளர்க்கும் நமது பாரம்பரிய பயிற்சிகளான தோப்புக்கரணம், கூட்டு விளையாட்டுக்கள், அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடினாலும் ஞாபகத்திறன் வளரும் . இதற்காக பெரிய பெரிய பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒன்றில் இருந்து 100 வரை எண்ணுங்கள். பின்பு  நூறில் இருந்து தலை தலைகீழாக எண்ணுங்கள். அதைத்தொடர்ந்து நூறிலிருந்து இரண்டு இரண்டாக குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காக குறைத்து எண்ணுங்கள். இப்படியே 6 ,7 என்று எண்கள் தாண்டி எண்ணத் தெரிந்தால் உங்களுக்கு நல்ல நினைவு திறன் இருக்கிறது என்று அர்த்தம். இது தொடர்ந்து முயற்சி செய்யும்போது நினைவுத்திறன் அதிகரிப்பதை காணலாம். 

பதற்றம் வேண்டாம்!

பெண்கள் காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பரபரப்பாக மட்டுமில்லாமல் பதற்றத்தோடும் செயல்படுகிறார்கள். இந்த பதற்றமே ஞாபக சக்தியை பாதிக்கும் காரணியாக இருக்கிறது. இந்த பதற்றம் மாணவர்களையும் விட்டு வைப்பதில்லை. நல்லாத்தான் படிச்சிட்டு போனேன். ஆனால் எக்ஸாம் ஹாலுக்குள்ள போனதும் எல்லாம் மறந்து போயிடுச்சு என்று சொல்லும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வாறு அவர்கள் மறப்பதை 'எக்ஸாம் பிளாக்  அவுட்' என்பார்கள். எக்ஸாம் ஹாலுக்குள் சென்றவுடன் பதற்றத்தோடு இருப்பதால்தான் படித்தவை நினைவுக்கு வர மறுக்கிறது. பதற்றத்தை ஒழித்து விடுங்கள் உங்கள் ஞாபக மறதிக்கு ரெட் சிக்னல் வந்துவிழும். 

பயம் விட்டொழியுங்கள்! 

ஞாபக மறதிக்கு முக்கிய காரணமாக பயம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பயமில்லாமல்   சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக ஒரு போன் கால் வருகிறது என்றால் 'யாரோ... என்ன பேசப் போகிறாரோ...'என்று பலர் தேவையில்லாமல் பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படித் தேவையில்லாமல் பயந்து கொண்டிருந்தால், தேவையான ஞாபக சக்திப் பெறுவதில் சிக்கல் வந்துவிடும் கவனம்! 

உடற்பயிற்சி செய்யுங்கள்! 

டல் வலிமைக்கும் ஆரோக்கியத்துக்கும் மட்டுமல்ல உடற்பயிற்சி. மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் ஞாபகத்திறனை அதிகரிக்கவும் இது அவசியம். எனவே தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை உடற்பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது நல்லது. மூளையைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒன்றை நாம் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலையில் அதை நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது.   மிகச் சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்து கொள்ள  நம்முடைய மூளைக்கு குறைந்தபட்சம் எட்டு நொடிகள் தேவைப்படுகிறது. 

நல்ல தூக்கம் அவசியம்! நினைத்திறன் மேம்பட நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அப்போது உடல் ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி புத்துணர்ச்சி பெறாமல் இருந்தால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. நினைவுத்திறனும் பாதிக்கப்படும். ஆகவே, ஞாபகத்திறனை பெற வேண்டுமானால் நல்ல தூக்கத்தை ஒத்தி வைக்காதீர்கள். 

உணவு முக்கியம்! 

நினைவுத் திறனை மேம்படுத்தும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமாக புரதச்சத்து கிடைக்கும். குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் கொடுத்து வந்தால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். துரித உணவுகளைத் தவிர்த்து உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது நினைவுத்திறனை அதிகரிக்க உதவும்.

அசைபோட்டுப் பாருங்கள்! 

ண்டிப்பாக நினைவில் வைக்க வேண்டிய விஷயங்களை சத்தமாக சொல்லிப் பார்ப்பது நல்லது. மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு படிப்பதை விடவும், வாய்விட்டுப் படித்து வரிசை படுத்திக் கொள்வது சிறந்தது. புதிய தகவல்களை அறியும்போது, அதனுடன் தொடர்புடைய பல தகவல்களை இணைத்துப் பார்க்க வேண்டும். ஒரு விஷயத்தை வெறுமனே நினைவுப் படுத்துவதை விட அதை காட்சிப்படுத்தி கற்பனை செய்யும்போது ஞாபகத்திறன் அதிகரிக்கிறது. நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்தால், ஞாபக மறதிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com