மண்டோதரீயின் மகோன்னதம்!

மண்டோதரீயின் மகோன்னதம்!

– எம்.அசோக்ராஜா

ம்பெரும் கற்புக்கரசிகளில் ஒருவள் மண்டோதரீ. இவள் ராவணனின் மனைவி. தமிழில் இவளது பெயரை பெரும்பாலானோர் மண்டோதரி என்றே எழுதுகின்றனர். உண்மையில் அவளது பெயர் மந்தோதரீ. அதாவது, மந்த+உதரீ = மந்தோதரீ. இதற்கு மெலிந்த வயிறுடையவள் என்று பொருள். இவளது தோற்றம் மண்டூகம் என்று சொல்லப்படும் தவளையின் பொருட்டும் சம்பந்தப்பட்டிருப்பதால் மண்டோதரீ என்பதும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மண்டூகமாயிருந்து மானிடராய்ப் பிறப்பெடுத்த அந்த கற்புக்கரசியின் மாண்பு குறித்து சற்று காண்போம்.

அப்ரஸ்த்ரீ எனப் பெயர் கொண்ட நங்கை ஒருத்தி, சிவ தரிசனத்திற்காக கயிலாயம் போகிறாள். அங்கே தபோ நிஷ்டையில் சிவன் இருக்கிறார். சிவனாரின் தேஜோ ரூபத்தைப் பார்த்த அவள், அவரை ஆலிங்கனம் செய்கிறாள். அப்படியும் சிவபெருமானின் யோகம் கலையவில்லை. அதோடு, அவரிடம் எவ்வித சலனமுமில்லை. ஆனாலும், அங்கேயே நிற்கிறாள் அந்த பெண். இதைக்கண்ட பார்வதிக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. கோபத்தில், 'நீ பூலோகத்தில் தவளையாகப் பிறக்கக் கடவது' என சாபம் கொடுக்கிறாள்.

அப்போது கண் விழித்த சிவபெருமான், 'அவள் குழந்தை; அஞ்ஞானத்தால் தெரியாமல் செய்த பிழையை மன்னித்துவிடு' என்கிறார் பார்வதியிடம். இதனால் மனம் இரங்கிய பார்வதி தேவி, 'பன்னிரண்டு வருட காலத்திற்குப் பிறகு நீ மீண்டும் பழைய உருவை அடைவாய்' என சாப விமோசனம் அளிக்கிறாள். பன்னிரண்டு வருட காலம் பூலோகத்தில் இருந்த ஒரு வனத்துக் கிணற்றில் தவளையாகவே மாறி சிவத் தியானத்திலேயே வசிக்கிறாள் அந்தப் பெண்.

ருசமயம் அந்த வனத்தில் சப்த ரிஷிகள் இறைவன் பூஜைக்காக நிவேதனம் செய்ய பாயசம் தயாரிக்கின்றனர். அந்தப் பாயசத்தில் பாம்பு ஒன்று விழுந்து விடுகின்றது. இதை அங்கிருந்தோர் யாரும் கவனிக்கவில்லை. இதைக் கண்ட அந்தக் கிணற்றுத் தவளை என்ன செய்வதென்று தெரியாமல் குதிக்கின்றது. இதையும் யாரும் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் குதித்து விட்டு, தனது உயிரே போனாலும் பரவாயில்லை என நினைத்து தானே அந்த கொதிக்கும் பாயசத்தில் குதித்து விடுகிறது.

அதைக் கண்ட ரிஷிகள் பாயசத்தைக் கீழே கொட்டுகின்றனர். அப்போதுதான், தவளைக்கு முன்பு பாம்பு ஒன்று அதில் செத்துக் கிடந்ததை கவனிக்கின்றனர்.
பாயசத்தில் பாம்பு விழுந்ததை உணர்த்தவே தவளையும் அதில் விழுந்து உயிர் தியாகம் செய்ததை எண்ணி மெய்சிலிர்த்து, அதை ஆசிர்வதிக்கின்றனர் சப்த ரிஷிகள்.

சப்த ரிஷிகளின் ஆசிர்வாதத்தால் அந்தத் தவளை சாபம் நீங்கி, அழகிய பெண்ணாகி மாறி கிணற்றிலிருந்து கத்துகிறாள். அச்சமயம் அங்கு வந்த தனவானான மயனும் அவனது மனைவி ஹேமாவும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி, 'மந்தோதரீ' எனப் பெயர் சூட்டி, தங்களது பெண்ணாகவே வளர்க்கின்றனர். மயனின் பெண்ணாக வளர்ந்த மந்தோதரீ, தொடர்ந்து சிவபெருமானையே ஆராதனை செய்து வருகிறாள். தக்க பருவத்தில் அவளுக்கு மணமுடிக்க நல்ல வரனைத் தேடுகின்றனர் மயனும் அவனது மனைவியும். அச்சமயத்தில்தான் மிகச் சிறந்த சிவபக்தனும், வேதத்தில் கரை கண்டவனும், மிகவும் பராக்ரமசாலியும், புலத்திய ரிஷியின் பேரனான ராவணனைக் கண்டுபிடித்து அவளுக்கு மணமுடிக்கின்றனர்.

மந்தோதரீயே ராவணனை வழிநடத்துகிறாள். மிகப்பெரிய அழகியான மந்தோதரீயைப் பார்த்து ஹனுமனே, 'அவள்தான் சீதையோ' என்று நினைக்குமளவு அவளது அழகு கம்பீரமாயிருந்தது. மிகவும் பதி பக்தியாயிருந்த மந்தோதரீக்கும் ராவணனுக்கும் மேகநாதன், ப்ரஹஸ்தன், அக்ஷயகுமாரன் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

ஸ்ரீராமனின் மனைவி சீதா தேவியை ராவணன் கவர்ந்து வந்தது மந்தோதரீக்குப் பிடிக்கவில்லை. அதனால், தனது பிள்ளைகள் யாரும் சீதா தேவிக்கு முன்பு போகக்கூடாது என மந்தோதரீ உத்தரவிடுகிறாள். அதோடு, மிக உயர்ந்த ரகப் புடைவைகளை, ஒரு ராணி மற்றொரு ராணிக்கு பரிசளிப்பதாகச் சொல்லி, சீதா தேவிக்கு அனுப்பி வைக்கிறாள். ஆனால், சீதை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, 'அனுசூயா தந்த புடைவைகள் தன்னிடமிருப்பதாகவும், அதுவே தனக்குப் போதுமென சீதையிடமிருந்து பதில் வந்தது.

ராவணன் செய்த தவறை அவனிடம் சொல்லி, அதிலிருந்து அவனை மீட்கப் பார்க்கிறாள். அதோடு, ஸ்ரீராம-ராவண யுத்தத்தையும் தடுக்க நினைக்கிறாள். இவ்வளவு நடந்தும் ராவணன் மேல் இருந்த அன்பு அவளுக்குக் கொஞ்சம் கூடக் குறையவேயில்லை.

சீதையை விட வயதில் மூத்தவள் மந்தோதரீ. ஆனாலும் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் அவள் என்றும் இளமையோடிருந்தாள். அசுரனுக்கு மனைவியாக வாழ்ந்தாலும் ஐம்பெரும் கற்புக்கரசிகளில் ஒருவளாக இவள் மதிக்கப்படுகிறாள்.

'அஹல்யா த்ரௌபதி சீதா தாரா மந்தோதரீ
ததா பஞ்சகன்யா ஸமரேன் நித்யம்
மஹா பாதக நாசனம்!'

எனும் சுலோகத்தை சுமங்கலிப் பெண்கள் தினசரி சொல்லி, அந்த ஐந்து கற்புக்கரசிகளையும் மனதால் நினைக்க, மஹா பாபங்களும் நசித்துப் போகும் என்பது இந்த சுலோகத்தின் பொருள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com