விதியை மாற்றும் எட்டாம் படைவீடு! சென்னையில் இப்படி ஒரு அதிசய முருகன் கோவிலா?

முருகன்
Triplicane Murugan Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on
Deepam strip
Deepam strip

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் எட்டாம் படைவீடு. விதியை வெல்ல தரிசிக்க வேண்டிய ஆலயம் இது. குழந்தை பாக்கியம் அருளும் முருகப்பெருமானை வைகாசி விசாகத்தன்று குரு ஓரையில் குழந்தை பேறு வேண்டி இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள இருசப்பத் தெருவில், என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருப்போரூருக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இங்கு தங்கியிருந்து செல்லும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. இங்குள்ள சன்னிதிகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கட்டுமானத்திற்கான நிலத்தை பச்சையம்மாள் என்ற பெண் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது என்பதும், ஏழாம் படைவீடாக மருதமலை முருகன் கோவிலை குறிப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளது. மிகவும் பழமையான இந்த முருகன் கோவில் எட்டாம் படைவீடாக போற்றி வணங்கப்படுகிறது.

இக்கோவிலில் முதல் உள்பிரகாரத்தில் பிள்ளையார், வடக்கு முகமாக ஸ்ரீ கல்யாண கனகதுர்க்கை, சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னியர்கள், தெற்கு முகமாக தக்ஷிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மேற்கு பார்த்து நின்றகோலத்தில் அருள் புரிகிறார்.

இதையும் படியுங்கள்:
அன்பும் அமைதியும் அருளும் அறுபடை வீரன்: தைப்பூசப் பெருவிழா!
முருகன்

ஆலயத்தின் ஈசானிய மூலையில் கும்பேஸ்வரரும், அக்னி மூலையில் மங்களாம்பிகையும், வாயு மூலையில் நவகிரக சந்நிதிகளும், அதையடுத்து பெரிய அரச மரமும் அமைந்துள்ளது.

எட்டாம் படைவீடான இக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். இக்கோவிலில் உள்ள மயில் மீது அமர்ந்த முருகனின் கல்வெட்டு சென்னையில் கந்தசுவாமி கோவில், திருவல்லிக்கேணி முருகன் கோவில் மற்றும் திருப்போரூர் முருகன் கோவில்களில் மட்டுமே அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருப்போரூருக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இந்த முருகன் கோவிலில் தங்கியிருந்து செல்லும் அன்ன சத்திரமாக விளங்கி வந்தது.

இங்கு ஐப்பசி மாதம் சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அன்று அருகில் உள்ள துலுக்காணத்தம்மன் கோவிலில் இருந்து முருகப்பெருமானுக்கு தாய் வீட்டு சீர்வரிசை வருவது சிறப்பம்சமாகும்.

பங்குனி உத்திர திருவிழா இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். 6 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில், ஹோமம், பக்தி இசை, நாதஸ்வர கச்சேரி, காவடியாட்டம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் போன்றவை வெகு விமர்சையாக நடைபெறும். தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்தெல்லாம் வெறும் காலுடன் பக்தர்கள் தங்கள் தோள்களில் காவடி சுமந்து வருகிறார்கள்.

புராணத்தின் படி பழனியின் இரண்டு மலைகளையும் அவற்றின் தற்போதைய இடத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படும் இடும்பனின் செயலை நினைவுகூரும் விதமாக காவடிகள் எடுக்கப்படுகின்றன. சிலர் அபிஷேகம் செய்வதற்காக தீர்த்த காவடி எனப்படும் புனித நீர் நிறைந்த பானைகளைக் கொண்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த முருகனின் பிரசாதம் பற்றித் தெரியுமா?
முருகன்

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும், திருமணம் ஆகாத கன்னியர்களுக்கு திருமண பாக்கியமும், குழந்தைப்பேறும் கிடைக்கச் செய்யும் இந்த முருகனை, எண்ணியது ஈடேறியவுடன் சஷ்டி திருவிழாவில், பங்குனி உத்திர திருவிழாவில் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

இங்கு வருடாந்திர விழாக்களாக கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாகம், சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி, பங்குனி உத்திரப் பெருவிழா போன்றவை வெகு விமர்சையாக நடைபெறும்.

கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com