அமைதியான நடிப்பு; ஆரவாரமான வெற்றி!

அமைதியான நடிப்பு; ஆரவாரமான வெற்றி!
Published on

அண்ணாத்தே வந்த பாதை – 2

எஸ்.பி.முத்துராமன்     /   எழுத்து வடிவம் : எஸ். சந்திர மௌலி

திரடி ஆக்‌ஷன் ஹீரோவான ரஜினியை ஒரு கிராமத்துப் பின்னணி கொண்ட கதையில் ஆர்பாட்டம் துளியுமில்லாமல், அமைதியான நடிப்புக்கு மட்டுமே வாய்ப்புள்ள வயதான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கச் செய்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கனவு போலத்தான் இருக்கிறது. ஆனால், அந்தப் படத்தின் அடித்தளமே, பஞ்சு அருணாசலம் அவர்களின் மிக அழுத்தமான கதைதான். ரஜினி கிராமத்தில் வசிக்கும் மிகவும் எளிமையான மனிதர். கடுமையாக உழைக்கும் விவசாயி.  அவர் அம்பிகாவைத் திருமணம் செய்துகொள்ளுகிறார்.  அம்பிகாவுக்கு, ரஜினி வீட்டின் சூழ்நிலை துளிக்கூடப் பிடிக்கவில்லை.  சேற்றில் கால் பதிய நின்று பார்க்கும் விவசாய வேலைகளையும், சாண நாற்றமடிக்கும் வீட்டுச் சூழ்நிலையையும் அவர் வெறுக்கிறார். அந்த ஊர் பண்ணையாரின் மகனோ நகரத்து சூழ்நிலையில் வசிக்கும் நாகரிகமான இளைஞன். கிராமத்தான் ரஜினியையும், நகரத்து பண்ணையார் மகனையும் அம்பிகாவின் மனசு ஒப்பிட்டுப் பார்த்து, பண்ணையார் மகன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள், ரஜினி உட்பட யாருக்கும் தெரியாமல் பண்ணையார் மகனுடன் புறப்பட்டு நகரத்துக்குச் சென்று விடுகிறார் அம்பிகா.

அம்பிகா, தன் வீட்டுப் படியைத் தாண்டும் காட்சியின்போது, இசைஞானி இளையராஜா ஒரு ரீ ரெக்கார்டிங்  பண்ணி இருப்பார் பாருங்கள்… அபாரம்! திருமணம் என்பதற்கு நம் பாரம்பரியம், பண்பாட்டில் தரப்பட்டுள்ள முக்கியத்துவம் என்ன? அதை எல்லாம் துச்சமாக மதித்து, தூக்கி எறிந்து விட்டு, இந்தப் பெண் படிதாண்டுகிறாளே என்று பார்க்கிறவர்கள் மனதை பதைபதைக்கச் செய்யும் படியாக ராஜா  திருமணத்தின்போது சொல்லப்படும் "மாங்கல்யம் தந்துனானே" என்ற மந்திரத்தை ஒலிக்கச் செய்திருப்பார். அவரது பின்னணி இசை, அந்தக் காட்சிக்கு பெரிய அளவில் வலுசேர்த்தது  என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நகரத்தில் பண்ணையார் மகன் வீட்டுக்கு வந்து சேரும்  அம்பிகாவைப் பார்த்தவுடன் அந்த வீட்டில் வேலைப் பார்க்கிறவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், அவர்கள் எல்லாம், பண்ணையாரின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்; ரஜினினையும், அம்பிகாவையும் நன்றாக அறிந்தவர்கள். அவர்கள் அம்பிகாவின் படி தாண்டிய செயலைத் 'தவறு' என்று விமர்சித்து தங்களுக்குள் பேசிக்கொள்ளுவதை அம்பிகா  கேட்க  நேர்கிறது. தன் தவறு அவருக்குப் புரிகிறது. மனம் பதறுகிறது. பண்ணையார் மகனிடம், "வசதியான நகரத்து வாழ்க்கை மேல் ஆசைப்பட்டு, சஞ்சலமடைந்ததன் காரணமாக நான் வீட்டின் படி தாண்டும்  தவறை செய்துவிட்டேன்; என் தப்பை நான் இப்போது உணர்ந்து விட்டேன். தயவு செய்து என்னை இப்போதே கிராமத்துக்குக் கொண்டுபோய் விட்டு விடுங்கள்" என்று அழுகிறார். அவரும், அம்பிகாவை கிராமத்திற்கு திரும்ப அழைத்துக் கொண்டு  வந்து விட்டுவிடுகிறார்.

கிராமப் பஞ்சாயத்து, அம்பிகாவை பதிமூன்று வருடங்களுக்கு ஊரை விட்டு விலக்கி வைத்து தண்டனை அளிக்கிறது. அம்பிகா ஊருக்கு வெளியில் ஒரு குடிசையில் தனியாக வசிக்கிறார். அம்பிகாவின் தங்கையான ராதாவை ரஜினிக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு நாள் ரஜினி, ராதா தம்பதியின் குழந்தை  அம்பிகாவைப் போய் பார்த்துவிட்டு வந்ததற்காக  குழந்தை  கையில்  சூடு போட்டு விடுவார்  ராதா. அப்போது, ரஜினி, "உங்களுக்கு இடையிலே  ஆயிரம் பிரச்னைகள்  இருக்கலாம்.  அதற்காக, இந்தச் சின்னக் குழந்தைக்கு  நீ சூடு போடறயே! நீ ஒரு மனுஷியா? என்று கோபித்துக் கொண்டு, ராதாவை அடித்து விடுவார். அந்த இடத்தில், 'ரஜினி' என்ற ஆக்‌ஷன் ஹீரோவைப் பார்க்க முடியாது, ஒரு பாசம் பொங்கும் அப்பாவைத்தான் பார்க்கலாம்.

இந்தப் படத்தில் ரஜினி-ராதாவின் மகளாக நடித்த சிறுமிதான், பின்னர் ஏவி.எம்.மின் 'எஜமான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா!  மகளாக நடித்தவர், மனைவியாக நடித்தது பெண்களின் வளர்ச்சி; காலச் சக்கரத்தின் சுழற்சி!

கதையின் இறுதியில், அம்பிகா முதுமை அடைந்த நிலையில், ஒரு நாள் தன்னுடைய  அம்மாவை சந்திக்கும்போது, "நான் வீட்டை விட்டு ஓடிப்போனது தவறுதான். ஆனால், வேறு எந்த தவறும் நிகழாமல், என் தவறை உணர்ந்து திரும்பி வந்த எனக்கு  ஊர் பஞ்சாயத்து  அளித்த தண்டனைப்படி  தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் இன்னும் ரொம்ப நாள் உயிருடன் இருக்க மாட்டேன்.  நான் இறந்தால் ஊரார் என்னை ஒரு அனாதைப் பிணமாக அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால், என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் இருக்கும்போது, நான் அனாதை இல்லை. அது மட்டுமில்லை, என் உயிர் என் உடலை விட்டுப் பிரிவதற்கு முன்னால், அவரை ஒரே ஒரு முறை பார்க்க விரும்புகிறேன்"  என்று தன் அம்மாவிடம் சொல்ல, அவர் அதனை ரஜினியிடம் தெரிவிக்கிறார்.

ரஜினி ஊருக்கு வெளியில் இருக்கும் குடிசைக்குச் சென்று அம்பிகாவை சந்திக்கும்போது, உணர்ச்சிவசப்பட்டு அம்பிகா, ரஜினியின் நிழலைத் தொட்டுக் கும்பிடுவதற்காக  நெருங்கி வருவார். ஆனால், கிட்டே வந்ததும், "சட்டென்று விலகி,"உங்கள் நிழலைத் தொடும் அருகதைகூட எனக்கு இல்லை" என்று கலங்குவார். ரஜினி "தப்பு செய்வது மனிதர்களுக்கு இயற்கைதான்; ஆனால், தப்பை உணர்ந்தவர்களை ஆண்டவன் நிச்சயமாக மன்னிப்பார்" என்று மிகவும் அமைதியாகச் சொல்லுவார். அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவான ரஜினி, அந்தக் காட்சியில் அமைதியே உருவாக நடிப்பதைப் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவருக்கு ஈடு கொடுத்து அம்பிகாவும் நடித்திருப்பார். அந்தக் காட்சி முத்திரை பதித்தது.

அம்பிகா இறந்ததும் ரஜினி, "ஊரே எதிர்த்து நின்றாலும், ஒரு'கணவர்' என்ற முறையில் நான் என்னுடைய கடமையைச் செய்தே தீருவேன்" என்று சொல்லி அம்பிகாவை தானே சுமந்துச் சென்று அடக்கம் செய்துவிட்டு, குடும்பத்துடன் அந்த ஊரை விட்டே சென்று விடுவார்.  ரஜினி படம் என்றால் செமை ஜாலியாகப் படம் பார்த்து ரசிக்கும் ரஜினி ரசிகர்கள், 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தைப் பார்த்துவிட்டு கனத்த மனதுடன் சென்றார்கள் என்பது, இன்றைய காலகட்டத்தில் நம்பமுடியாத உண்மை. படம் பார்த்துவிட்டு  பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் என்றால் அதற்கு ரஜினியின் அழுத்தமான நடிப்புதான் காரணம்.

அம்பிகா, ராதா, டெல்லிகணேஷ், கமலா காமேஷ் என்று அந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர், நடிகையரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து, மிகவும் இயல்பாக நடித்திருப்பார்கள். பாரதிராஜா கொடுக்கும் மண்வாசனையுடன் கலந்த படங்களைப் போல இருப்பதாக பலரும் சொன்னார்கள்.

ரஜினி நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தை நான் இயக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில்தான் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து கமலை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படம்தான் 'சகலகலாவல்லவன்'. ஒரே நாளில் ஒரு  பக்கம் சீரியஸ் ரஜினி, இன்னொரு பக்கம் கமர்ஷியல் கமல்  என்று  நேர் எதிரான கதை அம்சங்கள் கொண்ட இரண்டு  படங்களும் ரிலீஸ் ஆனது.

அந்த அனுபவம் எப்படி இருந்தது…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com