சபரிமலை ஐயப்பன் சிலையை யார் செய்ய வேண்டும்? சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது தெரியுமா?

Sabarimala Ayyappan Temple
Sabarimala Ayyappan Temple
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள், கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தெட்டு நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டுத் திரும்பும் வழக்கம் இருக்கிறது. இவ்வேளையில், நாமும் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த நான்கு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாமா?

ஐயப்பன் சிலை

சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை 1950 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும்? என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் பி. டி. ராஜன் ஆகியோர் பெயர்கள் வந்தன. அவர்களிருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கச் செய்து சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.

ஹரிவராசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு வேளையில், நடையடைப்புக்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. சபரிமலையில் இறைவன் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சந்நிதியில் சுவாமி அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோயில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கோயில் நடையில் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடல் ஒலிபரப்பப் படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். 

இருமுடி வண்ணங்கள்

சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இறைவனுக்குப் படைப்பதற்கான ‎பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்தும் , பருத்தித் துணியில், ‎கைகளால் தைக்கப் பெற்ற இரு அறைகள் கொண்ட பையினை பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளையும்  பயன்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்!
Sabarimala Ayyappan Temple

மண்டல விரதம்

சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாக இருக்கிறது. மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர். அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த நாட்கள் முழுவதும் அமைந்தன. கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com