

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரண் மாவட்டம், கைதவாலியாவில் உள்ள விராட் ராமாயணக் கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் தான் உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக சஹஸ்ரலிங்கம் (Sahasralinga) கருதப்படுகிறது.
ஜனவரி 17, 2026 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம், தமிழகத்தின் மகாபலிபுரத்தில் 33 அடி உயரம், 33 அடி சுற்றளவு மற்றும் சுமார் 210 டன் எடையுடன் ஒரே கருங்கல்லால் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டது.
இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வர சிவபார்வதி கோவிலில் உள்ள 111.2 அடி உயரமான கான்கிரீட் சிவலிங்கம் தான் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பிற உலக சாதனைப் புத்தகங்களில் உலகின் மிக உயரமான சிவலிங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒற்றைக்கல் சிவலிங்கம், கிரானைட்டில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கம் என்ற பெருமையைப் பெறுகிறது.
மாமல்லபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் சேதுபதி, சுமார் 45 ஆண்டுகள் சிற்பக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர். இவரிடம், பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கிழக்குச் சம்பாரன் மாவட்டக் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பிரம்மாண்டமான சிவலிங்கம் ஒன்றைச் செதுக்க ஒப்பந்தம் தரப்பட்டது. இதற்காக, கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் உள்ள ஒரு குவாரியிலிருந்து 210 டன் எடைகொண்ட கருங்கல் கொண்டு வரப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக லோகநாதன் சேதுபதி தலைமையில், 30 சிற்பிகள் இரவு-பகலாக உழைத்து இந்தச் சிவலிங்கத்தை வடிவமைத்தனர். இதன் சிறப்பம்சமாக, சிவலிங்கத்தின் மேல்புறத்தில் 14 அடுக்குகளாக, ஒரு அடுக்கிற்கு 72 லிங்கங்கள் வீதம் மொத்தம் 1008 சிறிய சிவலிங்கங்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
சிற்பப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு, ராட்சத கிரேன்களின் உதவியுடன் 130 டயர்கள் கொண்ட மெகா டிரெய்லர் லாரியில் சிலை ஏற்றப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக, 20 நாட்களுக்கும் மேலாகப் பயணித்து கடந்த டிசம்பர் மாதம் இச்சிலை பீகாரைச் சென்றடைந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இரவு நேரங்களில் மட்டுமே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. செல்லும் வழியெங்கும் லாரி நின்ற இடங்களிலெல்லாம் இந்தப் பிரம்மாண்ட சிவலிங்கத்தைத் தரிசிக்கப் பெருந்திரளான மக்கள் கூடினர்.
இந்நிலையில், வேத மந்திரங்கள் முழங்க 2026, ஜனவரி 17-ஆம் தேதி, மோதிஹரியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயணக் கோவிலில் இந்தச் சிவலிங்கம் நிறுவப்பட்டது. ஹரித்வார், பிரயாக்ராஜ், கங்கோத்ரி, கைலாஷ் மானசரோவர் மற்றும் சோன்பூர் ஆகிய புனிதத் தலங்களிலிருந்து ஐந்து நதிகளின் புனித நீர், இந்தச் சிவலிங்கத்தின் அபிஷேகத்திற்காகக் கொண்டுவரப்பட்டது.
‘சஹஸ்ரலிங்கம்’ என்று அழைக்கப்படும் இச்சிவலிங்கத்தில், ஒரே கல்லில் 1,008 சிறிய லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒரு லிங்கத்திற்கு நீர் அபிஷேகம் செய்தால், 1,008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தரைமட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள கோபுரத்தின் மீது இந்தச் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 60 அடிக்கும் மேல் இருக்கும். இரண்டு மிகப்பெரிய பாரந்தூக்கிகளின் (Cranes) உதவியுடன், சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பொறியாளர்கள் குழுவினர் இதனை வெற்றிகரமாக நிறுவினர்.
முன்னாள் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியும், மஹாவீர் அறக்கட்டளையின் முன்னாள் செயலாளருமான மறைந்த ஆச்சார்யா குணால் கிஷோரின் கனவுத் திட்டமே இந்த விராட் ராமாயணக் கோவிலாகும். 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் வளாகத்தில், அவரது மகன் சயான் குணால் தற்போது ஆகம விதிகளின்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இக்கோவில் 2,800 அடி நீளமும், 1,400 அடி அகலமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்திக்கு அடுத்தபடியாக இது மிக முக்கிய ஆன்மீகத் தலமாக மாறும் என்றும், இதன் மூலம் உள்ளூர் பகுதியில் விமான நிலையம், நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளையால் கட்டப்பட்டு வரும் ‘விராட் ராமாயணக் கோவிலில்’ மொத்தம் 22 சன்னதிகள், 18 கோபுரங்கள் மற்றும் 270 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான பிரதான கோபுரம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
இக்கோவில் சன்னதிகளின் சுவர்களில், புகழ்பெற்ற ராமாயணக் காவியத்தைச் சித்தரிக்கும் கலைநயமிக்க காட்சிகள் செதுக்கப்படும். ஏற்கனவே கணேஷ் ஸ்தல், சிங் துவார், நந்தி என அழைக்கப்படும் கோவிலின் நுழைவாயில்கள் மற்றும் கருவறைத் தூண்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தப் பிரம்மாண்டமான சஹஸ்ரலிங்கம் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.