
பராக்! பராக்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மக்கள் மனதில் ஒரு உச்சகட்ட எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், கல்கி குழுமம் மக்கள் கொண்டாடும் பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் பயணித்த பாதையில் பயணித்து, வாசகர்களை சரித்திரக் காலத்துக்கே அழைத்துக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி இருப்பது தெரிந்ததே.
"பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத் தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்" என்ற தலைப்பில் கல்கி யூடியூப் சேனலுக்கான தொடர் ஒன்றைத் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளது கல்கி குழுமம். சரித்திரக்கதை எழுத்தாளரும், கல்கியில் கூடலழகி தொடரை எழுதியவருமான காலச்சக்கரம் நரசிம்மா படப்பிடிப்புக் குழுவினருடன் தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் உள்ள பொன்னியின் செல்வன் தொடர்புடைய ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பயணித்து, வாசகர்களுக்கு வரலாற்று விருந்து படைத்திருக்கிறார்.
அதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய 'பொன்னியின் புதல்வர்' அமரர் கல்கி அவர்கள் பிறந்த நாகை மாவட்டம் புத்தமங்கலம் கிராமத்துக்குச் சென்றது படப்பிடிப்புக் குழு. புத்தமங்கலம் விசிட் பற்றிய ஒரு தொகுப்பு:
சீர்காழியிலிருந்து வைதீஸ்வரன்கோயில் வழியாக மயிலாடுதுறை செல்லும் ரூட்டில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது புத்தமங்கலம். அதை குக்கிராமம் என்று சொல்வதே பொருந்தும். மொத்தம் இரண்டே தெருக்கள். சுமாராக நூற்றைம்பது வீடுகள். ஊரின் பிரதான வீதிக்கு ஒரு முனையில் வரதராஜபெருமாள் கோயில். மறுமுனையில் சிவன்கோயிலும், ஒரு ஆஞ்சனேயர் கோயிலும் உள்ளன. இன்னும் சற்றுத் தூரம் போனால் ஒரு அய்யனார் கோயில். அருகில் ஒரு குளம். ஊரில் ஒரு துவக்கப்பள்ளி உள்ளது. பஸ் ஸ்டாண்டு, உயர்நிலைப் பள்ளி, கடைத்தெரு உள்ளிட்ட மற்ற அனைத்துக்கும் சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள மணல்மேடு என்ற பெரிய கிராமத்துக்குத்தான் செல்லவேண்டும். மக்களின் பிரதான தொழில் விவசாயம்தான்.
கோயில்கள் இருக்கும் பிரதான வீதியின் நடுப்பகுதியில் இருக்கிறது அமரர் கல்கி பிறந்து வளர்ந்த வீடு. பல்லாண்டுகளாக ஓட்டுவீடாக இருந்த அந்த வீட்டை இப்போது புதுப்பித்து இருக்கிறார்கள். அமரர் கல்கி நூற்றாண்டு விழா (1999) குழுவினரும், மயிலாடுதுறை தெய்வத் தமிழ்மன்றமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் 28 பிப்ரவரி 1999 அன்று இந்த வீட்டைத் திறந்து வைத்திருக்கிறார். அதன் கல்வெட்டு வீட்டின் முகப்பில் இருக்கிறது. இப்போது அமரர் கல்கியின் தம்பி ஜகதீச ஐய்யரது வாரிசுகளின் பராமரிப்பில் உள்ளது.
வீட்டின் உள்ளே நுழைந்தால் நேரே ஒரு முற்றம். அதை ஒட்டினாற்போல ஒருஹால். இரண்டு அறைகள். சமையலறை இன்னபிற. அதைத்
தாண்டிச் சென்றால், கிணற்றடியும், தோட்டமும். பக்கத்தில் இன்னொரு வீடு. அமரர் கல்கியின் வீட்டைப்போன்ற அமைப்புகொண்டது. இது அமரர் கல்கியின் அண்ணன் வெங்கடராம ஐய்யரது வீடு. அவரது வாரிசுகளின் பராமரிப்பில் உள்ளது. அங்கே ஹாலின் நடுவில் ஒரு ஊஞ்சல். நூறாண்டு கண்ட ஊஞ்சல். அமரர் கல்கி அமர்ந்து ஆடி, மகிழ்ந்த ஊஞ்சல். இந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி எழுதுவது அமரர் கல்கிக்கு மிகவும் பிடிக்குமாம். சில சமயங்களில் ஊரின் குளக்கரைக்குச் சென்று, காற்று வாங்கியபடி, கற்பனைக் குதிரையில் வலம் வருவாராம். எழுதுவாராம்.
காலச்சக்கரம் நரசிம்மா, "அமரர் கல்கி பிறந்த மண்ணுக்கே வந்து அமரர் கல்கி மற்றும் பொன்னியின் செல்வன் நினைவுகளில் மூழ்குவது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்" என்று குறிப்பிட்டார். உடன் வந்திருந்த கல்கியின் மூத்த எழுத்தாளர் சுப்ர.பாலன், சுந்தா எழுதிய கல்கியின் பொன்னியின் புதல்வர் புத்தகத்தைக் கையோடு கொண்டுவந்திருந்தார். அதிலிருந்து புத்தமங்கலம் தொடர்பான பகுதிகளைப் படித்துக்காட்டி, தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
தற்போது கல்கி ஆன்லைன் யூடியூப் சேனல் வழியாக நடத்தப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் பற்றிய "மகுடம் யாருக்கு?" குவிஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிகரமாக அரைஇறுதிச் சுற்று வரை வந்திருக்கும் மாணவ, மாணவிகள் சிலரும் புத்தமங்கலம் வர அழைக்கப்பட்டிருந்தனர். உற்சாகம் கரைபுரள அவர்களும் புத்தமங்கலம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் பேசியபோது, எல்லோருமே கொரோனாவுக்கு நன்றி சொன்னார்கள். காரணம், பொன்னியின் செல்வனை ஏற்கனவே படித்தவர்கள், மீண்டும் மீண்டும் படித்து புதிய பரிமாணத்தில் ரசிக்கவும், அதுவரை படிக்காதவர்களுக்கு முதல் முறையாகப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததும் கொரோனாதானே? அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எப்படி பொன்னியின் செல்வனால் கவரப்பட்டார்கள் என்பதை மிக உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.
அடுத்து பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் எது? என்ற கேள்வி அவர்கள் முன் வைக்கப்பட்டது. மாணவர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பற்றி ஒரு விருவிறுப்பான சொற்பொழிவே ஆற்றினார்கள். அவர்களது பேச்சைக் கேட்டபோது, பொன்னியின் செல்வன் தலைமுறை தாண்டிய ஒரு படைப்பு என்பது தெளிவாக விளங்கியது.
உடன் வந்திருந்த பொன்னியின் செல்வன் வாசகி சுசீலா, வந்தியத்தேவன் பயணம் சென்ற பாதையில் மூன்று முறை பயணம் மேற்கொண்ட தீவிரவாதி. "புத்தமங்கலம் வந்திருப்பது எனக்கு ஒரு புனிதப்பயணம் போல" என்று நெகிழ்ந்தார். தனது வந்தியத்தேவன் பாதைப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, பொன்னியின் செல்வன் கதையைப் படிப்பது ஒரு சுகமான அனுபவம் என்றால், அந்தக் கதையின் பிரதான பாத்திரமான வந்தியத்தேவன் பயணித்த பாதையில் சென்று கல்கி குழுவினர் படமாக்கியுள்ள காணொளித் தொடரைப் பார்ப்பது வேறலெவல்!" என்றார். அந்தத்தொடரின் மூலமாக வாசகர்களும் பயணித்து பொன்னியின் செல்வன் குறித்த முழுமையான அனுபவத்தைப் பெறவேண்டும். அதற்கும் அடுத்தலெவல், நாமும் அந்தப் பயணத்தில் நேரடியாகப் பங்கேற்பது!" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
படப்பிடிப்புக் குழுவினர், புத்தமங்கலத்தை விட்டுப் புறப்பட்டபோது, அந்தக் குக்கிராமமே வந்து எங்களை வழியனுப்பிவைத்தது.
*****************************