
கௌரி வழிபாடு என்பது பல்வேறு கௌரி வடிவங்களை போற்றி வழிபடுவதாகும். கௌரி விரதங்கள் என்பவை சக்தியை கௌரி என்ற வடிவத்தில் விரதம் இருந்து பூஜிப்பதாகும். இந்த கௌரி விரதங்களில் பல்வேறு விரத தினங்கள் காணப்படுகின்றன. இது பொதுவாக இல்லற செழிப்பிற்காகவும், செல்வ வளத்திற்காகவும், கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் செய்யப்படுகிறது.
பிருகத் கௌரி விரதம்:
பிருகத் கௌரி விரதம் என்பது சாக்த தெய்வமான அம்பிகையை கௌரி வடிவில் விரதமிருந்து வணங்கும் விரதங்களில் ஒன்றாகும். பாத்ரபத மாத தேய்பிறை திரிதியையில் விரதம் இருந்து உமை அம்பிகையை வணங்குவதாகும். இந்த விரதம் கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், குடும்ப மகிழ்ச்சிக்காகவும் அனுசரிக்கப்படுகிறது. இது கேதார கௌரி விரதத்தின் ஒரு வடிவமாகும்.
கதலி கௌரி விரதம்:
வாழை மரத்தினடியில் உமை அம்பிகையான கௌரியை சிவபெருமானுடன் இணைத்து வணங்கும் ஒரு கௌரி விரதம் ஆகும். இது குடும்ப ஒற்றுமைக்காகவும், திருமண தடைகள் நீங்கவும், மன ஒற்றுமைக்காகவும் செய்யப்படுகிறது. இந்த விரதத்தை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்வது சிறப்பு. வாழையடி வாழையாக குலம் தழைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை திரிதியை அல்லது அதையொட்டி வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கௌரி விரத வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
யோக கௌரி விரதம்:
பாத்ரபத மாதத்து பௌர்ணமி நாளில் விரதம் இருந்து பார்வதியை யோக கௌரியாக வணங்கி வழிபடும் விரதம் இது. சித்த யோகங்களை அருளும் யோகாம்பிகையாக விளங்கும் கௌரி அன்னையை வழிபடும் விரதம் இது. சித்தர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானுடன் வீற்றிருக்கும் சித்த யோகேஸ்வரி பீடத்தில் அன்னை யோகேஸ்வரியாக காசியில் அருள்புரியும் வடிவத்தை குறிப்பிடுகிறது. இந்த யோக கௌரி வடிவம், அன்னை யோக வித்தைகளின் தலைவியாகவும், சித்தர்களுக்கு யோகங்களை அள்ளி வழங்குபவளாகவும் வணங்கப்படுகிறாள்.
பங்குனி வளர்பிறை திருதியை தினத்தில் கௌரி தேவியான யோக கௌரியை வழிபட வீட்டில் தனம், தானியம் போன்ற அனைத்து செல்வங்களும் நிறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அமிர்த கௌரி விரதம்:
அமிர்தம் என்பது உயிர்களின் ஆயுளை நீடிக்கும் தேவாமிர்தத்தைக் குறிக்கும். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவியாக இருப்பதால் பார்வதிக்கு 'அமிர்த கௌரி' என்று பெயர். ஆஷாட மாதத்தில் அமிர்த கௌரி விரதம் வரும். இந்நாளில் பார்வதி தேவியை விரதமிருந்து வழிபட ஆயுள் அதாவது வாழ்நாள் கூடும் என்றும், அமிர்தம் போல் வாழ்க்கை செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
அமிர்த கௌரி சிவபெருமானின் தேவியான பார்வதியின் 16 வடிவங்களில் ஒன்றாகும். இந்த வடிவம் உயிர்களின் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை கொண்டது. எனவே அமிர்த கௌரியை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுளையும், உன்னதமான ஞானத்தையும், கல்வியையும் பெற முடியும். கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் 'ஞான பஞ்சமி' அல்லது 'கௌரி பஞ்சமி' என்று அழைக்கப்படும் நாளில் வழிபடப்படுகிறது.
சொர்ண சோடச கௌரி விரதம்:
பதினாறு வகையான வடிவங்களை உடைய உமாதேவியை பிரதிஷ்டை செய்து வழிபாடும், விரதமும் இருக்கும் நாளாகும். இந்த விரதத்தை பின்பற்றுவதன் மூலம் வறுமை, தோஷங்கள் நீங்கி, செல்வம், வம்சம், தானியம் பெருகும் என்று கூறப்படுகிறது. பங்குனி மாத வளர்பிறையின் திருதியையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பொன்மயமாகத் தோன்றிய தேவி என்பதை குறிக்கும் வகையில் சொர்ணகௌரி என்று அழைக்கப்படுகிறாள்.
ஷோடச கௌரி:
த்ரைலோக்ய மோகன கௌரி, சுயம்வர கௌரி, கஜகௌரி, கீர்த்தி கௌரி, சத்யவீர கௌரி, வரதான கௌரி, ஸ்வர்ண கௌரி, சாம்ராஜ்ய கௌரி, அசோக கௌரி, மனோரத பூர்த்தி கௌரி மற்றும் பல வடிவங்கள் இதில் அடங்கும்.
பணில கௌரி விரதம்:
கருட பஞ்சமி நாளில் கௌரியை வழிபடும் விரதம் பணில கௌரி விரதம் எனப்படும். இந்த விரதத்தை தொடர்ந்து பத்து வருடங்கள் கடைப்பிடித்தால் நம்முடைய எல்லா வகையான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வாழை இலையின் மீது அரிசியைப் பரப்பி, அதன் நடுவில் வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆன பாம்பின் உருவத்தை வைப்பார்கள். கௌரியை மஞ்சளில் பிடித்து வைத்து பாம்புடன் சேர்த்து வழிபடும் இந்த பணில கௌரி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கேதார கௌரி விரதம்:
'கேதாரம்' என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் கேதார கௌரி விரதம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த விரதத்தினை பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் வேண்டியும், சுமங்கலிகள் தன் கணவருடன் இணை பிரியாது இருக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.