கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம். காஞ்சி மாநகரில் முற்காலத்தில் ஆயிரத்து எட்டு கோயில்கள் இருந்ததாகக் கூறுவர். தற்போது முன்னூறுக்கும் மேற்பட்ட சைவ வைணவத் திருத்தலங்கள் இருந்தாலும் அவற்றில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய முக்கியமான 10 கோயில்களைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ வரதராஜர் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீதேவராஜ ஸ்வாமி திருக்கோயில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நூறு தூண்கள் கொண்ட மண்டபம் விஜயநகர மன்னர்களால் கட்டபட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் வைபவம் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலும் பாண்டவ தூதப் பெருமாள் கோயிலும் யதோத்காரி பெருமாள் கோயிலும் மூன்று பழமையான விஷ்ணு கோவில்களாகும். யதோத்காரி பெருமாள் கோயிலின் கருவறையில் புஜங்க சயனக் கோலத்தில் 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' காட்சி தருகிறார். இக்கோயில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
காஞ்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சக்திபீடங்களுள் ஒன்றான இத்தலம் 'நாபிஸ்தான ஒட்டியானா பீடம்' என்று அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்பாள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.
காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் குமரகோட்டம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை போற்றியே கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் இயற்றினார் என்பது சிறப்பாகும். செவ்வாய் கிழமை மற்றும் கிருத்திகை தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீபாவளிக்கு அடுத்து வரும் கந்த சஷ்டி திருவிழாவும், வைகாசி விசாகமும் பிரசித்திப்பெற்ற விழாக்களாக இங்கு கொண்டாடப்படுகின்றன.
காமாட்சி அம்பாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் மகாவிஷ்ணு பிரமாண்ட வடிவத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலுக்குள் நான்கு திவ்விய தேசங்கள் அமைந்திருப்பது காஞ்சிமாநகருக்கு பெருமை சேர்ப்பதாகும்.
பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள் கோவில் மிக முக்கியமானதாகும். கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் மூலஸ்தானத்தில் காட்சி தருவது வேறு எங்கும் காண முடியாத சிறப்பான அம்சமாகும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயின் இராஜகோபுரம் தென்னிந்தியாவின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் கச்சபேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வடக்கு திசை நோக்கிய ஏழு நிலைகொண்ட ராஜகோபுரம். இரண்டு சிவாலயங்களைக் கொண்ட பெருமையும் காஞ்சி கச்சபேசத்துக்கு உண்டு. இத்திருக்கோயில் சூரியன் வழிபட்ட ஸ்தலம். கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கடைஞாயிறு விழா நடைபெறுகிறது.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 10 அடி உயரம் கொண்டு சிறப்புடன் திகழ்கிறது. இக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் ராஜசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இக்கோயில் தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்பட்டுவருகிறது.
எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். வைகுண்டநாதர் (பரமபதநாதர்) மற்றும் வைகுண்டவல்லித் தாயார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் விமானம் மூன்று அடுக்குகளாக அமையப்பெற்றுள்ளது. மிகவும் கலைநயமிக்க ஒரு கோயிலாக வைகுண்டப் பெருமாள் கோயில் காண்போரை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மேற்காணும் கோயில்களைத் தவிர இன்னும் ஏராளமான கோயில்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளன. முடிந்தால் அக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து பலனடையுங்கள்.