கமெண்ட் கல்பனா தேவி!

கமெண்ட் கல்பனா தேவி!
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 10

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்


'ந
க்கீரரே வந்தாலும் இந்தப் பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது' என்று யாராவது கூறினால், அவரருகில் கல்பனா தேவி இல்லை என்று பொருள். பிறர் எதையாவது செய்யும்போது கல்பனா தேவி கூர்ந்து கவனித்து அன்னப்பறவை போல, அதை அலசி அதில் உள்ள ஏதாவது ஒரு சிறு குறையை கவனித்து அதை வெளிப்படுத்தத் தயங்க மாட்டாள் . எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து கருத்து உதிர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பாள். என்ன செய்தாலும் (அல்லது செய்யாவிட்டாலும்!) அவளது கமெண்ட்களிலிருந்து தப்ப முடியாது.

கல்பனா தேவியின் அண்ணன், அவள் வசிக்கும் அடுத்த தெருவில்தான் வசிக்கிறார். உறவினர்கள் யாராவது அவர் வீட்டுக்குப் போய்விட்டு, பிறகு தன் வீட்டுக்கு வந்தால் 'என்னைவிட உங்களுக்கு அண்ணன்தானே உசத்தி' என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள். மாறாக, அவள் வீட்டுக்கு அவர்கள் முதலில் வந்தால், 'தெரியும்… இங்கே இருக்கிற குறைகளை எல்லாம் கவனிச்சு அண்ணன்கிட்டே பட்டியல் போடலாம் என்பதற்காகத்தானே முதல் வருகை இங்கே!' என்பாள்.

எதையாவது குதர்க்கமாகக் கூறிவிட்டு, கணவனின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பாள்; சூடாக பதிலடி கொடுக்கத்தான். ஆனால், அவளைப் பற்றி அறிந்த கணவன் வாயை மூடிக்கொண்டு இருப்பான்.
'என்ன பதிலையே காணோம்? நான் என்றால் அவ்வளவு அலட்சியமா?' என்று கேட்பாள்.

பதில் கூறுவதற்காக அவன் வாயைத் திறக்கும்போதே சீறுவாள். கணவனது வாய் திறந்தது திறந்தபடி நின்றுவிடும்.

அடுத்த வீட்டில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுமி பள்ளி ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்து அதற்கான பரிசை ஆசையுடன் காட்டினால், 'இந்தத் தகர பென்சில் டப்பாதான் பரிசா? இதுக்கு நீ பரிசு வாங்காமலே இருந்திருக்கலாம்' என்று கூறி, அவளது முகத்தை சுருங்க வைப்பாள்.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரிடம், 'தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால் எத்தனை பேர் இறந்தார்கள்? உனக்கு என்ன கேடு?' என்பாள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் பெருமையாக யாராவது சொன்னால், 'நடிகர் விவேக் கூட இப்படித்தான் சொன்னார், பாவம்' என்று அவர் நிம்மதியைப் போக்குவாள்.

இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டு அதில் யாராவது கொஞ்சம் நிம்மதி அடைந்தால், அப்படிப் போட்டுக்கொண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமலஹாசனை நினைவுப் படுத்தி விட்டுத்தான் ஓய்வாள்.

விமர்சனம் செய்வது வெகு எளிது. அதை எதிர்கொண்டு மாற்றிக்கொள்வது கடினம். சில சமயம் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் உங்களை சரியாகச் செதுக்கிக்கொள்ள உதவும்.

ஓவியம் : சுதர்ஸன்
ஓவியம் : சுதர்ஸன்

தவிர, கல்பனா தேவி போன்று எதற்கும் குறை கூறுபவர்களை உங்களால் சமாளிக்க முடிகிறது என்றால், வாழ்க்கையில் வேறு பல சங்கடங்களை உங்களால் வருங்காலத்தில் சமாளிக்க முடியும்! எதற்கும் எதிர்மறைக் கருத்து கூறுபவரிடம் எது குறித்தும் ஆலோசனை கேட்காதீர்கள்.

'குட் பாஸ் பேட் பாஸ்' என்ற புத்தகத்தில் டாக்டர் ராபர்ட் சட்டன் இப்படிக் கூறுகிறார்… 'எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்களைக் கொண்ட அணிகள், அப்படி இல்லாதவர்கள் உள்ள அணிகளை விட, சுமார் 50 சதவீதம் குறைவாகவே செயலாற்றுகின்றன.'

நீங்களும் கல்பனா தேவியாக இருந்தால் ஓர் ஆலோசனை. பிரச்னைகள் இருக்கலாம்… ஆனால், அவற்றை குறைகளாகக் கருதாமல் சவால்களாகக் கருதி, தீர்வுகளை நோக்கி அல்லவா செல்ல வேண்டும்?

தினமும் கல்பனா தேவி போன்றோரை, அதாவது குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டவர்களை சந்திக்க வேண்டியிருப்பவர்கள், 'உண்மைதான்… ஆனால், இதை எப்படி சரி செய்வது?' என்று கேளுங்கள்.

அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு தீர்வைக் கூறும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். அப்போதும், 'இதையெல்லாம் சரி செய்யவே முடியாது' என்றோ, 'இதையெல்லாம் மாற்றவே முடியாது' என்று எதிர்மறையாகக் கூறினாலோ, 'கொஞ்சமாவது சரிசெய்யவோ மாற்றவோ என்ன செய்யலாம்?' என்று விடாமல் கேளுங்கள். அதாவது எதிர்மறை அணுகுமுறையிலிருந்து கொஞ்சமாவது அவர்களை நேர்மறை அணுகுமுறையை நோக்கித் திருப்புங்கள்.

'கூறிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்பது போல், கல்பனா தேவி போன்றவர்களைக் கேட்டால் சில சமயம் நிஜமான பதில் கிடைக்கும். பாதுகாப்பற்ற உணர்வு அல்லது பொறாமை காரணமாக சிலர் பிறரை குறை கூறிக் கொண்டிருப்பார்கள். அந்த உண்மையை அவர்களை உணரவைக்க முடிந்தால், அவர்கள் அணுகுமுறை ஓரளவு மாறும்.

உங்களைப் பற்றி தொடர்ந்து இப்படி குறை கூறிக்கொண்டு இருப்பவரிடம், 'நான் பிறரை மரியாதையுடன் நடத்துவேன். என்னையும் பிறர் அப்படி நடத்த வேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்ப்பேன்' என்பது போல் பளிச்சென்று கூறிவிடலாம்.
(நிறைவுறுகிறது)

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com