
-நளினி சம்பத்குமார்
ஓவியம்: வேதா
ஸுக்ரு தேதி க்ருதே பஹுதா பவதோ பவிதா
ஸமதர்ஸனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம் பவ ஸங்கர தேஸிக மே ஸரணம்.
இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்:
குருவே, உங்களிடம் இருக்கும் அத்தனை சிஷ்யர்களுமே அதிகப்படியான புண்யங்களைச் செய்தவர்கள். அவர்கள் அனைவருமே ரொம்பப் புத்திசாலிகள். அவர்கள் செய்த புண்யத்தாலேயே, ஞானத்தை அடைய வேண்டும் என்கிற அந்த ஊக்கம், உந்துததல் எல்லாமே அவர்களுக்குத்தான் நிரம்ப வரும். நான் ரொம்பத் தீனன். அந்தளவு ஞானமெல்லாம் எனக்குக் கிடையாது. எனக்குப் புண்யம் எப்படி பண்ணனும்னு கூட தெரியாது.
(அதி தீனமிமம் பரிபாலயமாம்) குருவே நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் போதும். எனக்கு வேறு எந்த தகுதியும் வேண்டாம். வேறு எந்த புண்ணியமும் நான் செய்ய வேண்டாம். என்னை நீங்கள் ஏற்று கொண்டு விட்டால் பிறகு நான் உங்கள் பாரமாகி விடுவேன் , எனக்கு எந்த பாரமுமே இருக்காதே. அதனால், என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்லி நமஸ்காரம் செய்ய மட்டும் தான் எனக்கும் தெரியும். அதை தான் நான் செய்கிறேன். குருவே என்னை ஏற்றுக்கொண்டு என்னை காப்பாற்றுங்கள்.
தோடகாசாரியார் ஆதி சங்கர பகவத் பாதாள் மேல் பாடிய "தோடகாஷ்டகத்தில்" வரக்கூடிய மிக உயர்வான, மனதை உருக்கக் கூடிய ஸ்லோகத்திலிருந்து சில வரிகளைத்தான் மேலே படித்தோம். "பவ சங்கர தேசிக மே சரணம்" என்று ஒவ்வொரு ஸ்லோகத்தில் கடைசி வரியிலும் வலியுறுத்தியிருப்பார், வரையறுத்திருப்பார் தோடகாசாரியார். "என் குருவான சங்கரரின் சரணங்களே எனக்கு புகலிடம் என்று மீண்டும் மீண்டும் துதிப்பார் தோடகாசாரியார்.
குருவின் மீது உண்மையான பக்தி இருந்துவிட்டால் போதும், அது அத்தனை விதமான ஞானத்தையும் தானாகவே கொண்டு வந்து சேர்த்துவிடும் என்பதை நமக்குச் சொல்லி கொடுத்துச் சென்றிருக்கிறார் தோடகாசாரியார். தோடகாஷ்டகத்தில் உள்ள எட்டு ஸ்லோகங்களைப் படித்தாலும் சரி, கேட்டாலும் சரி, தோடகாசாரியாரின் கதையைப் படித்தாலும் சரி நமக்குக் குரு பக்தி என்பதும் குரு அருள் என்பதும் நிச்சயம் கிடைக்கும்.
குரு பக்தி அபாரமாக நிரம்பிய கிரி என்கிற சிஷ்யர் ஆதி சங்கர பகவத் பாதாளிடம் பயின்று வந்தார். படிப்பறிவு என்பதோ ஞானம் என்பதோ அவருக்கு அவ்வளவாக இல்லை என்றே மற்ற சிஷ்யர்கள் அவரைப் பார்த்து கேலி பேச்சு பேசுவார்களாம். கிரிக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். தன் குருவுக்குத் தன்னாலான கைங்கர்யங்களைச் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில் குருவின் துணிகளைக் கர்ம சிரத்தையாகத் துவைத்துப் போடுவது, குருவின் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் பதார்த்தங்களைச் சமைத்து கொடுப்பது… என இப்படி குரு கைங்கர்யத்திலேயே பரம சந்தோஷத்தை அடைந்துவிடுவாராம் கிரி. ஒரு சமயம், ஆதி சங்கர பகவத் பாதாள் வேதாந்தப் பாடங்களை நடத்திக்கொண்டிருந்த சமயம். ஒரு நாள் அவர் பாடங்களை ஆரம்பிக்கும்போது அந்தக் கிரி என்கிற சிஷ்யனை மட்டும் காணவில்லை. 'சரி கிரி வரட்டும் பிறகு பாடத்தை ஆரம்பிப்போம்' என்று காத்துகொண்டிருந்தாராம் ஆதி சங்கரர். அப்போது அங்கிருந்த சிஷ்யர்கள் எல்லாம், "கிரி வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான். அவன் வந்து வேதாந்தப் பாடங்களைக் கவனித்தால் மட்டும் அவனுக்கு என்ன அதெல்லாம் புரியவா போகிறது? இதோ இங்கே இருக்கும் சுவரும், அந்த கிரியிம் ஒன்றுதான்" என்று சொன்னதைக் கேட்ட ஆதி சங்கரருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை அனைத்து சிஷ்யர்களுமே ஒன்றுதான். இதில் இவன் புத்திசாலி என்றோ அவன் புத்தியற்றவன் என்றோ யாரும் கிடையாது. குரு பக்தியின் மேன்மையை இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு விட்டார் ஆதி சங்கரர். ஆசார்யர் சங்கல்பம் என்பது எவ்வளவு மகத்துவமானது? ஆசார்யன் ஒருவனைக் காப்பாற்ற வேண்டும் என்றோ அவனுக்கு நல்லறிவைப் புகுத்த வேண்டும் என்றோ நினைத்துவிட்டால் அதை யாரால் தடுக்க முடியும்? அந்த குரு சங்கல்பத்தைப் பெறவும், குருவின் கடாக்ஷத்தையும் பெறவும் குரு பக்தி செய்ய வேண்டும், அவ்வளவே.
அபராமான குரு பக்தி செய்த கிரியை காப்பாற்றாமல் போய் விடுவாரா என்ன ஆதி சங்கரர்? ஊரே ஏன் உலகமே கேலி செய்தாலும் ஒரு உண்மையான குரு பக்தி செய்தவனுக்கு உயர்வான ஞானத்தைப் பரிசாக தந்துவிடாமல் போய் விடுவாரா ஆதி சங்கரர்? மனதால் அந்தக் கிரிக்கு சகலவிதமான ஞானமும் வர வேண்டும் என்று அந்த அபாரா ஞான வரத்தைத்தான் இருந்த இடத்திலிருந்தே வரமாக அருளினார் ஆதி சங்கரர். கிரி எங்கிருந்தாலும் சரி, அவனைத் தேடி நல்அறிவு, ஞானம் இவை அவனைச் சென்றடையட்டும் என்பது ஆசார்யன் செய்த ஆசி.
குரு நினைத்தால் நிச்சயமாக நடக்கும். குரு நினைத்துவிட்டால் நிச்சயமாக அது கிடைத்துவிடும். சமஸ்குருதத்திலே மிகவும் கடினமானது என்று சொல்லக்கூடிய தோடகம் என்ற கவிதை வடிவில் ஸ்லோகங்களைப் பாடிக்கொண்டு கையில் தாளம் போட்டுக்கொண்டு ஆதி சங்கரரின் முன் வந்து நின்றாராம் கிரி. அத்தனி பேரும் வாயடைத்து போய்நின்றார்கள். மூடன், மூளை இல்லாதவன் என்று கேலி பேச்சு பேசினோமே அந்தக் கிரியிடமிருந்தா இப்படி ஒரு ஸ்லோகம் வருகிறது என்று சிலாகித்துப் போனார்கள். தோடகாஷ்டகம் சொன்ன அந்த கிரிதான் தோடகாசார்யாராகி போனார். ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு மிகவும் முக்கியமான நான்கு சிஷ்யர்களுள் ஒரு சிஷ்யரானவரும் இவரே.
கிரி என்பவர் எப்படி தோடகாசாரியாராக மாறினாரோ அப்படித்தான் குரு அருளால் ஸனந்தனர் பத்மபாதராக மாறியதும். ஆதி சங்கரர் ஒரு முறை காசியில் கங்கை கரையில் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். கரைக்கு அந்தப் பக்கம் அவரது சிஷ்யர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஸ்நானம் செய்து முடித்த உடன் உலர்ந்த துணியை உடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அக்கரையில் இருந்த சிஷ்யர்களில் ஸனந்தனரை நோக்கி, ஸனந்தனரா, வஸ்திரம் எடுத்துக் கொண்டு வா" என்று குரல் கொடுத்தார். கங்கை பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த கங்கையின் மீது எப்படி நடந்து செல்வது.. குருவோ நம்மை அழைக்கிறாரே என்றெல்லாம் நினைக்கவே இல்லை, ஸனந்தனர். குரு அழைத்து விட்டார். இதோ போக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஓடி கொண்டிருந்த கங்கையின் மீது அந்த வஸ்திரத்தை எடுத்து கொண்டு அப்படியே நடக்க ஆரம்பித்து விட்டார் அவர். நடந்து வந்தவர், நேராக ஆதி சங்கரிடம் சென்று அவரிடம் வஸ்திரத்தையும் கொடுத்துவிட்டு பணிவாக நின்றார். கூடி இருந்த சிஷ்யர்களோ, " இப்படி வெள்ளமாக கங்கை ஓடி கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆழமாக இருக்கிறது. இதெல்லாம் பார்க்காமல் நீங்கள் குரு கூப்பிட்டார் வந்தேன், என்கிறீர்களே? இந்தக் கங்கையின் ஆழம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அதை எல்லாம் பார்த்துக்கொண்டு வர வேண்டாமா?" என சிஷ்யர்கள் கேட்க, அதற்கு ஸனந்தனரோ, "கங்கையின் ஆழத்தை எல்லாம் நான் பார்க்கவில்லை. நான் பார்த்தது குருவின் அழைப்பை மட்டும்தான்" என்றார். ஆதி சங்கர் சிஷ்யர்களை நோக்கி, "இதோ நீங்கள் கொஞ்சம் திரும்பி கங்கையைப் பாருங்கள்" என்று கை காட்ட, அந்த ஸனந்தனர் எங்கெல்லாம் கால் வைத்து கங்கையின் மீது நடந்து வந்தாரோ அந்த இடத்தில் எல்லாம் அப்படியே பத்மம் (தாமரை பூ) பூத்திருந்ததாம். குருவுக்குச் சேவை செய்யச் செல்பவரை கங்கா தேவியே தன் மீது தாமரை பூக்களைப் பூக்க வைத்து தாங்கிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவர் பாதம் வைத்த இடத்திலெல்லாம் பத்மம் பூத்து நின்றதால் அன்று முதல் அவர் பத்மபாதர் என்றே அழைக்கப்பட்டார்.
உண்மையான குரு பக்தி இருக்கும் இடத்தில் குருவின் அருளும் சித்திக்கும், தாமரை மலர்களும் பூக்கும்.
நமக்குள்ளும் குரு பக்தி என்பதும் குரு அருள் என்பதும் மலரட்டும்.