மனித இனத்துக்கு என்ன பலன்?

மனித இனத்துக்கு என்ன பலன்?
Published on

ஒரு நிருபரின் டைரி – 14

– எஸ். சந்திரமெளலி

2009ஆம் வருடத்தில் வேதியலுக்கான நோபல் பரிசு நம்ம ஊர் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்தது என்று தகவல் அறிந்தவுடன் என் பத்திரிகைக்கார மனம் பரபரத்தது. இணையத்தில் தேடி அவரது ஈ மெயில் முகவரியைக் கண்டுபிடித்து, சுய அறிமுகம், ஒண்ணரை டஜன் கேள்விகள் என்று ஒரு மெயில் தட்டிவிட்டேன்.

ஒரு வாரமாகியும் அவரிடமிருந்து பதில் வராது போக எனக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு செய்தியைப் படித்தேபோது எனது எதிர்பார்ப்பு அர்த்தமில்லாதது என்று தெளிவானது. " (பேப்பரிலும், டீ.வி.யிலும்) எனக்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியைக் கண்டவர்கள் எல்லாம் எனக்கு பாராட்டு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். எனது இன்பாக்ஸ் எப்போது வெடிக்குமோ என்கிறா மாதிரி நிரம்பி வழிகிறது. நான் எனக்கு வரும் ஈ மெயில்களைப் பார்ப்பதே கிடையாது; அடுத்த சில காலத்துக்கு பார்க்கிற உத்தேசமும் எனக்கு இல்லை" என்கிற ரீதியில் வெளியாகி இருந்த செய்தி போதி மரம் போல எனக்கு உண்மையை உணர்த்தியது. அடுத்த சில மாதங்களில் அவர் சென்னை வந்தபோது அவரது வருகை மீடியாவில் அமர்க்களப்பட்டது.

ஆனால் 1984 அக்டோபரில் நோபல் பரிசு பெற்ற தமிழர் சுப்ரமணியம் சந்திர சேகர் தன் மனைவி லலிதாவுடன் சென்னைக்கு வந்திருந்தார். இத்தனைக்கும் அவர் நோபல் பரிசு பெற்ற பிறகு முதல் முறையாக வந்திருந்தார் என நினைக்கிறேன். ஆனாலும் கூட எந்தவிதமான அமர்க்களமும் இல்லை. தேனாம்பேட்டை சிக்னல் அருகில் இருந்த அவருடைய சகோதரி சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினேன்.

வீட்டின் வரவேற்பு அறையில் நான் காத்திருந்தபோது வந்த நல்ல உயரமான, ஒல்லியான தேகம் கொண்ட, வெள்ளை அரைக்கை சட்டை, நாலு முழ வேட்டி, காலில் கறுப்பு ஷூ அணிந்து வந்த அந்த தள்ளாத மனிதரை எனக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை. அவராகவே தன்னை சுப்ரமணியம் சந்திரசேகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மெல்லிய குரல்; நிதானமான பேச்சு; ஆனால் சொல்லும் விஷயங்களில் ரொம்பத் தெளிவு. "பெங்களூரில் நடக்கவிருந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்தேன். ஆனால் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை காரணமாக கருத்தரங்கம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் எனக்கு பெங்களூரில் வேறு சில வேலைகள் இருப்பதால் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார். சென்னை வந்திருந்த விஞ்ஞானி சந்திர சேகரை சந்தித்தது ஒரு நல்ல அனுபவம்.

சுப்ரமணியம் சந்திரசேகரது அப்பாவுக்கு வடமேற்கு ரயில்வேயில் உதவி ஆடிட்டர் ஜெனரல் வேலை. எனவே, சந்திரசேகர் பிறந்தது இன்றைய பாகிஸ்தானிலிருக்கும் லாகூரில்தான். பெரிய குடும்பம். சுப்ரமணியம்-சீதா லட்சுமி தம்பதியருக்கு மொத்தம் பத்து குழந்தைகள். நாலு மகன்களில் மூத்தவர் சந்திர சேகர். அப்பா சுப்ரமணியம் சின்சியரான ரயில்வே அதிகாரி மட்டுமில்லை; நன்றாக வயலின் வாசிக்கவும் தெரிந்தவர். அம்மா ஓரிரு ஆங்கில நாவல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறாராம். சந்திர சேகரின் தாய் மாமாதான் நோபல் பரிசு பெற்ற இன்னொரு இந்தியர் என்ற பெருமைக்குரிய சர் சி.வி.ராமன்.

திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து, அதன் பிறகு மாநிலக் கல்லூரியில், (பிசிக்சில் பி.ஏ.ஹானர்ஸ்) படித்து முடித்தபோது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேலே படிக்க அவருக்கு இந்திய அரசாங்கத்தின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அங்கே படித்தது, ஆராய்ச்சி செய்தது, பல்கலைக் கழகத்தில் உத்தியோகம் பார்த்தது, நோபல் பரிசு பெற்றது எல்லாம் தனிக்கதை. மாநிலக் கல்லூரியில் அவருக்கு ஒரு வருடம் ஜூனியரான லலிதாவைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். நோபல் பரிசு பெற்றவுடன் தன் மனைவி பற்றி அவர் சொன்னது:" லலிதாவின் பொறுமை, புரிந்துகொள்ளுதல், ஊக்கம் இவைதான் என் வாழ்க்கையின் மையப் புள்ளி".

"நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் கீழ் ஆராய்சி மாணவராக இருப்பது வெளி உலகுக்கு வேண்டுமானால் கௌரவமாக இருந்தாலும், அவர்களின் முழுமையான வழிகாட்டுதல், மாணவர்களுக்குக் கிடைக்காது" என்று சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் ஒருவர் என்னிடம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இந்தோ- ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் சில வாரங்கள் ஜெர்மனி சென்று வந்த அந்த மாணவர்,
"நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பலரும் மிகவும் வயதானவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்களுக்கு உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்தும் கருத்தரங்குகளில், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு வந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களுக்கு வருடத்தில் பல நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும்" என்று சொன்னார்.

ஆனால் சந்திர சேகர் அப்படி இல்லை என்று அவரது பேச்சிலிருந்து புரிந்தது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அவருக்குக் கீழே நிறைய ஆராய்ச்சி மாணவர்கள். "என் மாணவர்கள் அத்தனை பேருக்கும் ஆராய்ச்சியில் அத்தனை ஈடுபாடு. அவர்களுக்கு இன்ன நேரத்துக்கு வரவேண்டும்; இத்தனை மணி நேரம் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும்" என்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. சில மாணவர்கள் அவசியமானால் சில நாட்கள் வீட்டுக்கே போகாமல் இரவு பகலாக அங்கேயே தங்கி தங்கள் வேலையைப் பார்ப்பதுண்டு; இன்னும் சில சமயங்களில் என்னுடைய அப்பார்ட்மென்டிற்கே மாணவர்கள் வந்துவிடுவார்கள். என் ஸ்டடி ரூமில் அமர்ந்து தங்கள் வேலையைப் பார்ப்பார்கள்" என்று தன் மாணவர்களைப் பற்றி ரொம்பவும் பெருமையாகச் சொன்னார்.

"பெரும்பாலான நேரத்தை ஆராய்ச்சியிலேயே செலவழிப்பது போரடிக்கவில்லையா?" என்று வழக்கமான ஒரு கேள்வி கேட்டேன்.

"பொழுது போக்குக்காக இசை கேட்பதுண்டு. அவ்வப்போது இசைக்கச்சேரிகள் ஏதாவது நடந்தால் போய் வருவேன். அதற்கெல்லாம் நிறைய நேரம் ஒதுக்க ஆசைதான் என்றாலும், நேரம் கிடைப்பதில்லை" என்றார்.

"அந்தக் காலத்தில் நீங்கள் பார்த்த இந்தியாவுக்கும், இன்று நீங்கள் பார்க்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது?"

இந்தக் கேள்வியை நான் அவரிடம் கேட்டது 1984ல் என்பதை நினைவில் கொண்டு அவரது பதிலைப் படிக்கவும்:
"நான் 19 வயதில் அமெரிக்காவுக்குப்போனேன். இங்கே நான் கல்லூரியில் படித்தபோது எல்லோருக்கும் தேச நலனில் ரொம்ப அக்கறை இருந்தது. பின்பற்றுவதற்குத் தகுதியான தலைவர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலைமை என்ன? சுயநலமில்லாத தலைவர்கள் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்று என்னையே கேட்டார்.

சந்திர சேகர் தொடர்ந்தார்:
"போன தடவை (1982 பிப்ரவரியில்) இந்தியா வந்திருந்தபோது இந்திரா காந்தியை சந்தித்தேன். அவரிடமும் என் மனக்குறையை பகிர்ந்துகொண்டேன். "நீங்கள் சொல்வது ரொம்ப சரி! நானும் இதை மிக நன்றாக உணர்கிறேன்" என்று திருமதி காந்தி சொன்னார்.

கணித மேதை ராமானுஜம் மீது சந்திர சேகருக்கு மிகுந்த மரியாதை. இந்தியா வரும்போதெல்லாம் சந்திர சேகர் தவறாமல் திருவல்லிக்கேணி சென்று திருமதி ராமானுஜத்தை சந்திப்பது வழக்கம். அவரைப்போன்ற ஒரு ஜீனியசுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது என ரொம்ப வருத்தப்பட்டார். "அவரது கணித ஆராய்ச்சிப் பணிகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ள சில நண்பர்கள் புத்தகத்தில் வெளியிட அவருடைய புகைப்படம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். நானும் அவரது வீட்டுக்குப்போய் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கடைசியில் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தை பிரதி எடுத்து, அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதைத்தான் அவர்கள் புத்தகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று பரவலாக பயன்படுத்தப்படும் ராமானுஜத்தின் படம் அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட பிரதிதான். பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் வெளியிடப்பட்ட தபால் தலையில் கூட அந்தப் புகைப்படம்தான் பயன்படுத்தப்பட்டது" என்றார்.

"உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்ததில் ஒவ்வொரு இந்தியனும் சந்தோஷப்படுகிறோம்" என்றதும்,

அவர் ரொம்ப கேஷுவலாக, "நோபல் பரிசு என்பது ஒரு கௌரவம். அவ்வளவுதான். நோபல் பரிசு பெறுபவர்கள்தான் அறிவாளி; மற்றவர்கள் எல்லாம் புத்திசாலிகள் இல்லை என்பது ரொம்ப தவறான எண்ணம். நோபல் பரிசு கிடைக்காத, ஆனால் நோபல் பரிசு பெற்றவர்களைவிட பல விதங்களிலும் உயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்" என்றார்.

"நீங்கள் அஸ்ட்டிரோ பிசிக்சில் நிபுணர். ஸ்டெல்லார் எவலூஷன் என்ற  உங்கள் ஆராய்ச்சிக்காகத்தான் நோபல் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அந்த தியரி, இந்த உலகத்தில் வசிக்கும் ஒரு சாமானிய மனிதனுக்கு எந்த வகையில் உபயோகப்படும்? என்று நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றேன்.

"அன்றைக்கு நியூட்டனும், ஐன்ஸ்டினும் பல விஷயங்களைக் கண்டு பிடித்தார்கள். அப்போது யாரும் இந்த கண்டுபிடிப்புகளால் தனி மனிதர்களுக்கு என்ன பலன் என்று கேட்கவில்லை. அதுபோல நினைக்கவும், பேசவுக் கூடாது. எந்த ஒரு ஆராய்ச்சியானாலும், அதனால் தனி மனிதனுக்கு என்ன பலன் என்று பார்க்காமல், மனித இனத்துக்கு என்ன பலன் என்ற நோக்கில்தான் பார்க்க வேண்டும்" என்று சொன்னவர் மேலும் விளக்கினார்:

"மலை உச்சியில் பேய்த மழையானாலும் அது சமவெளிக்குப் பாய்ந்து, பின்னர் பூமிக்கு அடியிலும் செல்கிறது. அப்புறம் என்றாவது ஒரு நாள் அங்கே கிணறு தோண்டுகிறபோது, நமக்குத் தண்ணீர் கிடைக்கிறது. அப்போது, "ஓ! இது அன்றைக்கு மலை உச்சியில் பெய்த மழை நீராயிற்றே!" என்று யாரும் நினைப்பதில்லை. அதுபோலத்தான் விஞ்ஞான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் நாளடைவில் பல ரூபங்களில், பல கோணங்களில் மனித குலம் முழுமைக்குமே பயன் தரும்."

"நோபல் பரிசுத் தொகையை என்ன செய்தீர்கள்?" என்று நான் கேட்ட கேள்வியை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை. "அது பர்சனல்" என்று சொல்லி விட்டார்.

நான் அவருடன் ஆங்கிலத்திலேயே பேசின காரணத்தால், விடை பெறும்போது, "தமிழ் ஞாபகம் இருக்கா?" என்றதும், "பேஷாக!" என்று சொல்லிச் சிரித்தார்.

சந்திர சேகர் தனது 84ஆம் வயதில் 1995 ஆகஸ்ட் 21ஆம் தேதி சிகாகோவில் மாரடைப்பால் மறைந்தார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com